(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.)
 122.    
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன 
    
குண்டுநீ ராம்பலுங் கூம்பின வினியே 
    
வந்தன்று வாழியோ மாலை 
    
ஒருதா னன்றே கங்குலு முடைத்தே. 

என்பது தலைமகள் பொழுதுகண்டு அழிந்தது.

ஓரம்போகியார் (பி-ம். ஓரம் போதியார்.)

     (பி-ம்.) 1. ‘பைங்கார்க்’.

     (ப-ரை.) பசு கால் கொக்கின் - பசிய கால்களையுடைய கொக்கினது, புல்புறத்து அன்ன - புல்லிய புறத்தைப் போன்ற, குண்டு நீர் ஆம்பலும் கூம்பின - ஆழமாகிய நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன; இனி - இப்பொழுது, மாலை வந்தன்று - மாலைக்காலம் வந்தது; வாழி - அது வாழ்வதாக! ஒரு தான் அன்று - இங்ஙனம் வந்தது இம்மாலையாகிய தான் ஒன்று மட்டும் அன்று; கங்குலும் உடைத்து - தன் பின் வரும் யாமத்தையும் உடையது; இனி என் செய்வேன்!

     (முடிபு) ஆம்பலுங் கூம்பின; இனி மாலை வந்தன்று; ஒரு தான் அன்று; கங்குலும் உடைத்து.

     (கருத்து) இராக்காலம் வந்து விட்டது; இனி யான் மிக்க துன்பத்தை அடைவேன்.

     (வி-ரை.) ஆம்பலும் : உம்மை, உயர்வு சிறப்பு. ஆம்பற் பூக் குவி வதனால் மாலை வந்ததைத் தலைவி அறிந்தாள். நீர்வளமின்றிக் குவியாது மாலைக்காலம் வந்தமையாற் குவிந்தனவென்பாள், ‘குண்டுநீராம்பல்’ எனச் சிறப்பித்தாள். வாழியோ : ஓகாரம் அசைநிலை. மாலையை வாழ்த்தியது குறிப்புமொழி; தனக்குத் துன்பத்தைத் தரும் அது வாழ்தற்குரியதன்று என்பது தலைவியின் உள்ளக் கிடக்கை; “செல்வலத்தை சிறக்க நின்னாளே” (புறநா. 196:15) என்னும் ஆவூர் மூலங்கிழார் செய்யுட் பகுதியிற், ‘சிறக்க நின்னாளே’ என்று வாழ்த்தியதைக் குறிப்பு மொழியென்று அதன் உரையாசிரியர் கூறியது காண்க; இங்ஙனம் வரும் குறிப்பு மொழிகளை,

     “விடுத்தனன் வெலீயர்நின் வேலே” (புறநா. 202:17),

     “வானோர் பெருமிதம் வாழியே” (தக்க. 562) என்பவற்றிற் காணலாம்.

     ஏகாரங்கள், அசைநிலை. கங்குலும் : உம்மை, இறந்தது தழீஇயது.

     மாலை வந்ததனால் துன்புற்ற தலைவி, “இம்மாலையோடு என்துயர் ஒழிந்திலது; இதன்பின் வருவது கங்குல்; அதுவும் என்துயரை மிகுவிப்பதாகும்” என வருந்தினாள்.

     மாலை - இரவின் முதல் யாமம்; கங்குல் - இடையாமம். இவ்விரண் டையும் தலைவி அஞ்சுதல், இந்நூல், 387-ஆம் செய்யுளால் நன்கு விளங்கும்.

     மாலையைத் தொடர்ந்து கங்குல் வருதலின் அக்கங்குலை மாலை உடையதென்று கூறினாள்.

     இவற்றால் வரும் துயரை எங்ஙனம் ஆற்றுவேன் என்பது எச்சம்.

     ஒப்புமைப் பகுதி 1. கொக்கின் புறம் ஆம்பலுக்கு : குறுந். 117:1, ஒப்பு.

(122)