ஒக்கூர் மாசாத்தி. (பி-ம்.) 2. ‘ரோவென்ப’.
(ப-ரை.) தோழி---, இளமை பாரார் - இளமையது அருமையைப் பாராராகி, வளம் நசைஇ சென்றோர் - பொருளை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர், இவணும் வாரார் - இவ்விடத்தும் இன்னும் மீண்டு வந்திலர்; எவணரோ - எவ்விடத்தில் உள்ளாரோ? என - என்று யாம் எண்ணியிருப்ப, நறு தண்கார் - நறிய தண்ணிய கார் காலம், பெயல் புறந்தந்த - மழையாற் பாதுகாக்கப்பட்ட, பூ கொடி முல்லை - பூவையுடைய முல்லைக் கொடியினது, தொகு முகை இலங்கு எயிறு ஆக - தொக்க முகைகளை விளங்குகின்ற தன்பற்களாகக் கொண்டு, நகும் - நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.
(முடிபு) தோழி, சென்றார் எவணரோ என, கார் நகும்.
(கருத்து) கார்காலம் வந்துவிட்டது; தலைவர் வந்திலர்.
(வி-ரை.) பொருள் தேடச் செல்வார்க்கு இளமையது அருமை அம் முயற்சிக்குத் தடைசெய்யுமாதலின், வளம் விரும்பிச்சென்றார். இளமை பாராராயின ரென்றாள்; இளமையதருமையை எண்ணியிருப்பின் செல்லாரென்று கொள்க; ‘வாழ்க்கைநாள் சிலவாதல் ஏதுவாகப் பொருள் செய்தல் குறித்தாரை இளமையது அருமை இன்பத்தின்கண் ஈர்த்து ஒன்றாமை’ (தொல்.அகத்.41, ந.) என்பதைப் பார்க்க. பெயலும் முல்லை முகையும் கார்காலத்தை அறிவுறுத்துவன. பூ: முல்லையாகிய முதலுக்கு அடை. முகை எயிறாக என்றதற்கேற்பக் காராகிய மகள் என்று உருவத்தை நிரப்புக; இஃது ஏகதேச உருவகம். நகுமென்றது, “நும் தலைவர் தாம் கூறிய பருவம் வந்த பின்பும் வாராததுகண்டு நீவிர் இன்னும் உயிரோடு உள்ளீரோ?” என்னும் எள்ளல் காரணமாக நகைக்கு மென்றவாறு.
தொகுமுகையாகலின் பல்வரிசையை ஒத்தன. முல்லைமலரால் நறுமையும் பெயலால் தண்மையும் உடைமையின் நறுந்தண் காரென்றாள்; “நறுந்தண்ணீரள்” என்று மகளிர் இயல்பைச் சிறப்பிக்கும் மரபுபற்றி மகளாக உருவகம் செய்த காரையும் இங்ஙனம் கூறினாள்.
இவணும்: உம்மை உயர்வு சிறப்பு. ஓ:ஐயம். ஏகாரங்கள் அசைநிலை.
எவணரோ என நகுமென்று கூட்டிப் பொருள் கொள்ளுதலும் ஒன்று?
ஒப்புமைப் பகுதி 1. இளமைபாராது பொருளுக்குப் பிரிதல்: குறுந். 151:6; “இறந்துசெய் பொருளு மின்பந் தருமெனின், இளமையிற் சிறந்த வளமையு மில்லை, இளமை கழிந்த பின்றை வளமை, காமந் தருதலு மின்றே” (நற். 126:7-10.); “வளமையா னாகும் பொருளிது வென்பாய், இளமையுங் காமமு நின்பாணி நில்லா”, “இளமையுந் தருவதோ விறந்த பின்னே” (கலித். 12:11-2, 15:26.)
3. பெயல்புறந்த முல்லை: “பெய்த புலத்துப் பூத்த முல்லை” (குறுந். 323:4.)
3-4 முல்லைமுகைக்கு எயிறு: (குறுந். 186:2-3); “மாதரார் முறுவல்போன் மணமௌவன் முகையூழ்ப்ப” (கலித். 27:4.)
3-5 முல்லைத்தொகுதி நகையைக் காட்டுதல்: குறுந். 162:3-5; “தீந்தள வுகள்செய்யுஞ் சிறுகுறு நகைகாணாய்” (கம்ப. வனம்புகு. 9); “வேள்சரத் துடைகுநர் கோல நோக்கி, இருண்மகள் கொண்ட குறு நகை போல, முல்லையு மௌவலு முருகுயிர்த் தவிழ” (கல். ‘கோடிய கோலினன்’.)
கார்ப் பருவத்தில் முல்லை முகைத்தல் : குறுந். 108, 162, 186, 188, 220, 221, 358, 382.
(126)