(தலைவன் தலைவியின்பால் பாணனைத் தூதாக விட்டுத் தான் பின் நிற்பத் தோழி அவனை நோக்கி, “நின்பாணன் பொய்யனாயினன்; அதனால் பாணர் யாவரும் பொய்யர் போலுமென எண்ணுவே மாயினேம்” என்று கூறி வாயில் மறுத்தது.)
 127.    
குருகுகொளக் குளித்த கெண்டை யயல 
    
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம் 
    
கழனியம் படப்பைக் காஞ்சி யூர 
    
ஒருநின் பாணன் பொய்ய னாக 
5
உள்ள பாண ரெல்லாம் 
    
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே. 

என்பது பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது.

ஓரம் போகியார் (பி-ம். ஓரம் போதியார்.)

     (பி-ம்.) 2. ‘வெருளும்’; 3. ‘கழனியபடப்பை’; 6. ‘நின்ன கன்றிசி’.

     (ப-ரை.) குருகு கொள - நாரை கவர்ந்து கொள்ள, குளித்த - அதன் வாயினின்று தப்பி நீருட் குளித்த, கெண்டை - கெண்டை மீன், பின்பு, அயலது - அயலதாகிய, உரு கெழு தாமரை வான் முகை - நிறம் பொருந்திய தாமரையின் வெள்ளிய அரும்பை, வெரூஉம் - அஞ்சும், கழனி படப்பை - வயற் பக்கங்களையுடைய, காஞ்சி ஊர - காஞ்சி மரங்கள் வளர்ந்த ஊரையுடைய தலைவ, நின் ஒரு பாணன் பொய்யன் ஆக - நின்பாணன் ஒருவன் பொய் பேசுவா னாயினமையால், உள்ள பாணர் எல்லாம் - மற்றுள்ள பாணர்கள் யாவரும், நீ அகன்றிசினோர்க்கு - நீ அகன்றதனால் தனித்திருக்கும் மகளிருக்கு, கள்வர் போல்வர் - பொய்யரைப் போலத் தோற்றுவர்.

     (முடிபு) ஊர, நின் பாணன் பொய்யனாக, நீ அகன்றிசினோர்க்கு உள்ள பாணரெல்லாம் கள்வர் போல்வர்.

     (கருத்து) நின் தூதுவனாகிய பாணன் பொய்யன்.

     (வி-ரை.) குருகு - கொக்குமாம். குளித்தல் - மறைதல். உரு - அச்ச முமாம். தாமரை - இங்கே வெண்டாமரை.

     நாரையாற் கௌவப்பட்டுத் தப்பி நீருட் குளித்த கெண்டை மீண்டும் நீரின்மேல் எழும்போது தாமரை முகையை அந்நாரையென்றே கருதியது; “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழமொழி இங்கே நினைத்தற்குரியது.

     கழனியம் படப்பை: அம் சாரியை.

     “தலைவன் நினை மறப்பானல்லன்; அவர் தூய ஒழுக்கமுடையவன்” என்று அப்பாணன் தலைவிபாற் கூறிய பொய்க் கூற்றுக்களைக் கேட்ட வளாதலின் ஒரு நின்பாணன் பொய்யனாக வென்றாள். நின்பாணன் கூறுவனவெல்லாம் பொய்யென்னும் தன் கருத்தையே சமற்காரமாகப் புலப்படுத்தி வாயில் மறுத்தாள்.

     நீ அகன்றிசினோ ரென்றது நீ பல மகளிரோடு நட்புடையாயென்னும் கருத்தை உள்ளடக்கியது. அகன்றிசினோர்க்குக் கள்வர் போல்வரென்று பொதுப்படக் கூறினாளேனும், கருதியது தலைவியையே யென்று கொள்க.

     குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை யில்லாததுமாகிய தாமரை முகையையும் அஞ்சினாற்போல, நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனரென்பது குறிப்பு.

     ஏகாரம் ஈற்றசை.

     ஒப்புமைப் பகுதி 1-2. மீன் தனக்கு அச்சத்தைத் தரும் பொருளைத் தோற்றத்தால் ஒக்கும் பிற பொருள்களையும் அஞ்சுதல்: “கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த, நெடுங்கழைத் தூண்டினடுங்க நாண் கொளீஇக், கொடுவாயிரும்பின் மடிதலைப் புலம்பப், பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை, நீர்நணிப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்” (பெரும் பாண். 284-8); “கொடுங்கழி மருங்கி னிரைவேட்டெழுந்த, கருங்காற் குருகின் கோளுய்ந்து போகிய, முடங்குபுற விறவின் மோவா யேற்றை, எறிதிரை தொகுத்த வெக்கர் நெடுங்கோட்டுத், துறுகடற்றலைய தோடுபொதி தாழை, வண்டுபடு வான்போது வெரூஉம்” (நற். 211:3-8, தே. திருவெண் காடு. திருஞா. 4. நற். 189:7-10.)

(127)