பரணர். (பி-ம்.) 2. ‘திண்டோட்’.
(ப-ரை.) நெஞ்சே---, குணக்கு கடல் திரையது - கீழ் கடல் அலைக்கு அருகிலுள்ளதாகிய, பறைதபு நாரை - முதுமையால் சிறகுகள் நீங்கப்பெற்ற நாரை, திண் தேர் பொறையன் - திண்மையாகிய தேரையுடைய சேரனது, தொண்டி முன்துறை - மேல்கடற் கரையிலமைந்த தொண்டி யென்னும் பட்டினத்தின் கடற்றுறையின் முன் உள்ள, அயிரை அரு இரைக்கு - அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும்பொருட்டு, அணவந்தாங்கு - தலையை மேலே எடுத்தாற்போல, சேயள் அரியோள் - நெடுந்தூரத்திலுள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை, படர்தி - பெறுவதற்கு நினைந்தாய்; நோயை - நீ வருத்தத்தையுடையை, நோய் பாலோய் - துன்பத்துக்குக் காரணமாகிய ஊழ்வினையையுடையை.
(முடிபு) நெஞ்சே, அரியோட் படர்தி; நோயை; நோய்ப்பாலோய்.
(கருத்து) இனித் தலைவி நாம் பெறற்கரியள்.
(வி-ரை.) தலைவன் அல்லகுறிப்பட்டு மீள்பவனாதலின், ‘இனித் தலைவியைப் பெறுதல் அரிது போலும்!’ என்று எண்ணிக் காமமயக்கத்தால் நெஞ்சை நோக்கிக் கூறுவானாகி, “நீ கிட்டுதற்கரிய தொன்றை அவாவி வருத்தமுறுகின்றாய்; உன் தலையெழுத்து இதுதான்” என்று இடித்துக் கூறியது இது.
கீழ்கடலிலுள்ள நாரைக்கு மேல்கடலிலுள்ள அயிரை தூரியதும் பெறற்கரியதுமாதலின் அதனை உவமை கூறினான். மேல் கடற்குப் பறந்து சென்று பெறும் நிலையிலதென்பான் பறைதபு நாரையென்றான்.
திண்டேர் - போர்க்களத்தில் மேடும் பள்ளமுமாய இடங்களில் ஓடினும் சிதைவின்றித் திண்ணியதாகுந் தேர். முன் துறை - துறைமுன்; பின்முன்னாகத் தொக்கது. அணவருதல் - இரையைப் பெறும் ஆர்வத்தோடு தலையை மேலெடுத்தல். தான் சென்று அடைய முடியாத இடத்தினளாதலின் சேயளென்றும், அவளாக வந்து தன்னை எதிர்ப்பட்டு எளியளா காமையின் அரிய ளென்றும் கூறினான். பால் - ஊழ்வினை.
நோய்ப்பாலோயே: ஏகாரம் தேற்றம்; அசைநிலையுமாம்.
இரண்டாவது கருத்து: தான் முன் உண்ட பழக்கத்தால் அயிரைமீனுக்கு நாரை அணவந்ததாயினும் தானும் பறத்தற் கருவியாகிய சிறகினை இழப்ப அயிரையும் நெடுந்தூரத்திலுண்மையின் அது பெறற்கரிதாயினதுபோல, முன் பயின்ற பழக்கத்தால் நீ இவளோடு அளவளாவக் கருதினும் நான் இவளது ஊடலை நீக்கும் பழைய வலியிழந்தேன்; இவளும் நெஞ்சால் எனக்குச் சேயளாயினளாதலின் இவள் பெறற்கரியள் என்று உவமையை விரித்துக் கொள்க.
மேற்கோளாட்சி 4. பிறன்கட் டோன்றிய வருத்தம் வந்தது (தொல். மெய்ப். 6, பேர்..)
மு. அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்து செல்லுந் தலைவன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது (இறை. 17); நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையின் பிறன்கட்டோன்றிய பிணி (தொல். மெய்ப்.6, பேர்; இ.வி.578); புணர்ந்து பிரிந்துழி அன்பு மிகுதியால் தான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத்திடைக் கண்டு, இனிக் கூடுதலரிதெனத்தலைவன் இரங்கியது (தொல். களவு. 11, ந.); அல்ல குறிப்பட்டுத் தலைவன் புலந்து போகியது (நம்பி. 160); இரவுக்குறி கழிதல் (களவியற்..)
ஒப்புமைப் பகுதி 1. பறைதபு நாரை: குறுந். 125:5, ஒப்பு.
2. தொண்டி : குறுந். 210:2, 238:4.
3. அயிரை : குறுந். 178:1.
அணவருதல்: குறுந். 64:3, ஒப்பு; பெருங். 1.54:42.
1-3. நாரைக்கு அயிரை உணவாதல்: “நாரை நிரைபெயர்ந்தயிரை யாரும்” (குறுந். 166:2); “அன்றிலு நாரையுந் துன்றுபு கெழீஇ ... அயிரையும் பிறவு மல்கிரை யமைத்து” (பெருங். 1.51:71-3.)
மு.அகநா. 212;
| “வடமலை மிசையோன் கண்ணில் முடவன் |
| தென்றிசை யெல்லை விண்புகு பொதியிற் |
| சூருடை நெடுஞ்சுனை நீர்வேட் டாங்கு |
| வருந்தினை வாழியெ னுள்ளஞ் சாரற் |
| பொருது புறங்கண்ட பூநுத லொருத்தல் |
| சிலம்பிழி பொழுதி னத்தம் பெயரிய |
| வல்லிய மடுக்கத் தொடுங்கு நல்வரைக் |
| கல்லக வெற்பன் மடமகள் |
| மெல்லியல் வனமுலைத் துயிலுற் றோயே”(தொல்.களவு.43,ந.மேற்.) |
(128)