(தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக் கண்ட பாங்கன், “ நினக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக் காரணம் யாது?” என்றவழி, “ஒரு மங்கையது நுதல் என் உள்ளத்தைப் பிணித்தது” என்று தலைவன் கூறியது.)
 129.    
எலுவ சிறாஅ ரேமுறு நண்ப 
    
புலவர் தோழ கேளா யத்தை 
    
மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் 
    
பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் 
5
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் 
    
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே. 

என்பது தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

கோப்பெருஞ் சோழன்.

     (பி-ம்.) 1. ‘ரெமமுறு’, ‘ரேமமுறு’; 4. ‘பகுவெண்’; 5. ‘விளங்குந் திருநுதல்’.

     (ப-ரை.) எலுவ- எம் நண்ப, சிறாஅர் ஏமுறு நண்ப - இளைஞர் இன்புறுதற்குக் காரணமாகிய நட்பையுடையோய், புலவர் தோழ - அறிவுடையாருக்குத் தோழ, கேளாய் - கேட்பாயாக: மா கடல் நடுவண் -பெரிய கடலின் நடுவில், எண்ணாள் பக்கத்து பசு வெண் திங்கள் - எட்டாந் திதிக்குரிய இளைய வெள்ளிய திங்கள், தோன்றி யாங்கு - தோன்றியதைப் போல, கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்--ஒரு மகளின் கூந்தலுக்கு அயலில் விளங்குகின்ற சிறிய நெற்றி, புது கோள் யானையின் - புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல, எம் பிணித்தற்று - எம்மைப் பிணித்தது.

     (முடிபு) எலுவ, நண்ப, தோழ, கேளாய்: சிறுநுதல் எம்மைப் பிணித்தற்று.

     (கருத்து) ஓர் அழகிய மகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தாள்.

     (வி-ரை.) எலுவ வென்றது தனக்குத் தோழமையுடைமையைச் சுட்டியது. தான் தலைவியைப் பாங்கனது உதவியினாற் கண்டு இன்புற லாகுமென்று எண்ணியவனாதலின், ஏமுறு நண்பவென்றான்; ஏமம் ஏமென்றாயிற்று (முருகு. 97, ந.) அறிவுரையைக் கூறுதல் அவன் கடமை யென்பதைப் புலப்படுத்திப் புலவர் தோழ வென்றான்; சிறுவர் நண்ப வென்றதனால் இழுக்கு நேராதவாறு புலவர் தோழவென்று சிறப்பித்தான்.

     எண்ணாட்பக்கம் - எட்டாவது திதி; அட்டமி. பசுமை - இளமை. கூந்தலுக்குக் கடலும் நுதலுக்குத் திங்களும் உவமைகள். கதுப்பயல் விளங்கும் சிறுநுதலென்றது அளகமாகிய முன்னுச்சி மயிருக்கு அருகில் விளங்கும் நெற்றியென்றபடி; இது பற்றியே, “அளகவாணுதல்” (கம்ப. ஊர்தேடு. 53) என்பது போன்ற வழக்குகள் உண்டாயின; குறுந்.34, வி-ரை.

     புதுக்கோள் யானை - புதியதாகக் காட்டிலிருந்து பிடிபட்ட யானை; தலைவன் தான் முன்னர் இத்தகைய உள்ளக்கவர்ச்சியை அடைந்தவனல்ல னாதலின் புதுக்கோள் யானையை உவமை கூறினான். பிணித்தற்று பிணித் தன்றென்பதன் விகாரம்; பிணித்தல் - இங்கே உள்ளத்தைப் பிணித்தல்.

     அத்தை, ஏ: அசைநிலை.

     மேற்கோளாட்சி 1. ரகார வீற்று உயர்திணைப் பெயர் விளிவேற்றுமைக்கண் அளபெடுத்தது (நன். 308, மயிலை.) (‘சிறாஅர்’ என்பதை மயிலைநாதர் விளியாகக்கொண்டார் போலும்.)

     1-2. னகாரவீற்று உயர்திணைப் பெயர் அண்மை விளிக்கண் ஈறு அழிந்தது (நன். 306, மயிலை, 307, சங்..)

     3-5. ‘கடல் போன்றது கூந்தலெனவும், கடல் நடுவெழுந்த எண்ணாட் பக்கத்து மதி போன்றது நுதலெனவும் கூறினான்; அதனால், கடல் போலு மயிரென்றதும், பல காவதப் பரப்புடைய மதிபோன்றது நுதலென்றதும் கழியப் பெரியவாயினும், அது வழக்காதலிற் சிறப்பிற்றீராது மனங்கொள வந்த உவமம் எனவே படும்’ (தொல். உவம. 10, பேர்); எண்ணாட்டிங்கள் மகளிர்நெற்றிக்கு உவமை (சிலப். 2: 38-40, அடியார்); குழவிப் பருவத்து ஒரு கலையுடைத்தாய்ப் பின்பு இளமைப் பருவத்தே நின்ற பிறை, மகளிர் நெற்றிக்கு உவமை (சீவக. 165, ந..)

     மு. தலைவன் பாங்கற்கு உற்ற துரைத்தது (இறை. 3; தொல். களவு. 11, இளம், ந; நம்பி. 137); பாங்கன் கேட்பத் தலைவன் கூறியது (தொல். செய். 196, பேர், ந.); பாங்கற் கூட்டம் (தொல். செய். 198, பேர், 201, ந.); தலைவன் பாங்கனை எலுவவென்று விளித்தது (தொல். பொருளியல், 26, ந..)

     ஒப்புமைப் பகுதி 2. அத்தை: குறுந். 389:2.

     4. பசு வெண்டிங்கள்: குறுந். 359:2; “பசுவெண் ணிலவு” (நற். 196:2.)

     3-5. நுதலுக்குப் பிறை: குறுந். 226:2-3.

     6. புதுக்கோள் யானை: மணி 12:45, 18:168; பெருங். 1. 33:79.

     தலைவனுக்கு யானை: குறுந். 359:4; கலி.2:26-9; மணி. 18:160-68.

     5-6. தலைவியின் நுதல் தலைவன் உள்ளத்தைக் கவர்தல்: “ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள், நண்ணாரு முட்குமென்பீடு” (குறள், 1088.)

(129)