(தலைவியைப் பிரிந்துவந்த தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப்பெற்றபின் தலைவிபால் மீள எண்ணி, “தலைவியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; “அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்று கூறியது.)
 131.    
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட் 
    
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே 
    
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே  
    
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத் 
5
தோரே ருழவன் போலப் 
    
பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே. 

என்பது வினைமுற்றிய தலைமகன் பருவவரவின்கட் சொல்லியது.

    (வினைமுற்றிய - தன் தலைவியைப் பிரிந்துவந்தற்குக் காரணமாகிய காரியம் முற்றுப்பெற்ற.)

ஓரேருழவனார் (பி-ம். நக்கீரர்.)

     (பி-ம்.)2.‘பேரமைக்கண்ணி’; 3. ‘நெடுஞ்சேணாருடை’.

     (ப-ரை.) ஆடு அமை புரையும் வனப்பின் - அசைகின்ற மூங்கிலை யொத்த அழகினையும், பணை தோள் - பருமையையும் உடைய தோளையும், பேர் அமர் கண்ணி - பெரிய அமர்த்தலையுடைய கண்ணையும் பெற்ற தலைவி, இருந்த ஊர்---, நெடு சேண் அரு இடையது - நெடுந்தூரத்தின்கண் அடைதற்கரிய இடத்தில் உள்ளது; நெஞ்சு - எனது நெஞ்சானது, ஈரம் பட்ட செவ்வி பசு புனத்து - ஈரம் உண்டாகிய செவ்வியையுடைய பசிய புனத்தையுடைய, ஓர் ஏர் உழவன் போல - ஒற்றை ஏரையுடைய உழவனைப்போல, பெரு விதுப்பு உற்றன்று - பெரிய விரைவை அடைந்தது; யான் நோகு - அதனால் நான் வருந்துவேன்.

     (முடிபு) கண்ணி இருந்த ஊர் நெடுஞ்சேணாரிடையது; நெஞ்சு பெருவிதுப்புற்றன்று; யான் நோகு.

     (கருத்து) யான் கூறிவந்த பருவம் வந்தமையின் என் நெஞ்சம் தலைவியை அடைய அவாவுகின்றது.

     (வி-ரை.) தோளிணைத்துஞ்சி யின்புற்றவனாதலின் அவற்றின் சிறப்பை முற்கூறினான். அமைபுரையும் தோள், வனப்பிற்றோள், பணைத்தோளென இயைக்க. பணைத்தோள் - பருமையையுடைய தோள். அமர்த்தலாவது கண்டார் நெஞ்சொடு போர் புரிதல் (கலி. 75:7, ந.)

     ஓரேருழவன், ஈரம் வீண்படாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்ற தென்றான். பல ஏருடையான் சிறிது சோம்பியிருப்பினும் ஏவலாளர் உதவிகொண்டு குறுகிய கால அளவில் உழுதுவிடல் கூடும்; ஓரேருழவனோ அவ்வோரேரைக் கொண்டே ஈரம் வீண்படாமல் உழவேண்டியவனாதலின் விரைவான். ஆதலின் அவனை உவமை கூறினான். ஓரேருழவனென்றது ஓரேரும் அதனால் உழப்படும் சிறு நிலமும் உடையவனைக் குறித்தது. விதுப்பு - விரைவு; விதும்பென்பது இதன் வினைப்பகுதி.

     ஏகாரங்களும் ஓகாரமும் அசைநிலைகள்.

     தன் நெஞ்சு விரையவும், தான் உடனே சென்று காண்பதற்குரிய நிலையில் இன்மையின் நோகோ யானே யென்றான்.

     மேற்கோளாட்சி மு. தலைமகன் தலைமகள் வாழும் ஊர்நோக்கி மதிமயங்கியது (நம்பி. 156.)

     ஒப்புமைப் பகுதி 1. ஆடமை: குறுந். 115:4, ஒப்பு.

     ஆடமைத்தோள்: “ஆடமைத் தோளி” (பு.வெ.264); “ஆடமைத்தோ ணல்லார்” (நன். 55.)

     மகளிர் தோளுக்கு மூங்கில்: குறுந்.268:6. ஒப்பு.

     2. பேரமர்க் கண்ணி: குறுந். 286:4, கலி. 74:14; புறநா. 71:6; குறள்.1083.

     3. நெடுஞ்சே ணாரிடை : அகநா.3:18.

     5. ஓரேருழவன்: ‘ஓரேர்க்காரன் உழுது கெட்டான்; அஞ்சேர்க்காரன் அமர்த்திக் கெட்டான்’ (ஒரு பழமொழி.)

     6. விதுப்புறுதல் : அகநா. 136:8.

     4-6 ஈரங்கண்டு உழவன் விரைதல்: “மாவீரம் போகுதென்று விதைகொண் டோட” (தனிப்.)

     சிறுநில முடைய உழவன் அந்நிலத்தைப் பாதுகாத்தல்: “வறிஞ னோம்புமோர், செய்யெனக் காத்து” (கம்ப. அரசியற். 12); “மிடிய னொருசெய் யாளனச்செய் விளையக் காக்குஞ் செயல்போல” (பிரபு. மாயை உற்பத்தி. 49.)

     6. நோகோ யானே: குறுந். 178:7, 212:5; நற். 26:1, 108:9, 257:10, 312:1, 394:9; ஐங். 107:4; அகநா. 137:16; புறநா. 116:9, 234:1.

(131)