சிறைக்குடியாந்தையார். (பி-ம். 5. ‘விரும்பினன்ன’; 6. ‘சாஅ’, ‘சாஆய’. )
(ப-ரை.) தோழ, மாஅயோள் - மாமையையுடைய தலைவி, கவவு கடுங்குரையள் - தழுவுவதில் விரைவுடையவள், காமர் வனப்பினள் - விருப்பம் தரும் வனப்பை யுடையவள், குவவு மெல்முலையள் - குவிதலையுடைய மெல்லிய நகிலினையுடையவள; கொடி கூந்தலள் - நீட்சியையுடைய கூந்தலையுடையவள், ஞாங்கர் - பக்கத்தில் மேயச் சென்ற, கடு சுரை நல் ஆன் - மிக்க சுரப்பையுடைய நல்ல பசுவினது, நடுங்கு தலை குழவி - நடுங்கும் தலையையுடைய கன்று, தாய் காண் விருப்பின் அன்ன - அத்தாய்ப் பசுவைக் காண வேண்டும் என விருப்பத்தோடு இருந்தாற் போன்ற, சாஅய் நோக்கினள் - விருப்பத்தை வெளிப்படுத்தும் மெலிந்த பார்வையையுடையவள்; ஆதலால், யான்---, யாங்கு மறந்து அமைகு - எப்படி அவளை மறந்து அமைவேன்!
(முடிபு) மாஅயோள், கவவுக்கடுங்குரையள்; வனப்பினள்; முலையள்; கூந்தலள்; நோக்கினள்; யான் யாங்கு மறந்தமைகு!
(கருத்து) தலைவி மறத்தற்கரிய இயல்புடையவள்.
(வி-ரை.) கவவு - அகத்திடுதல் (தொல். உரி. 59 ); இங்கே தழுவுதல் (கலி. 33:7.) கடுங்குரையள் - கடுமையள்; குரை: அசை. வனப்பு - பல உறுப்புக்களிலும் காணப்படும் அழகு: ‘வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு.’ (தொல். செய். 285, பேர்.) இயற்கைப் புணர்ச்சி யின்பம் துய்த்த நிலையினனாதலின் முதலில் தலைவி தழுவிய இன்பத்தைக் கூறினான். தன் முயற்சியின்றியே தலைவியும் பெருவிருப்பினளென்பான் தழுவுதலில் விரைவுடையாளென்று கூறினான் (குறள். 1290.)
யாங்கு - எவ்வாறு. ஞாங்கர் - ஊர்ப்பக்கம். கடுஞ்சுரையென்ற அடை கன்று ஆவின்பால் உண்ணும் விருப்பினதென்பதைப் புலப்படுத்தியது ‘வாங்கக் குடம் நிறைக்கும்’ பசுவாதலின் கடுஞ்சுரை யென்பதற்கு விரைவிற் சுரத்தலையுடைய வென்பதும் பொருந்தும்.
நடுங்குதலை யென்ற அடை கன்றின் இளமைமிகுதியை விளக்கியது.
சாஅய் நோக்கு - மெலிந்த நோக்கம்; என்றது தலைவனை எதிர் நோக்கிய பார்வையை..
ஏகாரங்கள் அசைநிலை; அமைகோ: ஓகாரம் இரக்கக் குறிப்பு; அசைநிலையுமாம்..
‘கன்று பசுவைப் பார்த்திருத்தலைப் போன்ற விருப்புடையளாதலினாலும், மனங்கவரும் இயல்பினளாதலினாலும் அவளை மறந்து அமைதல் அரிது’ என்று தலைவன் கூறினான். ஈன்றணிமையையுடைய நடுங்குதலைக்கன்றைத் தலைவிக்கு உவமை கூறினான், அணிமையிலே முதன்முதற் கண்டு நெஞ்சு கலந்தவனாதலின்.
தலைவனுக்குப் பசுவையும் தலைவிக்குக் கன்றையும் உவமை கூறும் மரபு இந்நூல் 94-ஆம் செய்யுளாலும் அதன் விசேடவுரை முதலியவற்றாலும் விளங்கும்.
மேற்கோளாட்சி 2. கொடியென்பது நீடலென்னும் பொருளில் வந்தது. (தொல். புறத். 33. ந..)
மு. களவுக் காலத்து நிகழ்ந்த கூட்டத்து அருமையைத் தனித்துச் சுழலுதலையுடைய உள்ளத்தோடே உசாவிய விடத்துத் தலைவற்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 5, ந..)
ஒப்புமைப் பகுதி 1. தலைவி தழுவுதல்: “இன்னகை யிளையோள் கவவ” (அகநா. 314:21)
தலைவியின் கவவுக் கடுமை: ‘நம் கவவுக் கடுமை யறிந்த தலைவர்’ (குறள். 1156, பரிமேல்.)
4. கடுஞ்சுரையான் : பு.வெ. 18.
6. மாயோள்: குறுந். 9:1, ஒப்பு.
4-6 தலைவன் வரவை எதிர்பார்க்கும் தலைவிக்குத் தாய்ப் பசுவை எதிர்பார்க்கும் கன்று: குறுந். 64:1-4.
(132)