உறையூர் முதுகண்ணன் சாத்தன். (பி-ம்.) 1. ‘றொடவைகப்’, ‘சிறுதினைக்’; 3-4. ‘ஒலித்தாங்கெண்ணுரஞ்’; 4. ‘உள்ளேன்றோழி’; 5. ‘நலம்புத்துண்ட’.
(ப-ரை.) தோழி---, புனவன் துடவை - குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த, பொன்போல் சிறுதினை - பொன்னைப் போன்ற சிறிய தினையினது கதிரை, கிளி குறைத்து உண்ட கூழை இருவி - கிளி ஒடித்து உண்ணுதலால் கூழையாகிய தாளில், பெரு பெயல் உண்மையின் - பெரிய மழை உண்டானமையால், இலை ஒலித்தாங்கு - இலை தழைத்தாற் போல, என் நலம் புதிது உண்ட புலம்பினான் - தலைவர் எனது பெண்மை நலத்தைப் புதிதுண்டமையால் உண்டாய தனிமை வருத்தத்தோடு, என் உரம் செத்தும் - எனது வலி அழிந்தும், உளென் - இன்னும் உயிரோடு இருக்கின்றேன்.
(முடிபு) தோழி, புலம்பினான் உரஞ்செத்தும் உளென்.
(கருத்து) தலைவர் அருள் செய்வாரென்று இன்னும் உயிர் தாங்கி நிற்கின்றேன்.
(வி-ரை.) புனவன் - தினைப்புனத்தையுடைய குறவன். பொன் போற் சிறுதினையென்றது செந்தினையை. குறைத்து உண்ட வென்பதனை உண்டு குறைத்தவென்று விகுதி பிரித்துக் கூட்டினும் பொருந்தும்.
சிறு பெயலால் அத்தினை இலைவிடாதாதலின் பெரும் பெயலைக் கூறினாள். உரம்- மனவலி; கன்னித் தன்மையுமாம். புதிதுண்ணல் - பிறரால் உண்ணப் படாது புதிதாக உள்ள பொருளை முதன்முறை உண்டல். நலம் புதிதுண்டலென்பதற்கு நலத்தின் புதுமையை நுகரலென்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர்; கலி.83:21. புலம்பு - நலமிழந்த தனிமை. உண்டற்குரியதல்லாத நலத்தை உண்டதாகக் கூறுதல் ஒரு மரபு. புலம்பினால் உரஞ் செத்தும் உளென் என்று கூட்டிப் பொருளுரைப்பினும் அமையும்.
கிளி உண்டமையாற் கதிரிழந்த தினைத்தாள் பெரும்பெயலுண்மையால் உலர்ந்து வாடாமல் இலை விட்டதுபோல, தலைவர் உண்டமையால் நலனிழந்த யான் அவரது தண்ணளியை நினைந்து உயிர் வைத்துள்ளேனென்று உவமையை விரித்துக் கொள்க. பெரும்பெயல் நீட்டிப்பின் தினை மீண்டும் கதிர் விடுதல் போலத் தலைவன் தண்ணளி மிக்கு வரைந்து கொள்வானேல் என் நலனை மீண்டும் பெறுவேனென்பதும் இவ்வுவமையாற் பெறப்படும்.
குறிஞ்சி நிலத்தினளாகிய தலைவி தினைப்புனங்காத்துக் கிளியோப்பிய பழக்கத்தினால் தான் அறிந்த உவமையையே கூறினாள்.
உளெனே: ஏகாரம் இரக்கக் குறிப்பு. புலம்பினானே: ஏகாரம் அசை நிலை.
ஒப்புமைப் பகுதி மு. குறுந். 105:1.
2. கூழை: குறுந். 179:7, 227:3.
1-2. தினையைக் கிளி உண்ணுதல்: குறுந். 360:5-6.
3. பெரும் பெயல்:குறுந்.13:2.
4. தலைவி உரனழிதல் : குறுந். 140:3-4.
உளெனே: குறுந். 125:2, ஒப்பு.
5. தலைவன் தலைவியின் நலனுண்டல்: குறுந்.112:5, 236:6, 384:3.
தலைவன் புதிதுண்டல்:“தோள் புதிதுண்ட ஞான்றை”(அகநா.320:13); “பூமாண் கருங்குழலா ருள்ளம் புதிதுண்பான்” (ஆதியுலா, 58.) தலைவன் நலம் புதிதுண்டல்: “பூவினன்ன நலம்புதிதுண்டு” (நற். 15:4); “நலம்புதி துண்டுள்ளா நாணிலி” (கலி.83:21); “பொன்மாலை மார்பனென் புதுநலனுண் டிகழ்வானோ” (தே. திருநா. திருப்பழனம்.)
(133)