கோவேங்கைப் பெருங்கதழ்வன். (பி-ம்.) 2. ‘நன்றுமற்றில்லை’, ‘நன்று மாறில்ல’; 4. ‘பூவிடை’; 5. ‘பொரு திலங்கும்',‘கதம் வீழருவி’.
(ப-ரை.) தோழி---, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக; குறு பொறை தடைஇய - குறிய கற்களினிடத்தே பருத்து வளர்ந்த, நெடு தாள் வேங்கை - உயர்ந்த அடியையுடைய வேங்கை மரத்தினது, பூ உடை அலங்கு சினை - மலர்களையுடைய அசைந்த கிளைகள், புலம்ப - அம் மலர்களை நீங்கித் தனிக்கும்படி, தாக்கி - அடித்து, கல் பொருது - கற்களை அலைத்து, இரங்கும் - ஒலிக்கும், கதழ் வீழ் அருவி - விரைந்து வீழும் அருவியானது, நிலம் கொள்பாம்பின் - நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப்போல, இழிதரும் - இறங்குதற்கிடமாகிய, விலங்குமலை நாடனொடு - ஒன்றற் கொன்று குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனோடு,கலந்த நட்பு - மணந்ததனால் உண்டான தொடர்பு, நம்மொடு பிரிவு இன்று ஆயின் - தலைவனுக்கு நம்மோடு பிரிவு இல்லையாயின், நன்றுமன் - நிச்சயமாக நன்றாகும்; தில்ல - இஃது எனது விருப்பம்.
(முடிபு) தோழி, நாடனொடு கலந்த நட்பு, பிரிவின்றாயின் நன்று.
(கருத்து) தலைவன் பிரிவை நான் ஆற்றேனாயினேன்.
(வி-ரை.) தலைவன் வரைந்து கொள்ளுதற்குரிய பொருளைத் தேடப் பிரிந்தான். அப்பிரிவை யாற்றாது தலைவி வருந்தினாள். அப்பொழுது தோழி அவளை நோக்கி, “தலைவர் உன்னை மணப்பதற்கன்றோ முயல் கின்றனர்? அவர் நட்பினால் நன்மையைப் பெற்ற நீ வருந்துதல் தகாது” என்றவழித் தலைவி கூறியது இது.
வாழி: அசைநிலை. நம்மொடு என்று கூறினாள் தோழிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமை பற்றி. பிரிவின்றாயின் நன்றென்றமையின், இப்பொழுது பிரிவு உண்மையின் எனது ஆற்றாமைக் கேதுவாயிற் றென்பது பெறப்படும். குறும்பொறை - குறிய கற்கள்: மலையில் உருண்டைக் கற்களுக்கிடையே வேங்கை மரம் வளர்ந்தது. தடைஇய - பருத்த (நெடுநல். 149, ந.)
அருவியின் அருகில் வளர்ந்ததாதலின் வேங்கை பருத்தும் உயர்ந்தும் பூக்கள் மலிந்தும் விளங்கியது. அருவி தாக்குதலால் பூக்கள் உதிர்ந்தன; அதனால் சினை தனிமை யுற்றது. கதழ்வீழ் அருவி - கதழ்ந்து வீழும் அருவி; இத்தொடர் ‘விரப்புனைபந்து’ என்பது போல நின்றது.
குறும்பொறைகள் குறுக்கிடுங்கால் வளைந்து வளைந்து வேகமாகச் செல்லுவதால் அருவிக்குப் பாம்பு உவமையாயிற்று. ஏ; அசைநிலை.
நிலங்கொள் பாம்பு என்ற உவமையடைனயப் பொருளுக்கும் கூட்டி அருவி நிலப்பரப்பில் இழிதலையும் கொள்க.
அருவி நிலப்பரப்பில் இழிந்து வளந்தருவதேனும் இடையில் மலரை உதிர்த்தலும் கல்லைப் பொருதலும் பாம்பு போலத் தோன்றலுமாகிய துன்பத்திற் கேதுவான செயலைச் செய்ததுபோல, நாடனது நட்பு முடிவில் நன்மையையே தருவதாயினும் இடையிற் பிரிவினால் துன்பத்திற்குக் காரணமாயிற்றென்பது குறிப்பு.
ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி:குறுந். 77:1, ஒப்பு.
2. நன்று மற்றில்ல: குறுந்.58:2, ஒப்பு.
3. குறும் பொறை:குறுந். 215:5, 333:4. கற்களுக்கிடையே வேங்கை வளர்ந்திருத்தல்: “அகலறை மலர்ந்த வரும்புமுதிர் வேங்கை”, “கல்சேர் வேங்கை”, “குறும்பொறை யயலது நெடுந்தாள் வேங்கை” (அகநா. 105:1, 141:27, 368:6.)
5. கல்பொருதிரங்கும் அருவி: “கல்பொரு திரங்கு மல்லற் பேரி யாற்று” (புறநா. 192:8.) 4-5. பூவுடையலங்கு சினை புலம்பத் தாக்கும் அருவி: “பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு... நாகநறுமல ருதிர... இழுமென விழிதரு மருவி” (முருகு. 298-316.)
3-4. அருவியின் அருகில் வேங்கைமரம் இருத்தல்: குறுந். 96:1, ஒப்பு.
5-6. அருவிக்குப் பாம்பு: “பாம்பென முடுகு நீர்” (அகநா. 339:3); “ஓங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை யருவி” (தொல். செய். 54, பேர். மேற்.); “நெடுவரை மருங்கிற் பாம்பென விழிதரும், கடுவரற் கலுழி” (யா.வி. 95. மேற். ‘துணியிரும்’); “பாம்பளை புகுவதேபோற் பாய்தரு பரவைத் தெண்ணீர்”, “குண்டிகை யிருந்த நீத்தங் குவலயம் படர்ந்த பான்மை, எண்டருந் தடையால் வல்லோனிருங்கடத் திட்ட பாந்தள், மண்டலத் தொருவ னீப்ப வழிக்கொளல் போன்ற தன்றே” (கந்த. ஆற்றுப். 33, இந்திரனருச்.2.) 7.விலங்கு மலை நாடு: குறுந். 144:7. 2-7.நட்பு, பிரிவின்றாயின் நன்று: குறுந். 32:3, 57:3
(134)