(முதல்நாள் உரிய இடத்தே வந்து தலைவியைக் காணாத தலைவன் மறுநாள் கேட்கும் அணிமையில் நிற்பதை அறிந்த தோழி, “நேற்றிரவு தலைவரது வரவை எதிர்நோக்கித் துயிலாமல் இருந்தேம்; அவர் வந்திலர்” எனக் கூறியது.)
 138.    
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே 
    
எம்மி லயல தேழி லும்பர் 
    
மயிலடி யிலைய மாக்குர னொச்சி 
    
அணிமிகு மென்கொம் பூழ்த்த 
5
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே. 

என்பது (1) குறிபிழைத்த தலைமகன், பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழித் தோழி, சிறைப்புறமாகக் கூறியது.

    (2) இரவுக்குறி நேர்ந்ததூஉமாம்.

கொல்லன் அழிசி.

     (பி-ம்.) 2. ‘எழினும்பர்’, ‘உம்பரம்’.

     (ப-ரை.) எம் இல் அயலது - எமது வீட்டின் அயலதாகிய, ஏழில் உம்பர் - ஏழிற்குன்றத்தின் மேலுள்ள, மயிலடி இலைய -மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய, மாகுரல் நொச்சி - கரிய பூங்கொத்தையுடைய நொச்சியினது, அணி மிகு மெல் கொம்பு ஊழ்த்த -அழகு மிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த, மணிமருள் பூவின் பாடு - நீலமணி போன்ற மலர்களின் ஓசையை, நனி கேட்டு - மிகக் கேட்டு, கொன்ஊர் துஞ்சினும் - பெரிய ஊரிலுள்ளார் துயின்றாலும், யாம் துஞ்சலம் - நாங்கள் துஞ்சேமாயினேம்.

     (முடிபு) ஊர் துஞ்சினும், யாம் பூவின்பாடு கேட்டுத் துஞ்சலம்.

     (கருத்து) நேற்றுத் தலைவரை யாம் எதிர் நோக்கியிருந்தேம்.

     (வி-ரை.) கொன் - பெருமை; அலரால் தலைவியை அஞ்சுவித்தலின் அச்சமுமாம். தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமை பற்றி யாமென்றாள். ஏழில்: ஒருமலை; இது நன்னன் என்பவனுக்குரியது; ஏழிலைப்பாலையென்னும் மரமும் ஆம்; இப்பொருள் கொள்ளுங்கால் உம்பரென்பதற்கு அப்பாலென்று கொள்க.

     தலைவன் கேட்கும் அணிமையில் இருப்பதை அறிந்த தோழி, “ நேற் றிரவு நாம் துயிலாமல் தலைவரது வரவை எதிர்நோக்கி இருந்தேம். ஊரினர் யாவரும் துயின்றனர். வீட்டுக்கு அருகிலுள்ள ஏழிற் குன்றத்தின்மேல வளர்ந்த நொச்சியின் மலர் உதிரும் ஓசையும் எம் காதில் விழுந்தது. தலைவர் வந்தால் நாம் நன்கு அறிந்திருப்போம். அவர் வந்திலர்” என்று கூறியது. மருள்: உவமவுருபு: கலி, 14:1. நள்ளிரவில் நொச்சியினது மலர்கள் உதிரும்; “நொச்சிப் பூவுதிர் நள்ளிருணடுநாள்.” (கல். 2:18) ஏகாரங்கள் அசை நிலைகள்.

     இரண்டாவது கருத்து: “இராக்காலத்தில் யாம் துயிலேம்” என்றமையால் அப்பொழுது வரின் தலைவியைக் கண்டு அளவளாவலாமென்று குறிப்பித்தாள்.

     மேற்கோளாட்சி 1. இடைச்சொல் பெயரைப் பின்னே அடுத்து வந்தது (தொல். இடை.3, இளம், சே, கல், தெய்வச், ந.); கொன்னென்னும் இடைச்சொல் பெருமை யென்னும் பொருளில் வந்தது(தொல். இடை. 6, இளம், சே, கல், தெய்வச் ந; இ.வி. 265); ‘இடைச் சொற்களிலும் விசேடித்து நிற்றற்கு முரியன சிலவுள’ (தொல்.எச்ச. 59-60, ந.) இடைச்சொல் பெயரின் அகத்துறுப்பாய் முன்னே வந்தது (நன். 419, மயிலை,420, சங்.); இடைச் சொற்றொடர் வந்தது (இ.வி. 54.)

     மு. இரவுக்குறி பிழைத்த விடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 16, ந.); என் பிழைப்பு அன்றென்று இறைவி நோதல் (நம்பி. 160: இ.வி. 519); தூங்கிசை யகவலோசை ஆசிரியப்பா(யா. வி. 69.)

     ஒப்புமைப் பகுதி 1. ஊர் துஞ்சினும் தலைவி துயிலாமை: குறுந். 6:3-4, ஒப்பு.

     2. எழில்:நற். 391:7, அகநா. 152:13, 345:7, 349:9.

     3. நொச்சியின் இலைக்கு மயிலின் அடி: “மயிலடி யிலைய மாக்குர னொச்சி”, “மயிலடி யன்ன மாக்குர னொச்சியும்” (நற். 115:5, 305:2);“நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை” (திருவிளை. இந்திரன். 74.)

     3-4. நள்ளிரவில் நொச்சிப்பூ உதிர்தல்: ‘‘நொச்சி மென்போது வீழு மிருளின்’’ (கூர்ம. இராமன்வனம். 62.)

     3-5. நள்ளிரவில் நொச்சிப்பூ வீழ்தலைக் கேட்டல்: “ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன், மாறினெ னெனக்கூறி மனங் கொள்ளுநதானென்ப, கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரனொச்சிப், பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக” (கலி. 45:10-13); “வியலூ ரெயிற்புற நொச்சியி னூழ்மலர் வீழ்தொ றெண்ணி, மயலூர் மனத்தொடு வைகினன் யான்றஞ்சை வாணன் வெற்பர், புயலூ ரிருட் கங்குல் வந்தவ மேநின்று போயினரென், றயலூர் கைக்குமென்னேயென்ன பாவங்கொ லாக்கினவே” (தஞ்சை. 201); “நொச்சிப் புதுமலர் வீங்கிருள் வீழ்வன நோக்குதுமே” (தணிகை. களவு. 575.)

(138)