(பாங்கியினாற் குறை மறுக்கப்பட்ட தலைவன், ‘‘என்னைத் துன்புறுத்தியவள் இன்னாள் என்பதை யாவரும் அறிந்து கூறும்படி மடன் மாஊர்ந்து மறுகிற் செல்வேன்’’ என்று அப்பாங்கி கேட்பக்கூறியது.)
 14.   
அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த 
    
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் 
    
பெறுகதில் லம்ம யானே பெற்றாங் 
    
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில் 
5
நல்லோள் கணவ னிவனெனப் 
    
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.்  

என்பது ‘‘மடன்மா கூறு மிடனுமா ருண்டே’’ (தொல். களவு.11) என்பதனால் தோழி குறை மறுத்துழித் தலைமகன், மடலேறுவல் என்பதுபடச்சொல்லியது.

    (குறை-காரியம்; தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ளச் செய்தல்.பட- குறிப்பினால் புலப்பட.)

தொல்கபிலர்.

    (பி-ம்.) 1. ‘அமிர்துபொதி’, ‘வஞ்சி’ 4-5. ‘மறுகு நல்லோர்’ 6. ‘கூறுகயாஅநாணுகஞ்’, ‘கூறயாநண்ணுகஞ்’.

    (ப-ரை.) அமிழ்து பொதி- அமுதத்தின் இனிமை நிரம்பிய, செ நா- செவ்விய நாவானது, அஞ்ச- அஞ்சும்படி, வந்த-முளைத்த, வார்ந்து இலங்கு- நேராகி விளங்குகின்ற, வை எயிறு- கூர்மையாகிய பற்களையும், சின்மொழி- சிலவாகிய சொற்களையும் உடைய, அரிவையை-தலைவியை,யான் பெறுகதில்- நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக; பெற்றாங்கு-பெற்றபின்பு, இ ஊர்- இந்த ஊரில் உள்ளார், அறிகதில்- அறிவாராக; பல்லோர்-பலர், மறுகில்- வீதியில், நல்லோள் கணவன் இவன் எனக் கூற-இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்லா நிற்க, யாம் சிறிது நாணுகம்-நாம் சிறிது நாணுவேம்!

    (முடிபு) யான் பெறுக; ஊர் அறிக; பல்லோர் கூற யாம் நாணுகம்.

    (கருத்து) யான் மடல் ஏறுவேன்.

    (வி-ரை.) அமிழ்து என்றது எயிற்றில் ஊறிய நீரை. அமிழ்து பொதி எயிறு, வந்த எயிறு எனக் கூட்டுக. பற்கள் கூரியனவாதலின் நா அஞ்சியது;அஞ்சினமையின் அது சில மொழி கூறியது. அரிவை என்றது பருவம் குறியாமல் பெண் என்னும் துணையாய் நின்றது, ‘‘செறியெயிற் றரிவை’’(குறுந்.2:4) என்புழிப் போல. தில் விழைவுப் பொருளில் வந்தது. சின்மொழி -சிலவாகிய மொழி (கலித் 29:10,ந.); மென்மொழி (பழ.226, உரை) என்றும், மெத்தென்ற மொழி (புறநா.166:16, உரை) என்றும் கூறுவார் உளர். யாமென்றது தலைவியையும் உளப்படுத்தி. மடலேறத் தொடங்கும்போது நாணத்தை முற்ற நீத்தவனாதலின், ‘சிறிது நாணுகம்’ என்றான்.

    தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும்எழுதி அமைத்த படத்தைக் கையில் ஏந்தி, மடன்மாவிலேறி மறுகிற்செல்வானாதலின், அந்நிலை, இன்னாள் கணவன் இவன் என்று ஊரினர் அறிதற்கு ஏதுவாயிற்று.

     மேற்கோளாட்சி2. வார்தல் என்னும் உரிச்சொல் நேர்தல் என்னும் பொருளில்வந்தது (தொல். உரி. 23, தெய்வச். 19, ந; இ.வி. 284.)

    3. விழைவின் தில் தன்மை இடத்திற்குரியது (தொல். இடை. 12, இளம்.); ககர உயிர்மெய், வியங்கோள் வினைமுற்று விகுதியாக வரும் (நன். 337, மயிலை, 338, சங்; இ.வி.239.) 2-3. தில்லென்னும் இடைச்சொல் விழைவின்கண் வந்தது (தொல். இடை.5, இளம், சே, கல், தெய்வச், ந; நன். 430, மயிலை, 431 சங்.)

     3-4. தில்லென்னும் இடைச்சொல் காலம் பற்றி வந்தது (தொல்.இடை.,5, இளம், சே, கல்; நன். 430, மயிலை, 431, சங், இ.வி. 264.) 2-4.தில் விழைவின்கண் வந்தது (இ,வி.264.)

     ஒப்புமைப் பகுதி     2. வார்ந்திலங்கு வையெயிறு; ‘‘வையெயிற்று, வார்ந்த வாயர்’’ (மதுரைக். 413-4); ‘‘வாஅர்ந் திலங்கு வாலெயிற்று’’ (நற். 198;7.)

    வையெயிறு: நற். 26:7; அகநா. 325:11. சின்மொழி: ‘‘சிலமெல்லியவே கிளவி’’ (குறுந், 70:4); ‘‘சின்மொழித் துவர்வாய்’’ (நற்.190:9); ‘‘சின்மொழி’’ (கலித். 29:10, 125:16, 132:13); ‘‘முள்ளெயிற்றுச், சின்மொழி யரிவை’’ (அகநா.361:13-4); ‘‘சில சொல்லிற் பலகூந்தனின், நிலைக்கொத்தநின் றுணைத்துணைவியர்’’ (புறநா. 166:16-17); ‘‘சின்மொழியார் (நாலடி.362); ‘‘முள்ளெயிறி லங்கச் செவ்வாய் திறந்து, சில்லென் கிளவி மெல்லென மிழற்றி’’ (பெருங், 4,5:16-17); ‘‘சிற்றம் பலமன்ன சின்மொழியை’’ (திருச்சிற். 343); ‘‘திறமலி சின்மொழிச் செந்துவர் வாயினை’’ (திருவாரூர் மும்மணிக்.24); ‘‘சின்மொழி’’ (திவ்.திருவிருத்தம், 19-20.)

     1-2. அமிழ்து பொதி எயிறு: ‘‘முள்ளெயிற், றமிழ்த மூறுஞ் செவ்வாய்’’ (குறுந். 286:1-2); ‘‘முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரை’’, ‘‘ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்’’ (கலி. 4:13, 20:11); ‘‘கூரெயிற், றமிழ்த மூறுஞ்செவ்வாய்’’ (அகநா.335:24-5); ‘‘முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுதம்’’ (மணி.18:72); ‘‘அமரராக்கிய வமிழ்தெனக் கினையோள், தன்முளை யெயிற்றுநீர் தானென வயின்றும்’’ (பெருங், 3:14: 162-3); ‘‘முள்வா யெயிற்றூறமுதம்’’ (சீவக. 491.) நா எயிற்றை அஞ்சுதலும் சில மொழிதலும்: ‘‘நல்கினாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்’’ (புறநா. 361:16); ‘‘கூரெயிறு நாப் பாழ்தலஞ்சியஞ்சி, உழன்மாலைத் தீங்கிளவி யென்றிரண்டு தான்மிழற்று மொருநாட் காறும்’’ (சீவக. 1353.)

    3. பெறுகதில்லம்ம: ‘‘பெறுகதில் லம்மவிவ் வூருமோர் பெற்றி’’ (சிலப். 24: பாட்டுமடை.)

    4-5. மறுகில் மடலேறுதல்; குறுந். 17: 1-3, ஒப்பு.

    4-6. மடலேறும்போது தலைவனுக்குரிய தலைவியை ஊரினர் அறிதல்: ‘‘இன்னாள் செய்த திதுவென முன்னின், றவள்பழி நுவலு மிவ்வூர்’’ (குறுந்.173;5-6)

(14)