(தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்தில் அவனுடைய பிரிவினால் துன்புற்ற தலைவியை நோக்கி, “நீ ஆற்றாமல் இருக்கின்றாய்” என்று தோழி இரங்கினாளாக, “இவ்வூர் இப்பொழுது யான் டுந்துன்பத்தை எங்ஙனம் அறிந்தது?” என்று முன்னிலைப் புறமொழியாகத் தலைவி கூறியது.)
 140.   
வேதின வெரிநி னோதி முதுபோத் 
    
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும் 
    
சுரனே சென்றனர் காதல ருரனழிந் 
    
தீங்கியான் றாங்கிய வெவ்வம் 
5
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. 

என்பது பொருள்வயிற் பிரிந்தவிடத்து, நீ ஆற்றுகின்றிலை யென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

அள்ளூர் நன்முல்லை.

     (பி-ம்.) 2. ‘புட்கொளப்போதும்’; 4. ‘யானழுங்கிய’; 5. ‘ஆங்கறிந்’.

     (ப-ரை.) காதலர் - தலைவர், வேதினம் வெரிநின் - கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, ஓதிமுது போத்து - முதிய ஆண் ஓந்தியானது, ஆறு செல் மாக்கள் - வழிச்செல்லும் மனிதர்கள், புள் கொள பொருந்தும் - நிமித்தமாகக் கொள்ளும்படி தங்குகின்ற, சுரன் சென்றனர் - பாலைநிலத்திற் சென்றனர், உரன் அழிந்து - வலிமை யழிந்து, ஈங்கு யான் தாங்கிய எவ்வம் - அவர் பிரிந்த பிறகு இங்கே இருந்து யான் பொறுத்துக் கொண்டுள்ள துன்பத்தை, இ அழுங்கல் ஊர் - இரங்குதலையுடைய இவ்வூர், யாங்கு அறிந்தன்று - எவ்வாறு அறிந்தது?

     (முடிபு) காதலர் சுரன் சென்றனர்; இவ்வூர் யான் தாங்கிய எவ்வம் யாங்கு அறிந்தன்று.

     (கருத்து) தலைவர் பிரியுங் காலத்து அவரைச் செல்லாதவாறு செய்யாமல் இப்பொழுது என்னை, “நீ ஆற்றுகின்றிலை” என்று கூறிப் பயனில்லை.

     (வி-ரை.) ஓந்தியும் நன்னிமித்தம் பார்த்தற்குரியதென்பது “நாவி சிச்சிலி யோந்திதான்..... வலமாயின் வழிப்பயணமாகை நன்றோம்” (அறப்பளீசுர சதகம்) என்பதனாற் பெறப்படும். புள் - நிமித்தம்; உரன் - மனவலியும், உடல் வலியும். ஊரென்றது தோழியை. தலைவர் பிரிந்த காலத்தில் அவரைச் செல்லாமற் காத்தலின்றி அவர் பிரிவுக்கு உடம் பட்டிருந்து, இப்பொழுது தன் எவ்வத்தை ஆற்றியிருக்க வேண்டுமென்னும் குறிப்புப்பட உரைத்த தோழியின்பாற் சினங்கொண்டவளாதலின் அவளை வேறுபடுத்து ‘ஊர்’ என்றாள் (குறள்.1129, பரிமேல்.)

     யாங்கு - எவ்வாறு (புறநா. 191;2); யாரிடத்தென்றலும் ஒன்று. அழுங்கலூரென்றது காதலர் சென்ற பிறகு அழுங்குவதாற் பயனில்லை யென்னும் நினைவிற்று.

     மேற்கோளாட்சி 1. ஓந்தி யென்பது ஓதியென இடைக்குறைந்து வந்தது (தொல். எச்ச.57, சே, ந; யா.வி. 95; நன்.175, மயிலை, 156, சங்.; இ.வி.58.); ஓதி யென்றது குறிப்பாற் பொருளை விளக்குஞ் சொல் (இ.வி.170.)

     மு. கற்புக் காலத்தும் அலரெழுந்ததென்று கூறுதல் தலைவிக்கு உண்டு (தொல்.கற்பு.19, இளம்.21, ந..)

     (குறிப்பு.) இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஊரென்பதற்கு ஊரினரென்றே பொருள் கொண்டனரென்று தெரிகிறது.)

     ஒப்புமைப் பகுதி 1. ஓதி முது போத்து: “கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை, வேனி லோதி முதுபோத்து” (நற். 186:4-5.)

     5. யாங்கறிந்தன்று: குறுந். 209:6; நற்.29:6. அழுங்கலூர்: குறுந். 12:6, ஒப்பு. 276:8, 385:7, கலி.23:5; அகநா.70:17

(140)