(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)
 141.    
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் 
    
செல்கென் றோளே யன்னை யெனநீ 
    
சொல்லி னெவனோ தோழி கொல்லை 
    
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த 
5
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை 
    
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் 
    
ஆரிரு ணடுநாள் வருதி 
    
சார னாட வாரலோ வெனவே. 

என்பது இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அது [வு] மறுத்துச் சிறைப் புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

    (அது - அவ்விரவுக்குறி. அதுவும் என்ற உம்மை மிகையென்று தோற்றுகின்றது.)

மதுரைப் பெருங் கொல்லன்.

     (பி-ம்.) 1.’விளை தினை கடியாச்’, ‘விழைதினை கடியச்’; 2. ‘செல்கின்றோளே’, ‘அன்னை சேணெனச்’; 3. ‘னெவனாந்’;5. ‘கொலைவலேற்றை’; 6. ‘படுமதரம்’; 8. ‘னாடநீ வாரலோ’.

     (ப-ரை.) தோழி---, சாரல் நாட - மலைப்பக்கத்தையுடைய நாட, கொல்லை - கொல்லையிலுள்ள, நெடு கைவல் மான் - நெடிய கையையுடைய யானையினது, கடுபகை உழந்த - கடிய பகையினால் வருந்திய, குறு கை இரு புலி கோள் வல் ஏற்றை - குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலியானது, பசுகட் செநாய் - பசிய கண்ணையுடைய செந்நாய், படுபதம் பார்க்கும் - அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும், அரு இருள் நடுநாள் வருதி - வருதற்கரிய இருளையுடைய நடுயாமத்தில் வருகின்றாய்; வாரல் என - அங்ஙனம் வரு தலை ஒழிவாயாக எனவும், வளைவாய் சிறுகிளி - வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை, விளைதினை கடீஇயர் - விளைந்த தினையினிடத்துப் படாமற் கடியும் பொருட்டு, அன்னை - நம் தாய், செல்க என்றாள் - செல்வீராக என்றாள், என நீ சொல்லின் எவன் - எனவும் நீ தலைவனுக்குக் கூறின் வரும் குற்றம் யாது?

     (முடிபு) தோழி, ‘சாரனாட, நடுநாள் வருதி; வாரல்’ எனவும், ‘அன்னை செல்கென்றோள்’ எனவும் சொல்லின் எவன்?

     (கருத்து) தலைவரை இனிப் பகற்குறிக்கண் வரும்படி நீ சொல்ல வேண்டும்.

     (வி-ரை.) கிளி, விளைந்த தினையின்கண் அதனை உண்ணும் பொருட்டுப் படியும். விளை தினையைக் கொய்து உண்ணும் கருவி யுடையதென்பாள், ‘வளைவாய்ச்சிறுகிளி’ என்றாள். கடீஇயர் - கடியும் பொருட்டு. குறிஞ்சிநில மகளிர் தினைப்புனம் காத்தலும், அப்புனத்திற் படியும் கிளி முதலியவற்றைத் தட்டை, கவண் முதலிவயற்றாற் கடிதலும் இயல்பு.

     என்றோளே: ஏ, அசை நிலை, எவனோ: ஓ, அசை நிலை. கொல்லை யென்றது இங்கே புனத்தை. குறுங்கை: கையென்றது முன்கால்களை. படுபதம் - கண்படுக்கும் செவ்வி யெனலும் ஆம். நீ வரும் வழி இத்தகைய ஏதமுடையதென்பாள் புலியின் செயலைக் கூறினாள். வாரலோ: ஓகாரம் அசைநிலை. எனவே: ஏ ஈற்றசை, ‘வாரலோ வெனவும் செல்கெனறோளே யெனவும் சொல்லின்’ என்னும் உம்மைகள் தொக்கன.

     அன்னை தினைக்காக்கும் பொருட்டு எம்மைச் செல்லச் சொன்னா ளென்றதன் குறிப்பு, நீ இனி ஈண்டு இரவில் வாராது ஆண்டுப்பகலில் வருகவென்பது.

     மேற்கோளாட்சி மு. பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக்கண் தலைவி கூறியது (தொல்.களவு. 21, இளம், 20, ந.) தலைமகள் குறிவிலக்கு வித்தது (நம்பி. 164, இ.வி. 521.)

     ஒப்புமைப் பகுதி 1. வளைவாய்ச் சிறுகிளி: குறுந். 67:1-2, ஒப்பு. ‘வளைவாய்க்கிளை” (ஐந். எழு. 13.)

     3. சொல்லினெவனோ: ஐங். 399:3.

     5. மு. நற். 36:1; ஐங். 216:1.

     குறுங்கை யிரும்புலி: “குறுக்கை யிரும்புலி பொரூஉ நாட” (ஐங். 266:2.)

     புலிக் கோள்வ லேற்றை: “கோள்வல் புலியதளும்” (திணை மாலை. 22.)

     கோள்வ லேற்றை: அகநா. 171:9.

     4-5. களிறு புலியொடு பொருதல்: குறுந். 88:2-3, ஒப்பு.

(141)