கபிலர். (பி-ம்.) 1. ‘தைஇயப்’; 3. ‘தானறிந்தன்றோவிலளே’; 5. ‘பின்னுத்’, ’பின்னுழந்’.
(ப-ரை.) பால் நாள் பள்ளி யானையின் உயிர்த்து - நடு யாமத்துப் படுத்துத் துயிலுதலையுடைய யானையைப் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, என் உள்ளம் - எனது நெஞ்சம், பின்னும் - நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும், தன் உழையது - அவளிடத்திலே இருக்கின்றது; சுனைபூ குற்று - சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து, தொடலை தைஇ - மாலையைக் கட்டி, புனம் கிளி கடியும் - தினைப் புனத்திற் கதிரை உண்ணும் பொருட்டு வீழும் கிளிகளை ஓட்டுகின்ற, பூ கண் பேதை - பூவைப் போன்ற கண்ணையுடைய பேதையாகிய அத்தலைவி, அறிந்தனளோ இலளோ - இதனை அறிந்தாளோ இல்லையோ!
(முடிபு) என் உள்ளம் தன்னுழையது; பேதை அறிந்தனளோ! இலளோ!
(கருத்து) என் உள்ளம் தலைவியின்பால் உள்ளது.
(்வி-ரை.) குற்று - பறித்து. தொடலை - தொடுக்கப்படும் மாலை. முதலிற் குறிப்பு நோக்கால் இன்புறுத்தினமையை நினைந்து, ‘பூங்கட் பேதை’ என்றான். தனது நெஞ்சம் அவளிடத்தே பொருந்தியிருப்பதை அறியாமையின், ‘பேதை’ என்றான்.
தான் அறிந்தனளோ இலளோ என்ற ஓகாரங்கள் ஐயப் பொருளன; “யான்கண் டனனோ விலனோ” (குறுந். 311:4) பார்க்க. பால்நாள் - நடு இரவு. உள்ளத்துக்கு உயிர்த்தல் முதலியன இல்லையாயினும், உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல், மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்து உரைக்கும் மரபு பற்றிக் கூறப்பட்டன. தான் தலைவியின் பிரிவாற்றாமையால் உயிர்ப்பதையே இலக்கணை வகையால் நெஞ்சின் மேல் ஏற்றிக் கூறினான்.
பின்னுமென்றது தான் தலைவியோடு அளவளாவுவதற்கு முன்னும் அவளைக் கண்ட மாத்திரத்தே தன் நெஞ்சம் அவள் பாற் சென்றதென்பதைக் குறித்து நின்றது.
‘பின்னுத் தன்னுழையதுவே’ என்ற பாடத்திற்குத் தலைவியின் பின்னலினிடத்ததென்று பொருள் கொள்க;
| “கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் |
| கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் |
| பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் |
| தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ |
| நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் |
| அந்தீங் கிளவிக் குறுமகள் |
| மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே” (அகநா. 9:20-26) |
என்பதைக் காண்க.
தோழிக்குத் தலைமகன் தன்குறை கூறியதாக இச் செய்யுளைக் கொள்ளுங்கால், ‘ஆதலின் என் உள்ளம் விரும்பியதை யான் பெருவேனாக” என்ற எச்சத்தைப் பெய்து பொருளுரைக்க.
மேற்கோளாட்சி 3-4. உயிர்ப்பு என்பது முன்புவிடும் அளவினன்றிச் சுவாதம் நீள விடுதல். (தொல்.மெய்ப். 12, இளம்.).
ஒப்புமைப் பகுதி 1. மகளிர் பூக்குறுதல்: குறுந். 144:1, 178:3. “பூக்குற்றெய்திய” (ஐங். 23:2); “சுனைப்பூக் குற்றுஞ் சுள்ளி சூடியும்” (பெருங். 2.12:129.)
தொடலை தைஇ: அகநா.105:2.
1. மு. நற். 173:1.
2. பானாள்: குறுந். 94:3, ஒப்பு. அறிந்தன்றோ விலள்: பதிற்.77:7, உரை.
4. பள்ளி யானையின் உயிர்த்தல்: “பள்ளி யானையி னுயிரா வசைஇ” (குறுந். 359:4); “பள்ளி யானையின் வெய்ய வுயிரினை” (நற். 253:2.) பள்ளியானை: அகநா. 302:3.
தலைவனுக்கு யானை உவமை: அகநா. 6:9.
(142)