(தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நம்முடைய வருத்தத்தை யறிந்து இரங்கும் தன்மை யுடையவர்; ஆதலின் அவர் விரைவில் வருவர்; நின் மேனிப் பசப்பு அவர் வரவால் நீங்கிவிடும்” என்று தோழி கூறியது.)
 143.    
அழிய லாயிழை யழிபுபெரி துடையன் 
    
பழியு மஞ்சும் பயமலை நாடன் 
    
நில்லா மையே நிலையிற் றாகலின் 
    
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் 
5
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் 
    
தங்குதற் குரிய தன்றுநின் 
    
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே. 

என்பது வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழிகூறியது.

மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

     (பி-ம்.) 1. ‘யிழிபுபெரி’, ‘யன்புபெரி’; 2.’பழமலை’; 6.’தூங்குதற்’; 7.’பாஅய’.

     (ப-ரை.) ஆய் இழை - தெரிந்து அணிந்த அணிகலங்களையுடையாய், பயம் மலை நாடன் -பயனையுடைய மலைநாட்டுக்குத் தலைவன், அழிபு பெரிது உடையன் - நம்மைப் போல இரங்குதலை மிக உடையன்; பழியும் அஞ்சும் - பழியையும் அஞ்சுவான்; நில்லாமையே நிலையிற்று ஆகலின் - நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகத்தில் நிலைபெற்றதாதலின், நல் இசை வேட்ட - நிலை பெறுதலையுடைய நல்ல புகழை விரும்பிய, நயன் உடை நெஞ்சின் - நீதியையுடைய நெஞ்சையுடைய, கடப்பாட்டாளன் உடை பொருள் போல -ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல, நின் அம் கலுழ் மேனி - நினது அழகு ஒழுகும் மேனியின் கண், பாய பசப்பு - பரவிய பசலை, தங்குதற்கு உரியதன்று - தங்குவதற்கு உரிமை யுடையதன்று; ஆதலின், அழியல் - நீ வருந்தாதே.

     (முடிபு) ஆயிழை, நாடன் அழிபு பெரிதுடையன்; பழியும் அஞ்சும்; நின் மேனிப் பாய பசப்பு தங்குதற்குரியதன்று.

     (கருத்து) தலைவன் நம்பால் இரங்கி விரைவில் வந்து வரைந்து கொள்வான்.

     (வி-ரை.) “தலைவர் யான் ஈண்டிருந்து இரங்கும்படி பிரிந்து சென்றனர்; என்பால் இரக்கமில்லார்; ஊரினர் கூறும் பழிமொழியையும் அஞ்சி னாரல்லர். அவருடைய பிரிவினால் என் மேனி யழகு கெடப் பசலை பரந்தது” என்று கூறி வருந்திய தலைவியை நோக்கித் தோழி சொல்லியது இது.

     அழிபு - வருத்தம். ‘நீ தலைவரைப் பிரிந்து இரங்குதலைப் போலவே அவரும் நின்னைப் பிரிந்தமையால் இரங்குவர்’ என்பாள் அழிபு பெரிதுடையனென்றாள். ஒரு பெண்ணை வருந்தச் செய்தாரென்னும் பழியையும் அஞ்சுவாரென்பது படப் பழியுமஞ்சுமென்றாள்; “ஒழிதது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து’ (அகநா. 39:1) என்ற விடத்து ஒழித்ததென்பதனை ஸ்திரீ விஸநம் பண்ணலாகாதென்று முன்னோர் கழித்தது’ என்று அதன் உரையாசிரியர் உரைத்தனர். ஈண்டுப் பழியென்று கூறப்பட்டதும் அதுவே; ‘ஒரு மகள்பால் நட்புப் பூண்டு நெடுநாள் வரையாதொழுகுகின்றான்’ என்னும் பழியென்பதும் பொருந்தும்.

     உலகத்திலுள்ள பொருள்கள் நிலையற்றவை; புகழ் ஒன்றே நிலையுடையதாதலின் அதனைக் கடப்பாட்டாளர் விரும்புவர்;

  
“ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் 
  
 பொன்றாது நிற்பதொன் றில்”        (குறள். 233) 

என்னும் பொதுமறையைக் கருதுக.

     கல்வி, ஆண்மை, ஈகை முதலியவற்றால் உண்டாகும் இசை வகைகளுள் ஈகையால் வருவது சிறந்ததாதலின் அதனை நல்லிசையென்று சிறப்பித்தாள்.

  
“ஈத லிசைபட வாழ்த லதுவல்ல 
  
 தூதிய மில்லை யுயிர்க்கு”         (குறள். 231)  

என்பதன் உரையில் பரிமேலழகர்,

     ‘இசைபட வாழ்வதற்குக் கல்வி ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், உணவின் பிண்டமுண்டி முதற்றாகலின், ஈதல் சிறந்ததென்பதற்கு ஞாபகமாக ஈதலென்றார்’.

    என்றெழுதிய பகுதியினால் இதனை உணரலாகும். நயனுடைய நெஞ்சு - ஈயும்போது அன்போடு கொடுக்கும் நெஞ்சம்.

  
“முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானாம்  
  
 இன்சொ லினதே யறம்”              (குறள். 93)  

என்பது காண்க; நயன் - அன்பு.

  
“நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத் 
  
 தில்லோர் புன்கண் டீர நல்கும் 
  
 நாடல் சான்ற நயனுடை நெஞ்சிற் 
  
 பாடுநர் புரவலன்”                     (பதிற். 86: 5-8)  

என்பதிலும் நயனுடை நெஞ்சு கூறப்பட்டிருத்தல் காண்க.

     கடப்பாடு - ஒப்புரவு. (தொல். கற்பு, 10, ந.)

     தாம் பெற்ற பொருளைப் பிறருக்கு ஈந்து புகழ் படைக்க விரும்புவோன் இரப்போர்க்கு முற்றும் வழங்கிவிடுதலின், அப்பொருள் அவனை நீங்குதல் போலப் பசலை நின்னைவிட்டு நீங்குமென்றாள்;

  
“நிலையிலா வுலகி னின்றவண் புகழை 
  
 வேட்டவ னிதியமே போன்றும் 
  
 ...... ....... ....... ....... 
  
 உலைவிலார் நில்லா தொருபக லுள்ளே 
  
 யுருப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்”        (சீவக. 2107) 

என்று பிறரும் இக்கருத்தை உவமையாக ஆளுதல் காண்க. ‘புகழை விரும்பினவன் கையிற் பொருள் போமாறு போலேயும்’ என்று இப்பாடலுக்கு உரையெழுதினார் நச்சினார்க்கினியர்.

‘நின் பசப்புத் தங்குதற்குரியதன்று’ என்றதனால் போவதற்குரிய தென்பது பெறப்படும்: தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவிக்குப் பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு; இதனை இந்நூல் 399-ஆம் செய்யுளால் நன்குணரலாகும். பசலை நீங்குமென்று தோழி கூறியது. இந்நீக்கத்திற்குக் காரணமாகிய தலைவர் வரவு உண்டாகுமென்னும் கருத்தை நினைந்தே.

     அம் கலுழ்மேனி யென்றது பசலை பரவாது இயல்பான அழகுடன் நின்ற மேனியை; அழகுதான் தங்குதற்குரியது, அதனை மறைக்கும் பசலை தங்குதற்குரியதன்றென்பதை இவ்வடையினால் உணர வைத்தாள்.

     பசப்பு - பசலை. ஏகாரம் அசை நிலை.

     மேற்கோளாட்சி மு. தோழி தலைமகள் ஆற்றுவித்தது (தொல். களவு. 24, இளம்.); தோழி இயற்பட மொழிந்து தலைவியை வற்புறுத்தியது (தொல். களவு. 23. ந..)

     ஒப்புமைப் பகுதி 1. பி-ம். தலைவன் அன்புடையன்: குறுந். 37:1, 213:1.

     2. தலைவன் பழியஞ்சுதல்; குறுந். 252:8. பயமலை: மணி.17:50; பெருங்.2. 18:3. பயமலை நாடன்: கலி. 43:6.

     3-4. உலகின் நிலையாமையும் புகழின் நிலைபேறும்: “நில்லா வுலகத்து நிலைமை” (பொருந. 176, பெரும்பாண். 466); “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே” (புறநா.165:1-2); “மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சைவாணன்” (தஞ்சை. 21.)

     புகழின் நிலை பேறு: மலைபடு. 70, அடிக்.

     7. அங்கலுழ் மேனி: “அங்கலி ழாகம்”, “அங்கலிழ் மேனி” (ஐங். 106:4, 174:4); “அங்கலுழ் மாமை” (அகநா. 41:15, 96:12); “அங்கலுழ் மேனியாய்” (சீவக. 1988.)

(143)