(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.)
 144.   
கழிய காவி குற்றுங் கடல 
    
வெண்டலைப் புணரி யாடியு நன்றே 
    
பிரிவி லாய முரியதொன் றயர 
    
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப் 
5
பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ 
    
சென்மழை தவழுஞ் சென்னி 
    
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே. 

என்பது மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன் (பி-ம். மதுரை நூலாசிரியன், மதுரைப்பாலாசிரியன்.)

     (பி-ம்.) 1. ‘கழியா’, ‘கழியிற்’; 4. ‘இல்வழி’; 5.’பரல்பாற்’, ‘பால்பரற்’, ’பரலலாற்’; 6. ‘சேண்மழை’; 7. ‘மலைநாடே’.

     (ப-ரை.) கழிய காவி குற்றும் - கழியினிடத்து மலர்ந்த காவிமலர்களைப் பறித்தும், கடல வெள்தலை புணரி ஆடியும் - கடலிலுள்ள வெள்ளிய தலையையுடைய அலையின்கண் விளையாடியும், நன்று - மிக, பிரிவு இல் ஆயம் - தன்னோடு என்றும் பிரிதலில்லாத ஆயத்தார், உரியது ஒன்று அயர - தத்தமக்கு உரிய விளையாட்டைப் புரிய, இ வழி படுதலும் ஒல்லாள் - இவ்விடத்துப் பொருந்துதலுக்கும் உடம்படாளாகி, செல் மழை தவழும் சென்னி - விரைந்து செல்லும் மேகங்கள் தவழ்கின்ற உச்சியையுடைய. விண் உயர் பிறங்கல் - வானத்தளவும் உயர்ந்த விளக்கத்தையுடைய, விலங்குமலை நாட்டு - குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டில், அ வழி - அப்பாலை நிலத்தில், பரல் பாழ் படுப்ப - பருக்கைக்கற்கள் தன் அடியின் அழகைச் சிதைக்கும் வண்ணம், சென்றனள் - தலைவி போயினள்.

     (முடிபு) ஆயம் அயர இவ்வழிப்படுதலும் ஒல்லாள்; விலங்கு மலைநாட்டில் அவ்வழிச் சென்றனள்.

     (கருத்து) தலைவி நம்மைப் பிரிந்து தலைவனுடன் சென்றனள்.

     (வி-ரை.) பிரிவில் ஆயமென்றாள் அதனையும் பிரிந்தனளென்று நினைந்து. உரியதொன்று அயர - தலைவிக்கு உரியதொரு செயலைப் புரிய என்றலுமாம்.

     பால் பரற்படுப்ப என்ற பாடத்திற்கு ஊழ்வினை தன்னைப் பாலை நிலத்துப் பருக்கைக் கற்களினிடையே செல்லும்படி செய்யவென்று பொருள்கொள்க. மாது, ஓ: அசை நிலைகள்.

     செல் மழை - இடியையுடைய மேகமெனலும் ஒன்று. விண்ணளவும் உயர்ந்ததாகலின், விரைவாகச் செல்லும் மேகம் அம்மலையினால் தடையுற்றுத் தவழ்ந்தேறியது. பிறங்கல் - விளக்கம்; (பிறங்கு கல், பிறங்கலென விகாரம்; வழியுயர்ச்சியுமாம்’ (8:13, உரை) என்பர் அகநானூற்றுரை யாசிரியர்.

     பரல் பாழ்படுப்பச் சென்றனளென்றது தலைவியின் மென்மைத் தன்மைக்கு இரங்கியவாறு.

     ஒப்புமைப் பகுதி 1. கழிப்பூக் குறுதல்: “கழிப்பூக் குற்றும்” (அகநா. 330:1.)

     மகளிர் பூக்குறுதல்: குறுந். 142:1, ஒப்பு.

     2. மகளிர் கடலாடுதல்: “வெண்டலைப் புணரி யாயமொடாடி”, “தொடலை யாயமொடு கடலுட னாடியும்”, “திரையுழந் தசைஇய நிரைவளை யாயம்” (அகநா.20:8, 110:6, 190:1.)

     வெண்டலைப் புணரி: அகநா.20:8; புறநா.2:10, 55:18.

     5. பரல் பாழ்படுத்தல்: “பரற்பகை யுழந்த நோயொடு சிவணி” (பொருந.44.); “பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல், விரனுதி சிதைக்கு நிரைநிலை யதர, பரன்முரம் பாகிய பயமில் கானம்” (அகநா. 5:13-5); “பரல்வடுப் பொறிப்ப” (பெருங். 2:9:162.)

     6. விண்ணுயர் பிறங்கல் மலை: “வானுயர் பிறங்கன்மலை” (குறுந். 285:8.)

     விலங்கு மலை நாடு: குறுந். 134:7.

(144)