(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனாவிற் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)
 147.   
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன 
    
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை 
    
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல 
    
இன்றுயி லெடுப்புதி கனவே 
5
எள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே. 

என்பது தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது.

     (தலைவன் பிரிவின்கண் கனாவிற் றலைவியைக் காண்டல்: தொல். பொருளியல், 3; ஐங். 324.)

கோப்பெருஞ் சோழன்

     (பி-ம்.) 2. ‘மயிரோவொழுகிய’, ‘மயிரொடு வொழுகிய’; 4. ‘லெழுப்புதி’.

     (ப-ரை.) கனவே-, வேனில் பாதிரி கூன் மலர் அன்ன - வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினது துய்யைப் போன்ற, மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை - மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும், நுண்பூண் - நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய, மடந்தையை - தலைவியை, தந்தோய் போல - கொணர்ந்து கொடுத்தாயைப் போல, இன்துயில் எடுப்புதி - இனிய துயிலினின்றும் எழுப்பு கின்றாய், துணை பிரிந்தோர் - தம் துணைவியரைப் பிரிந்தோர், எள்ளார் - நின்னை இகழார்.

     (முடிபு) கனவே, இன்றுயில் எடுப்புதி; துணைப் பிரிந்தோர் எள்ளார்.

     (கருத்து) தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு யாது கைம்மாறு செய்வேன்!

     (வி-ரை.) பாதிரி வேனிற்பருவத்தே மலர்வதென்பது, ‘வேனிற்கட் பாதிரி’ (நன். 300, மயிலை.) எனவும், ‘வேனிற்கட்பூத்தது பாதிரி’ (நன். 301, சங்.) எனவும் காட்டப் பெற்ற உதாரணங்களால் விளங்கும். பாதிரியின் மலர் வளைந்திருப்பதாதலின் கூன் மலரென்றான்; “பைங்கூற் பாதிரிப் போது” (பெருங். 1. 42 : 204) என்பது காண்க. மலர்: ஆகுபெயர். பாதிரிமலரிலுள்ள துய் மயிரென்றும் வழங்கும்.; “பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்” (நற். 337:4.) பாதிரிமலரின் துய் தலைவியின் வயிற்றினிடத்தேயுள்ள மயிரொழுங்கிற்கு உவமை; “எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற், றைதுமயி ரொழுகிய தோற்றம்” (பொருந. 6-7) என்று வருணிக்கப்படுதல் காண்க. நுண்பூ ணென்றது, “நூலாக்கலிங்கம்” (பதிற். 12:21) என்பது போலப் பூணின் சினையாகிய சிற்பத்தின் அடை சினையோடு முதற்கு உள்ள ஒற்றுமை பற்றி முதல் மேலேற்றிக் கூறப்பட்டது. மடந்தை யென்றது பருவங் குறியாது தலைவியென்னும் மாத்திரையாய் நின்றது. பிரிந்த தலைவர் தம் தலைவியரைக் கனவிற் காண்டல்,

  
“பிரியாப் பெருக்கத்துப் பிரச்சோ தனன்மகள் 
  
   ........ ........ ......... ....... 
  
 நனவிற் போலக் காதலன் முகத்தே 
  
 கனவிற் றோன்ற”                        (3.9:151-7) 

என்னும் பெருங்கதைப் பகுதியாலும் விளங்கும். எடுப்புதல் - எழுப்புதல்; “துயிலெடை நிலை”(தொல். புறத். 36.) கனவே: விளி பிரிந்தோரே: ஏ அசை நிலை.

     கனவு, உண்மையில் தலைவியைத் தந்திலதாதலின் தந்தோய் போலவென்றான். தலைவியைப் பிரிந்தமையால் துன்புற்றுத் துயிலாமையே பெரும்பாலும் உடையான் அரிதிற் பெற்ற துயிலாதலின் இன்றுயி லென்றான். துயிலுங்கால் தலைவியைக் கனவிற்கண்டு பொருக்கென விழித்தவனாதலின் அங்ஙனம் துயிலினின்றும் எழுதற்குக் கனவைக் காரணமென்றான். இனிய துயிலை நீப்பதற்குக் காரணமாகி எள்ளுதற் குரியதாயினும் அதனினும் இனிய தலைவியின் தோற்றத்தைத் தந்ததாதலின் எள்ளாரம்ம வென்றான். எள்ளாரென்றது புகழ்வாரென்றபடி. துணைப் பிரிந்தோரென் றமையின் தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் இந்நிலை பொதுவென்று கொள்க.

     ஒப்புமைப் பகுதி 1. வேனிற் பாதிரி மலர்: “காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற், பாசிலை யொழித்த பராரைப் பாதிரி, வள்ளிதழ் மாமலர்” (பெரும்பாண். 3-5); “செங்க ணிருங்குயில், புகன்றெதி ராலும் பூமலி காலையும் ........ ........ ......... ....... துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி, வாலித ழலரி வண்டுபட வேந்திப், புதுமலர் தெருவுதொறு நுவலும்”, “முதிரா வேனி லெதிரிய வதிரல், பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்” (நற். 118:9, 337:3-4); “புன்காற் பாதிரி யரிநிறத் திரள்வீ, நுண்கொடி யதிரலொடு நுணங்கறல் வரிப்ப..... ........ ........ ......... ....... குயில் குரல் கற்ற வேனிலும்”, “கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ, வேனலதிரலொடு விரைஇ” (அகநா. 237:1-5, 261:1-2.)

    பாதிரிக் கூன்மலர்:“வேனிற் பாதிரிக் கூனி மாமலர்” (அகநா. 257:1.)

    2.அங்கலுழ் மாமை: அகநா. 41:15, 96:12.

     மயிரேர்பு ஒழுகிய மாமை: “மடந்தை மாண்ட நுடங்கெழிலாகத், தடங்குமயி ரொழுகிய வவ்வாய்” (மலைபடு. 31-2.)

     4. தலைவன் கனாக் காண்டல்: கலி. 24:7; “பரந்துபடுபாய னவ்வி பட்டென, இலங்குவளை செறியா விகுத்த நோக்கமொடு, நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண், டின்னகை யினைய மாகவு மெம்வயின், ஊடல் யாங்குவந் தன்றென யாழநின், கோடேந்து புருவமொடு குவவுநுதனீவி, நறுங்கதுப் புளரிய நன்ன ரமயத்து, வறுங்கை காட்டிய வாயல் கனவு” (அகநா. 39 : 16-23.)

(147)