(தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவிக்கு அதனைத் தெரிவிப்ப, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; புல்லினால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தன் உடம்பாட்டைத் தெரிவித்தது.)
 150.   
சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி 
    
வான மீனின் வயின்வயி னிமைக்கும் 
    
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம் 
    
உள்ளி னுண்ணோய் மல்கும் 
    
புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய். 

என்பது இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது.

மாடலூர் கிழார்.

     (பி-ம்.) 2. ‘வாஅன் மீனின்’; 4. ‘உண்ணோய் மிகுமினி மல்கும்’.

     (ப-ரை.) அன்னாய் - தோழியே, சேணோன் - மரத்தின் உச்சியிற் பரணின் மீது இருக்கும் குறவன், மாட்டிய - கொளுத்திய, நறு புகை ஞெகிழி - நன்மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது, வானம் மீனின் - வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல, வயின் வயின் இமைக்கும் - இடந்தோறும் ஒளியை வீசும், ஓங்கு மலைநாடன் - ஓங்கிய மலை நாட்டையுடைய தலைவனது, சாந்து புலர் அகலம் - பூசிய சந்தனம் புலர்ந்த மார்பினை, உள்ளின் உள்நோய் மல்கும் - யான் நினைத்தால் என் உள்ளத்தின்கண் காமநோய் பெருகும்; புல்லின் - அம் மார்பை அணைந்தால், மாய்வது எவன் - அந்நோய் இல்லையாதல் என்ன ஆச்சரியம்!

     (முடிபு) அன்னாய், நாடன் மார்பு உள்ளின் நோய் மல்கும்; புல்லின் மாய்வது எவன்?

     (கருத்து) தலைவனைக் கண்டு அளவளாவினாலன்றி என் நோய் தீர்வதில்லை.

     (வி-ரை.) சேணோன் - மலைமிசை யுறையும் குறவனென்பர் (மதுரைக். 294, ந.); “கலிகெழு மரமிசைச் சேணோன்” (குறிஞ்சிப். 40) என்பதனால் இவன் மரத்தின் மீது இருப்பவனென்பது விளங்கும். வேங்கை மரத்தின் மீது கட்டப்பட்ட பரணிலும், யானையாலும் எட்டமுடியாதபடி குன்றின் மீது கட்டப்பட்ட பரணிலும் இருப்பவனாதலின் இவன் சேணோனெனப்பட்டான். மாட்டிய - மடுத்து எரிக்கப்பட்ட (புறநா. 108:1. உரை.) சந்தன மரம் முதலியவை எரிக்கப்பட்டமையின் நறும்புகை ஞெகிழி யென்றாள்; “நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை” (குறுந். 339:1); “குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி, ஆர மாதலி னம்புகை” (புறநா. 108: 1-2); “ஈரமில் குறவ ரிதண்மிசைப் பொத்திய, ஆரத் துணியொடு காரகில் கழுமிய, கொள்ளிக் கூரெரி” (பெருங். 1. 50: 17-19) என்பவற்றாலும் இது விளங்கும். பன்றி (அகநா. 88: 4-6), யானை (நற். 393, 4-5) முதலியன புனத்தை மேய வராதபடி காள்ளியேற்றுவது இயல்பு. ஞெகிழிக்கு வானமீன் உவமையாக இந்நூல், 357-ஆம் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. ஞெகிழி இரவில் ஒளி விடுவதை நோக்கித் தலைவன் வருவதை, (அகநா. 88: 5-7) ‘ஞெகிழி வயின் வயின் இமைக்கு நாடன்’ என்பதனாற் குறிப்பித்தாள். தலைவன் இரவுக் குறிக்கண் சந்தனம் பூசி வருதல் இயல்பாதலின், சாந்து புலரகலம்’ என்றாள். கொல்: அசை நிலை.

     மேற்கோளாட்சி சேணோனென்பது மரத்தின் உச்சியில் இராக்காலத்தில் ஆகாயத்தில் இருப்போனென்று பொருள்படும் (குறிஞ்சிப். 49, ந.) 5. தோழியைத் தலைவி அன்னாயென்றது (தொல். பொருளியல், 52, ந.) மு. தலைவன் அளி சிறந்த வழித் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 21, இளம், தொல். களவு. 20, ந.); தோழிமுன் தலைவிக்கு வேட்கைக்கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 27, ந.); தலைமகள் இரவுக்குறி நேர்ந்து பாங்கியொடுரைத்தது(நம்பி. 158.)

     ஒப்புமைப் பகுதி 1. சேணோன்: “சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பு” (மதுரைக். 294); “கழுதிற் சேணோன்” (மலைபடு. 243); “சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதின்” (நற். 276:5); “ஏனலஞ் சிறுதினைச் சேணோன் கையதைப், பிடிக்கை யமைந்த கனல்வாய்க் கொள்ளி”, “கல்லுயர் கழுதிற் சேணோன்” (அகநா. 73: 14-5, 392:14); “கலிகெழு மீமிசைச் சேணோ னோதையும்” (சிலப். 25:30.)

     (கு-பு. பலவிடங்களிலுமுள்ள ஆட்சியை நோக்கும்போது சேணென்பது ஆகுபெயர் வகையாற் பரணுக்கே உரிய பெயராக வழங்கிய தென்று தோற்றுகின்றது.)

     ஞெகிழி மாட்டல்: “நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டி” (மலைபடு. 446.)

     சேணோன் மாட்டிய ஞெகிழி: (குறுந். 357: 5-6); “கானவனெறிந்த கடுஞ்செலன் ஞெகிழி” (நற். 393:5.)

     3. தலைவன் சந்தனம் பூசி வருதல்: குறுந். 161:6, 198:7, 321:1; கலி.52:7, 15.

     4. உள்ளின் உண்ணோய் மல்கும்: குறுந். 102:1.

     5. எவன் கொலன்னாய்: ஐங். 21:4, 30:4, 216:6, 217:4, 219:4. தோழியைத் தலைவி அன்னை யென்றல்: குறுந்.33:1.

(150)