தூங்கலோரி. (பி-ம்.) 1. ‘வங்கர்கடந்த’, ‘கடிந்த’, ‘கிடந்த’; 2. ‘விழந்தெனக்’; 3. ‘குறும்பல மிகவும்’; 4. ‘குன்றுறு’; 6. ‘டின்மைக்கு’.
(ப-ரை.) நெஞ்சே-, வங்கா கடந்த - ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த, செ கால் பேடை- சிவந்த காலையுடைய பெண் பறவை, எழால் உற வீழ்ந்தென - புல்லூறென்னும் பறவை தம் மேல் நெருங்க இரையாகக் கொள்ளும் பொருட்டு வீழ்ந்ததாக, கணவன் காணாது - தம்முடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல், குழல் இசை குரல - வேய்ங் குழலினது இசையைப் போன்ற குரல்களை யுடையனவாய், குறு பல அகவும் - குறிய பல ஒலிகளால் அழைக்கும், குன்று கெழு சிறு நெறி - குன்றைப் பொருந்திய சிறிய வழிகள், அரிய என்னாது - கடத்தற்கு அரியன வென்று எண்ணாமல், மறப்பு அரு காதலி ஒழிய - மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்க, இறப்பல் என்பது - நான் செல்வேனென்று துணிவது, ஈண்டு - இங்கே, இளமைக்கு முடிவு -நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.
(முடிபு) நெஞ்சே, சிறுநெறி அரிய என்னாது காதலியொழிய இறப்ப லென்பது இளமைக்கு முடிவு.
(கருத்து) இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன்.
(வி-ரை.) நெஞ்சென்னும் முன்னிலை முன்னத்தால் வருவிக்கப்பட்டது. வங்கா - ஒருவகைப் பறவை (தொல். உயிர் மயங்கு. 23, ந. மேற்.); “வங்கா வரிப்பறை” (நற். 341:1); இது வக்காவெனவும் வழங்கும் (குற்றாலக் குறவஞ்சி.) எழால் - புல்லூறென்னும் பறவை; “மயிலு மெழாலும் பயிலத் தோன்றும்” (தொல். மரபு. 43) என்பதனாலும், “போத்தொடு வழங்கா மயிலு மெழாலும் “ என்னும் அதன் மேற்கோளாலும் விளங்கும். கணவனென்பது அஃறிணைக்கும் வரும்; “கயந்தலை மடப்பிடி, வலிக்குவரம் பாகிய கணவ னோம்பலின்” (மலைபடு. 307-8), “பைங்கட் செந்நாய், மாயா வேட்டம் போகிய கணவன், பொய்யா மரபிற் பிணவு நினைந் திரங்கும்” (நற். 103: 6-8), “நிறைச்சூல் யாமை... முட்டை, பார்ப்பிட னாகுமளவைப் பகுவாய்க் கணவ னோம்பும்” (அகநா. 160: 5-8) என்பவற்றால் இது விளங்கும். குறும்பல - தன்னுடைய குறிய பல குஞ்சுகளை யெனினும் ஆம்; “தேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும், வண்டுகடிந் தோம்ப றேற்றாய்” (அகநா. 256: 8-7.) குறிஞ்சி திரிந்த பாலை நிலமாதலின், ‘குன்று கெழு சிறு நெறி’ என்றான். மறப்பருங் காதலி யென்றது அவள் குணங்கள், இடைச்சுரத்தே செல்லினும் நினைத்தற் குரிய வாதல் பற்றி (ஐங். 321-3, 325-7.)
இளமைக் காலத்தே தலைவியோடிருந்து இன்புற வேண்டும்; பொருள் தேடச் சென்றால் அது முற்றும் வரையில் பிரிவு நேர்வதால் அதற்குள் இளமை கழியும்; இளமை கழியுமேல் அவ்வின்பம் கைகூடாதென்று கருதியவனாதலின், இறப்பலென்பது இளமைக்கு முடிவென்றான்.
முடிவே: ஏகாரம் தேற்றம்; அசைநிலையுமாம்.
ஒப்புமைப் பகுதி 2. எழால் : (பதிற். 36:10, அகநா. 103:1); “சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும், நெறியரு நீள்சுரத்து” (திணைமொழி.15.)
3. குறும்பல: நற்.261:4; புறநா: 159:3; சிலப். 10:39, 12:3.
4. குன்று கெழு சிறு நெறி: “வரைசேர் சிறுநெறி” (அகநா. 123:3)
6. பொருட்பிரிவு இளமையின்பத்தைக் கெடுக்கும்: குறுந். 126:1, ஒப்பு; நற்.46; கலி.18: 7-8.
5-6. “மறப்பருங் காத லிவளீண் டொழிய, இறப்பத் துணிந்தனிர்” (கலி. 2; 9-10.)
(151)