(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தமை யறிந்த தலைவி, "இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி வருந்தியது.)
 155.   
முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர் 
    
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் 
    
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான் 
    
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி 
5
மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு 
    
மாலை நனிவிருந் தயர்மார் 
    
தேர்வரு மென்னு முரைவா ராதே. 

என்பது தலைமகள் பருவங்கண்டு அழிந்து சொல்லியது.

உரோடகத்துக் கந்தரத்தனன் (பி-ம். ஒரோடகத்துக் காரத்தனார்.)

     (பி-ம்.) 6. தயர்வர்; 7. மென்முன், மென்னுமுன்னுரை.

     (ப-ரை.) முதை புனம் கொன்ற - பழங்கொல்லையை உழுத, ஆர்கலி உழவர் - மிக்க ஆரவாரத்தையுடைய உழவர்களுடைய, விதை குறு வட்டி - காலையிலே விதைக்கும் பொருட்டு விதையை எடுத்துச் சென்ற சிறிய வட்டிகள், போது பொதுள - விதைத்து விட்டு வீட்டிற்கு மீளும் பொழுது மலர்கள் நிறையும்படி, பொழுது வந்தன்று - மாலைப் பொழுது வந்தது, மெழுகு ஆன்று - அரக்காற் செய்த கருவில் அமைத்து, ஊது உலை பெய்த - ஊதுகின்ற கொல்லனுலையின்கண் பெய்து இயற்றிய, பகுவாய் தெள் மணி - பிளவுபட்ட வாயையுடைய தெளிந்த ஓசையையுடைய மணிகள், மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப - மரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டிடத்து ஒலிக்கும்படி, சுரன் இழிபு - அருவழியைக் கடந்து, மாலை நனி விருந்து அயர்மார் - மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு வரும் தலைவருடைய, தேர் வரும் என்னும் உரை வாராது - தேர் வருகின்ற தென்று கூறும் உரை வந்திலது.

     (முடிபு) பொழுதோ வந்தன்று; விருந்தயர்மார் தேர் வருமென்னும் உரை வாராது.

     (கருத்து) மாலைக் காலம் வரவும் தலைவர் வந்திலர்.

     (வி-ரை.) முதை - பழமை, பழைய கொல்லையில் உள்ள மரங்களை வெட்டி உழுதுவிட்ட இடத்திற் பருவமறிந்து விதைக்கும் பொருட்டு உழவர் சென்றனர்; "நறைபடர் சாந்த மறவெறிந்து நாளால், உறையெதிர்ந்து வித்தியவூ ழேனல்" (திணைமா.1) என்பதனால் உணர்க. இதனால் மழைக்குரிய கார்ப்பருவம் வந்ததென்பது பெறப்படும்.

     வட்டி - பனையோலை முதலியவற்றால் முடையப் பெற்ற சிறு பெட்டி. போதொடு: ஒடு இசை நிறைப் பொருளில் வந்தது.

     காலையில் விதைக்கும் பொருட்டுச் சென்ற உழவர் மாலைக் காலத்தில் மீள்கையில் தாம் விதையைக் கொண்டு சென்ற வட்டிகளில் வழியிற் பூத்த முல்லைப் பூவைக் கொணர்ந்தனர். போதென்றது இங்கே முல்லைப் போதை; கார்காலத்து மாலையில் மலர்வது அதுவேயாதலின். பொழுது - தலைவர் கூறிய கார்காலத்து மாலைப் பொழுது. பொழுதோ: ஓகாரம் அசைநிலை; பிரிநிலையுமாம். தான், ஏ: அசை நிலைகள். தெண்மணி: தெள்ளென்ற அடை மணியொலியைக் கருதியது. இறும்பு - செய்கா டென்பாரும் உளர் (திருச்சிற். 148, பேர்.)

     மணி தேரில் உள்ளது. அயர்மார் - அயர்பவர்; "தந்தொழின் முடிமார்" (முருகு. 89) என்ற விடத்து முடிமாரென்பதற்கு முடிப்பாரென்று நச்சினார்க்கினியர் உரையெழுதி யிருத்தல் காண்க; அயர்மார் - நாம் அயரும் பொருட்டு எனலுமொன்று.

     தலைவர் மீண்டுவரின் தலைவியர் விருந்தயர்தல் மரபு; "அரும் பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு" (குறுந். 398:6) என வருதல் காண்க.

     மேற்கோளாட்சி 1-2. ஒடு வென்னும் இடைச்சொல் இசைநிறைப் பொருளில் வந்தது (நன். 435, மயிலை, 436, சங்; இ.வி.272.)

     1-3. பிரிநிலை யேகாரம் வந்தது (நன். 422, மயிலை.)

     மு. தலைவி பொழுது கண்டு மகிழ்ந்து கூறியது (தொல். கற்பு. 6, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. முதைப்புனம்: "முதைச்சுவல்" (குறுந். 204:3); "முதையலங் காட்டு", "முதைச்சுவன் மூழ்கிய கான்" (அகநா. 5:8, 359:14.)

     2. விதைக்குறு வட்டி: "வித்தொடு சென்ற வட்டி" (நற். 210:3.) வட்டி: ஐங். 47:2, 48:2.

     1-2. "விதையர் கொன்ற முதையற் பூழி" (நற். 121:1.)

     4. ஊதுலை: மணி. 2:43.

     பகுவாய்த் தெண்மணி : குறுந். 279:2.

     5. மரம்பயில் இறும்பு: பெரும்பாண்.495; அகநா. 92:8, 137:10, 238:1, 368:9.

     6. தலைவன் வரவுகுறித்து விருந்தயர்தல்: "பூண்கதில் பாகநின் றேரே, .... அரிவை, விருந்தயர் விருப்பொடு வருந்தினளசைஇய, முறுவலின்னகை காண்கம்", "நெடுநா வொண்மணி பாடுசிறந் திசைப்ப, மாலை மான்ற மணன்மலி வியனகர்த், தந்தன நெடுந்தகை தேரே யென்றும், அரும்பட ரகல நீக்கி, விருந்தயர் விருப்பினடிருந்திழை யோளே" (நற். 81:9, 361: 5-9); "விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத், தடமென் பணைத்தோண் மடமொழி யரிவை... செல்லு நெடுந்தகை தேரே, முல்லை மாலை நகர்புக லாய்ந்தே", "மனைக் கொண்டு புக்கன னெடுந்தகை, விருந்தேர் பெற்றன டிருந்திழை யோளே" (அகநா. 324:1-15, 384:13-4); "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து, மாலை யயர்கம் விருந்து" (குறள், 1268.)

     4-7. தலைவன் மணியொலிக்கத் தேரில் வருதல்: (குறுந். 336: 3-4); "காமம் பெருமையின் வந்த ஞான்றை........ ........ ........ ........ தேர்மணித் தெள்ளிசை கொல்லென" (நற்.287:7-10); "தாதுண் பறவை பேதுற லஞ்சி, மணிநா வார்த்த மாண்வினைத் தேரன், உவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்’ (அகநா.4:11-3.)

     3-7.பொழுது வந்தது, தலைவர் வந்திலர்: ஐங்..341-50.

(155)