(தலைவன் கேட்கும் அணிமையிலே நின்றானாக, “தலைவியின் துயரத்தை உணர்ந்து இரங்காதாரை யுடையதாயிற்று இவ்வூர்” என்று கூறும் வாயிலாகத் தலைவியை இற்செறிக்கக் கருதி யிருப்பதைத் தோழி அவனுக்குப் புலப்படுத்தியது.)
 159.   
தழையணி யல்கு றாங்கல் செல்லா 
    
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக 
    
அம்மெல் லாக நிறைய வீங்கிக் 
    
கொம்மை வரிமுலை செப்புட னெதிரின 
5
யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னும் 
    
அவல நெஞ்சமொ டுசாவாக் 
    
கவலை மாக்கட்டிப் பேதை யூரே. 

என்பது (1) தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது.

    (2) உயிர் செல வேற்றுவரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூ உமாம்.

    (“உயிர் செல வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும்” தலைவிக்குக் கூற்று நிகழுமென்பது (களவு. 20) தொல்காப்பிய விதி. இதன்பொருள்: ‘இறந்துபாடு பயக்கு மாற்றால் தன்றிறத்து நொதுமலர் வரையக் கருதிய ஞான்று அதனை மாற்றுதற்கு நிகழ்ந்த தலைவி கூற்று’)

வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.

    (பி-ம்) 2. ‘யல்குலுருங்கல்’; 3. ‘வீங்கிய’; 4. ‘வருமுலை’.

    (ப-ரை.) இ பேதை ஊர் - இந்தப் பேதைமையையுடைய ஊர், தழை அணி அல்குல் - தழையை அணிந்த அல்குலை, தாங்கல் செல்லா - பொறுத்தலாற்றாத, நுழை சிறு நுசுப்பிற்கு - நுணுகிய சிறிய இடைக்கு, எவ்வம் ஆக - துன்பம் உண்டாகும்படி, அ மெல் ஆகம் நிறைய வீங்கி - அழகிய மெல்லிய மார்பகம் நிறையப் பருத்து, கொம்மை வரி முலை - பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள், செப்புடன் எதிரின - செப்போடு மாறுபட்டன; பூ குழை - பூத் தொழிலையுடைய குண்டலத்தை யணிந்த தலைவி, யாங்கு ஆகுவள் - என்ன துன்பத்தையுடையள் ஆவளோ, என்னும் அவலம் நெஞ்சமொடு - என்று எண்ணும் கவலையையுடைய நெஞ்சத்தோடு, உசாவா - ஏனென்று கேளாத, கவலை மாக்கட்டு - கவலையையுடைய மாக்களை உடையது.

    (முடிபு) இப்பேதையூர் ‘பூங்குழை யாங்காகுவள்’ என உசாவாக் கவலைமாக்கட்டு.

    (கருத்து) என்தாய் முதலியோர் என் நிலையை உணர்ந்திலர்.

    (வி-ரை.) தழை - மகளிர் உடுக்கும் உடை விசேடம். தழையணியல்கு லென்றாள் தழையும் ஒருபொறை யென்பது கருதி. “தலைவி தக்க பருவத்தை அடைந்தனளே; இவள் கருத்து யாதோ? இவள் யாரிடத்தில் அன்பு பூண்ட தகைமையினளோ” என்று பிறர் உசாவ வேண்டுமென்பதுதோழி கருத்து. உசாவா - உசாவி ஆவன செய்யாத. கவலைமாக்கட் டென்றது, குறிப்புமொழி; சிறிதும் கவலையற்றவர்களென்னும் நினைவிற்று. தலைவியின் துயரறியும் அறிவின்மையின் மாக்களென்றாள்; மாக்களென்றது செவிலி முதலியோரை. பேதை யூரென்றது, ஊரிலுள்ளார் தலைவியின் நிலையுணராப் பேதைமை யுடையா ரென்றபடி.

    தலைவி பருவம் வாய்த்தாளென்னும் காரணம்பற்றி இற்செறிக்கப்படுவதை இதன் முதற் பகுதியால் தோழி உணர்த்தினாள்;

  
“முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின  
  
 தலைமுடி சான்ற தண்டழை யுடையை 
  
 அலமர லாயமொ டியாங்கணும் படாஅல 
  
 மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய 
  
 காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை 
  
 பேதை யல்லை மேதையங் குறுமகள் 
  
 பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென 
  
 ஒண்சுடர் நல்லி லருங்கடி நீவி”              (அகநா. 7)  

என்புழிப் பருவம் வந்த தலைமகளை இற்செறித்துக் காக்கும் செய்தி காணப்படும்.

    கொல், ஏ: அசை நிலை.

    இரண்டாவது கருத்து: நொதுமலர் வரைவு நேரின் இவள் எந்நிலையினளாவளெனச் சிறிதும் ஆராயாத மாக்களையுடையது என்று பொருள் கொள்க.

    (மேற்கோளாட்சி) மு. தலைவனோடு தன்திறத்து ஒருவரும் ஒன்று உரையாத வழித் தனது ஆற்றாமையால் தன்னோடும் அவனோடும் பட்டன சில மாற்றம் தலைவி தானே கூறியது (தொல். களவு.21, இளம், 20, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. மகளிர் தழையுடை யணிதல்: குறுந். 125:3,

     ஒப்புமைப் பகுதி 2. நுழை சிறு நுசுப்பு: குறுந். 71:3.4. கொம்மை வரிமுலை: ‘அகநா. 65:1); “கொம்மை வெம்முலை”, “கொம்மையார்ந்தன... விழுத்தகு முலைத்தடம்” (சீவக. 347, 2364.)

    நகிலுக்குச் செப்பு: “முலையும், சூழி மென்முகஞ் செப்புட னெதிரின” (அகநா. 315:1-2); “தாமச் செப்பிணை: (சீவக. 171.)

    5. யாங்காகுவள் கொல்: (குறுந். 337:6); “யாங்கா குவென்கொ லளியேன் யானே” (நற். 152:9); “யாங்கா குவங்கொல் பாண”, “யாங்கா குவள்கொ றானே” (அகநா. 14:13, 260:11.)

    6-7. குறுந். 145: 4-5.

(159)