(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று கூறி ஆற்றுவித்தது.)
 16.    
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் 
     
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்  
     
உகிர் நுதி புரட்டு மோசை போலச்  
     
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்  
5
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே. 

என்பது பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ.

    (பி -ம். ) 1.‘கானவர்’, ‘கணவர்தம்’; 2. ‘காண்மார்’

    (ப-ரை.) தோழி -, கள்வர் - ஆறலை கள்வர், செப்பம் கொண்மார் - செப்பஞ் செய்யும் பொருட்டு, தம் பொன் புனை பகழி - இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை, உகிர் நுதி - நக நுனியிலே, புரட்டும் ஓசை போல -புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல, செ கால் பல்லி - செம்மையாகிய காலை உடைய ஆண் பல்லியானது, தன் துணைபயிரும் - தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய, அம் கால் - அழகிய அடியை உடைய, கள்ளியங்காடு இறந்தோர் - கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள்வயிற் சென்ற தலைவர், உள்ளார் கொல் - நம்மை நினையாரோ?

    (முடிபு) தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?

    (கருத்து) தலைவர் விரைவில் வந்து விடுவர்.

    (வி-ரை.) பொன் என்றது இரும்பை; ‘‘பொன்னிற் புனை தோட்டியான்’’, ‘‘விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகை’’(புறநா.14:3, 15:12) என்பவற்றையும் அவற்றின் உரைகளையும், ‘‘மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப், பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே’’(தொல்.புறத்.35, ந.மேற்.) என்பதையும் பார்க்க. செப்பம் என்றது இங்கே கூர்மையை, பலகாலும் வழிப்போவாரை எய்து மழுங்கியதாதலின் அம்பு செப்பங்கொள்ள வேண்டுவதாயிற்று; ‘‘கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்’’ (குறுந்.12:3) என்று முன்னும் கூறப்பட்டது. பயிர்தல் - அழைத்தல்; ‘‘புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும், அத்தம்’’ (குறுந்.79:4-5.) அங்காற்கள்ளி என்றாள், அகில் உண்டாதலின்; ‘‘அகில்படு கள்ளியங் காடிறந் தோரே’(ஐங். அதிகப்பாட்டு) பாலை நிலத்தில் உள்ள கள்ளியில் பல்லி இருந்து ஒலிக்கும் செய்தி,

  
‘‘கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க் 
  
 குறுவது கூறுஞ் சிறுசெந் நாவின் 
  
 மணியோர்த் தன்ன தெண்குரற் 
  
 கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே’’        (அகநா. 151:12-5) 

     பல்லி தன் துணையை அழைக்கும் பாலை நிலத்தில் செல்பவர் அது கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்; ஆதலின் நீ ஆற்றி இருப்பாயாக என்பது குறிப்பு.

     ஒப்புமைப் பகுதி1. உள்ளார்கொல்லோ தோழி: குறுந். 67:1, 232:1; நற். 241:1; ஐங். 456:1, அதிகப்பாடல் 1;4; அகநா. 235:2; 4. செங்காற் பல்லி; கலித். 11: 21; சீவக. 1909.

(16)