(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.)
 161.   
பொழுது மெல்லின்று பெயலு மோவாது 
    
கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப் 
    
புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி 
    
அன்னா வென்னு மன்னையு மன்னோ 
5
என்மலைந் தனன்கொ றானே தன்மலை 
    
ஆர நாறு மார்பினன் 
    
மாரி யானையின் வந்துநின் றனனே. 

என்பது இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்பு மிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

நக்கீரர்.

    (பி-ம்) 2.‘வீசுந் தன்றலை’;3. ‘புதல்வர்ப்’;4. ‘அன்னாயென்னும்’;7. ‘நின்றோனே’.

    (ப-ரை.) தோழி, பொழுதும் எல் இன்று - சூரியனும் விளக்கம் இலனாயினன்; பெயலும் - மழையும், ஓவாது - ஒழியாமல், கழுது கண்பனிப்ப - பேய்கள் கண்ணை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி, வீசும் - வேகமாகப் பெய்யும்; அதன் தலை - அதற்கு மேல், அன்னையும் - தாயும், புலி பல் தாலி - புலிப்பற் கோத்த தாலியை யணிந்த, புதல்வன் புல்லி - மகனைத் தழுவி, அன்னா என்னும் - அன்னையே யென்று என்னை விளிப்பாள்; அப்பொழுது, தன் மலை ஆரம் நாறும் மார்பினன் - தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன், மாரி யானையின் - மழையில் நனைந்த யானையைப் போல, வந்து நின்றனன் - இவ்வீட்டுப்புறத்தே வந்து நின்றான்; அன்னோ - அந்தோ! என் மலைந்தனன் கொல் - அவன் எதனைச் செய்ய மேற் கொண்டானோ!

    (முடிபு) பொழுதும் எல்லின்று: பெயலும் வீசும்; அன்னையும் அன்னாவென்னும்; மார்பினன் வந்து நின்றனன்; என் மலைந்தனன் கொல்?

    (கருத்து) நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.

    (வி-ரை.) பொழுது - சூரியன்; “முழுநீர்ப் பொய்கையிற் பொழுதொடு விரிந்த, செழுமலர்த் தாமரை” (பெருங். 2. 16: 32-3.) “எல்லுமெல்லின்று” (குறுந். 179:2, 390:1) என்று பின்வருவதுங் காண்க. “எல்லினிர் புகினே” (மலைபடு. 346) என்றவிடத்து நச்சினார்க்கினியர் ‘இராக்காலத்தை யுடையிராய்’ என எல்லினிரென்பதைக் குறிப்பு வினையாகக் கொண்டனர்; அதை ஆராய்கையில், எல்லின் றென்பதே இருண்ட தென்னும் பொருள்தரும் ஒரு சொல்லென்று கருதவும் இடமுண்டு. இராக்காலத்தில் பேய்கள் அச்சமின்றித் திரிவன; அவையும் கண்பனித்தன வென்பது பெயலின் கடுமை மிகுதியை உணர்த்தியது. புலிப்பற்றாலி - புலிப்பல்லைப் பொன்னிலமைத்துச் சிறுவர் மார்பிலணியும் ஓர் ஆபரணம்.

    ‘புதல்வனைப் புல்லிய தாய் அன்னாவென்று என்னையும் அழைத்தலின் நானும் அவளருகில் இருத்தல் இன்றியமையாததாயிற்று’ என்று தலைவி புலப்படுத்தினாள். அன்னையென்றது விளியேற்று, “முறைப் பெயர் மருங்கி னையெ னிறுதி, ஆவொடு வருதற் குரியவு முளவே” (தொல். விளி. 9) என்னும் விதிப்படி அன்னாவென வந்தது. புதல்வனைப் புல்லி அவனையே அன்னாவென்னுமென்று பொருள் கொள்ளுதலுமஒன்று. தலைவன் தன் மலையில் விளைந்த சந்தனத்தைப் பூசி வந்த காலத்தில் அதன் மணத்தை யறிந்தவளாதலின் அவன் புறத்தே வந்து நின்றானெனினும் அச் சந்தன மணத்தால் அவன் வரவை யறிந்தாள்.

    என் மலைந்தனன் கொலென்றது, அவன் நினைந்தது நிறைவேற வில்லையென்னும் நினைவிற்று. கொல்: ஐயம். தான், ஏ: அசை நிலைகள்.

    (மேற்கோளாட்சி) 1-4. தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலால் துயிலா நின்றுழியும் ஒன்று கூறிச் செவிலி அரற்றியது இது; ‘பொழுது மெல்லின் றென்பதனுள் புதல்வற்புல்லி அன்னாயென்று தலைவியை விளித்தது கனவின் அரற்ற லாயிற்று’ (தொல். களவு. 24, ந.)

    7.உவமையில் திணை மயங்கி வந்தது (தொல். உவம.6, பேர்.)

    5-7.. துஞ்சிச் சேர்தல் என்னும் மெய்ப்பாடு வந்தது;‘என்ன காரியம் மேற்கொண்டு வந்தானென்றமையின் இது துஞ்சிச் சேர்தலாயிற்று; அல்லாக்கால் அங்ஙனஞ் சொல்லுதல் அன்பழிவெனப்படும்’ (தொல். மெய்ப். 23, பேர்; இ.வி.580.)

    மு. காப்பு மிகுதிக்கண் மனையகப்பட்டுக் கலங்கி உணர்வு அழிந்த வழித் தலைவி ஆராய்ச்சி யுடையதாகிய அருமறையினைத் தோழிக்குக் கூறியது (தொல். களவு. 21, இளம், 20, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. பொழுதும் எல்லின்று; “எல்லின்று பொழுதே”(நற். 264:6, அகநா.224:1) “எல்லு மெல்லின்று” (குறுந். 179:2, 390:1); அகநா. 110;11, 370:2,

    3. புலிப்பற்றாலி: “புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி” (அகநா. 7:18); “புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்” (புறநா. 374:9); “மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற, மாலை வெண்பற் றாலி” (சிலப். 12: 27-8); “போதிற் பொலியுந் தொழிற்புலிப் பற்குரற் பொற்றொடியே” (திருச்சிற். 239.)

    6. ஆரம் நாறும் மார்பினன்: குறுந். 198:7, 321:1, கலி. 52:7,15. 5-6. நற். 344:5-7.

    7. யானை தலைவனுக்கு: குறுந். 244:2; அகநா. 308:15.

     மாரியானை: நற். 141:2

(161)