(தலைவியைப் பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட செயல் முடித்து மீளும்பொழுது வழியில் அரும்பியிருந்த முல்லையைப் பார்த்து, ‘நீ தனித்திருப்போரை நோக்கி அரும்பால் எள்ளி நகையாடல் தகுமோ?” என்று கூறியது.)
 162.   
கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்  
    
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை  
    
முல்லை வாழியோ முல்லை நீநின்  
    
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை  
5
நகுவை போலக் காட்டல்  
    
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.  

என்பது வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்குரைப்பானாய் உரைத்தது.

    (வினைமுற்றி - தான் தலைவியைப் பிரிந்து செல்லுதற்குக் காரணமான செயல் நிறைவேறப்பெற்று.)

கருவூர்ப் பவுத்திரன்.

    (பி-ம்) 1. ‘கார்புனந்’. ‘கார்ப்புனந்’, ‘வியன்புனத்துப்’; 2. ‘பல்லா ‘புகுதரும்’.

    (ப-ரை.) முல்லை - முல்லையே, வாழி - நீ வாழ் வாயாக. முல்லை - முல்லையே, கார் புறந்தந்த - மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற, நீருடை வியன்புலத்து - நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண், பலர் புகுதரும் புல் என் மாலை - பலர் தம் இல்லத்திற் புகும் ஒளியிழந்த மாலைக் காலத்தில், நீ நின் சிறுவெள் முகையின் - நீ நினது சிறிய வெள்ளிய அரும்புகளினால், முறுவல் கொண்டனை - புன்னகை கொண்டாய்; தமியோர் மாட்டு - தலைவியரைப் பிரிந்த தனிமையை யுடையோர்பால், நகுவை போல காட்டல் இது தகுமோ - எள்ளி நகைப்பாய் போலக் காட்டுதலாகிய இது நினக்குத் தகுமோ?

    (முடிபு) முல்லை, வாழி! முல்லை, புலத்து மாலையில் நீ முகையின் முறுவல் கொண்டனை; தமியோர் மாட்டு நகுவை போலக் காட்டல் தகுமோ?

    (கருத்து) நான் தலைவியைப் பிரிந்தமையை இகழ்ந்து என்னைச் சிரிப்பதுபோல் இம்முல்லைக் கொடிகள் பூத்தன.

    (வி-ரை.) கார் - பெய்யும் நிலையிலுள்ள மேகம். தம்தம் செயல் முடிந்து மாலையில் யாவரும் வீடு புகுவராதலின், ‘பலர் புகுதரூஉம் மாலை’ என்றான். தலைவியோடு சேரப் பெற்றிலனாதலின் அவனுக்குப் புல்லென் மாலையாயிற்று. காம மயக்கத்தால் முல்லையை நகைப்பது போலக் கொண்டு இது கூறினான்.

    வாழியென்றது குறிப்புமொழி. நகுதலாவது, இந்தக் கார்ப்பருவத்திலும் தலைவியைச் சேராது தனித்தனையே யென்று எள்ளி நகுதல். தமியோரென்று பன்மையிற் கூறினும் கருதியது தன்னையே யென்க.

    வாழியோ: ஓ அசை நிலை. மற்று, ஏ: அசைநிலைகள்.

    ஒப்புமைப் பகுதி 2. புல்லென் மாலை: அகநா. 234:14; பு.வெ. 296.

    3. முல்லையை முன்னிலைப்படுத்திக் கூறுதல்: “நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை” (தொல். அகத். 3, ந. மேற்.)

    2-3. மாலையில் முல்லை மலர்தல்: குறுந். 108:4-5, ஒப்பு.

    1-3. கார்புறந்தந்த புலத்து முல்லை: குறுந். 126:3, ஒப்பு.

    3-5. முல்லை நகுதல்: குறுந். 126: 3-5, ஒப்பு; 186: 2-3.

(162)