(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை யாற்றாளெனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை யான் அறிந்துள்ளேன்; பலர் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லுக. அதனால் யான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)
 170.   
பலருங் கூறுகவஃ தறியா தோரே 
    
அருவி தந்த நாட்குர லெருவை 
    
கயநா டியானை கவள மாந்தும் 
    
மலைகெழு நாடன் கேண்மை 
5
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே. 

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

கருவூர் கிழார்.

    (பி-ம்) 3. ‘கயனாடியானை’, ‘நன்கறிந்தனன்’.

    (ப-ரை.) தோழி, யான்-, அருவி தந்த -அருவியால் தரப்பட்ட, நாள் குரல் எருவை -காலத்தில் விளைந்த கொத்தையுடைய கொறுக்காந்தட்டையை, கயம் நாடு யானை -ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானையானது, கவளம் மாந்தும் - கவளமாக உண்ணும், மலைகெழு நாடன் கேண்மை -மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, தலைபோகாமை - கெடாமையை, நற்கு - நன்றாக, அறிந்தனென்; அஃது - அதனை, அறியாதோர் பலரும் - அறியாதோராகிய பலரும், கூறுக -தமக்குத் தோற்றியவற்றைக் கூறுக.

    (முடிபு) யான், நாடன்கேண்மை தலைபோகாமை அறிந்தனென்; அஃது அறியாதோர் பலருங் கூறுக.

    (கருத்து)தலைவன் என்னை வரைந்து கொள்வானென்னும் துணிவுடையேன்.

    (வி-ரை.) பலர் - செவிலி முதலியோர். அஃது - கேண்மையின் இயல்பு; செய்யுளாதலின் சுட்டுப்பெயர் முன்வந்தது. எருவை - கொறுக்காந் தட்டை (குறிஞ்சிப். 68, ந.) யானையின் உணவைக் கவள மென்றல் மரபு. தலைபோதல் - முடிதல்; அழிதல்; தலை யென்றது அசை நிலையாக நின்றது; “அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன்” (மணி. 11:84.)

    கயத்தை நாடிச் செல்லும் யானை, தன் முயற்சியின்றியே அருவியினாற் கொணர்ந்து தரப்பட்ட எருவையை நுகர்ந்தாற் போல விளையாட்டு விருப்பான் வந்த தலைவன் நல்லூழின் வயப் பட்டு என்னைக்கண்டு இன்புற்றானென்பது குறிப்பு. இக்கேண்மை பால்வயத்தால் அமைந்ததாகலின் அறாதென்பது தலைவி கருத்து.

    அருவியை ஊழிற்கு உவமை கூறும் மரபு, “நீர்வழிப் படூஉம் புணைபோலாருயிர், முறைவழிப்படூஉம்” (புறநா. 192:9-10) என்பதனாற் பெறப்படும்.

    ஏகாரங்கள் அசை நிலை.

    (மேற்கோளாட்சி) 3-4. மாந்துமலை: அல்வழிக்கண் மகரம் கெட்டுவந்த பெயரெச்சம் (தொல். புள்ளி மயங்கு. 19, ந.)

    ஒப்புமைப் பகுதி 3. கயநாடு யானை (குறுந். 215:4); அகநா. 6:8-9. யானை கவளமுண்ணல் : முல்லை. 35-6; மதுரைக். 658-9.

    4-5. தலைவன் கேண்மை கெடாதது: குறுந். 264 : 4-5, 313: 4-5.

(170)