(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அயலார் வரையப் புக்கனராக, அதுகண்டு கவன்ற தோழிக்கு, “இவர்கள் செய்யும் முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.)
 171.   
காணினி வாழி தோழி யாணர்க் 
    
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட 
    
மீன்வலை மாப்பட் டாஅங் 
    
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே. 

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (பி-ம். சொல்லியது.)

பூங்கணுத்திரையார் (பி-ம். பூங்கண்ணுத்திரையார்.)

    (பி-ம்) 4. ‘நொதுமலர்த்தலையே’.

    (ப-ரை.) தோழி-, இனி காண் - இப்பொழுது பார்ப்பாயாக; யாணர் - புதுவருவாயாகிய, கடு புனல் - மிக்க புனலையும், அடைகரை - அடைந்த கரையையுமுடைய, நெடு கயத்து இட்ட - ஆழமான குளத்தின்கண் அமைத்த, மீன்வலை - மீனுக்குரிய வலையின்கண், மா பட்டாஅங்கு - விலங்கு அகப்பட்டாற் போல, நொதுமலர் தலை - அயலாரிடத்து, இது - வரைவுக்குரிய இம் முயற்சி, எவன் - என்ன பயனுடைத்து?

    (முடிபு) தோழி, காண்; நொது மலர்தலை இது எவன்?

    (கருத்து) அயலார் வரைவுமேற்கொள்வதனாற் பயனொன்று மில்லை.

    (வி-ரை.) மீனுக்கென அமைத்த வலையில் விலங்கு பட்டாற் போலத் தலைவனுக்கென அமைந்த என்திறத்து நொது மலர் வரைய முயன்றனரென்று உவமையை விரித்துக்கொள்க. மா - நீர்நாய் முதலியன.

     வாழி, மற்று, ஓ, ஏ: அசை நிலைகள்.

    (மேற்கோளாட்சி) மு. தலைவி பிற விலக்குவித்தது  (நம்பி. 164.) ஒப்புமைப் பகுதி

 மு. 
‘‘அருங்கண்ணி வெண்மதி சூடும்பிரான் வெங்கை யாவிமலர்க்  
  
 கருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த 
  
 பெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதில் 
  
 மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே”  
  
                             (வெங்கைக் கோவை, 229.)  
(171)