(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)
 175.   
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி 
    
உரவுத்திரை பொருத திணிமண லடைகரை 
    
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
    
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் 
5
கிரங்கேன் றோழியிங் கென்கொ லென்று 
    
பிறர்பிற ரறியக் கூறல் 
    
அமைந்தாங் கமைக வம்பலஃ தெவனே. 

என்பது பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லி வற்புறுத்து வாட்குக் கிழத்தி உரைத்தது.

    (வற்புறுத்துதல் - மீண்டும் மீண்டும் கூறி அறிவுறுத்தல்.)

உலோச்சன்.

    (பி-ம்) 1. ‘தேனசைஇயப்பல்’; 5. ‘யிங்கனலென்று’;7. ‘அமைத்தாங்’.

    (ப-ரை.) தோழி-, பருவம் தேன் நசைஇ - செவ்வியை யுடைய தேனை விரும்பி, பல்பறை தொழுதி - பல வண்டுக்கூட்டங்கள், உரவு திரை பொருத - உலாவுதலையுடைய அலைகள் மோதிய, திணி மணல் அடைகரை - செறிந்தமணல் அடைந்த கரையின் கண் உள்ள, நனைந்த புன்னை - அலைத் துவலையால் நனைந்த புன்னை மரத்தினது, மா சினை தொகூஉம் - பெரிய கிளையின்கண் கூடுகின்ற, மலர்ந்த பூவின் - மலர்ந்த மலர்களையும், மா நீர் - கரிய நீரையுமுடைய, சேர்ப்பற்கு - கடற்கரைத் தலைவன்பொருட்டு, இரங்கேன் - வருந்தேன்; இங்கு என் என்று - இவ்விடத்து இவள் ஏன் இங்ஙனம் ஆயினளென்று, பிறர் பிறர் அறிய கூறல் - பிறர் பிறர் அறியும்படி கூறிதல், அமைந்தாங்கு அமைக - அவர்களுடைய மனம் அமைந்தபடி அமைக; அம்பல் - அவர்கள் கூறும் அம்பல், எவன் - என்ன துன்பத்தைச் செய்வதாகும்?

    (முடிபு) தோழி, சேர்ப்பற்கு இரங்கேன்; பிறர் கூறல் அமைக; அம்பல் எவன்?

    (கருத்து) ஊரவர் கூறும் பழிமொழியை யான் அஞ்சேன்.

    (வி-ரை.) பறை - பறத்தற்றொழிலை யுடைமை பற்றிப் பறவைக் காயிற்று. தேன் நசைஇ யென்ற குறிப்பால் பறை யென்ற பொதுப்பெயர் இங்கே வண்டிற்காயிற்று. தொழுதி - தொகுதி. உரவு - வன்மையுமாம். திரை பொருத மணற்கரையில் நிற்றலின் புன்னை நனைந்தது. மாச்சினை -கரிய கிளை யெனலுமாம். மலர்ந்த பூ வென்றது புன்னையில் மலர்ந்து உதிர்ந்த பூக்களை; முள்ளி மலர் முதலியனவும் ஆம்.

     தலைவி பிரிவாற்றாது வருந்தியது கண்ட தோழி, “நின் ஆற்றாமை ஊரவர்க்குப் புலனாதலின் அவர் அம்பல் கூறுகின்றனர். ஆதலின் நீ பொறை பூண்டிருத்தல் வேண்டும்” என்று வற்புறுத்திய காலத்தில் தலைவி கூறியது இது.

     “தலைவன் என்னைப் பிரிந்தானென நான் வருந்தினேனல்லேன்; ஆயினும் என்னையறியாது என்பால் வேறுபாடுகள் உண்டாகின்றன. அது கண்டு பிறர் கூறுவன கூறுக; அவற்றால் என் காமம் வலியுறுமே யன்றி எனக்கு வரும் ஏதமொன்றில்லை” என்றாள்.

     “பிறர் என் நிலை குறித்துக் கூறுதலைக் கூறுக. அது பற்றி நான் வருந்தேன்; பழிமொழியை ஏன் கூறுகின்றனர்? அதனால் யான் வருந்துகின்றேன்” என்று பொருள் கோடலும் ஒன்று.

    அம்பல் - சிலர் அறிந்து கூறும் பழிமொழி. அம்பலஃது: அஃது, பகுதிப் பொருள் விகுதி. கொல், ஏ: அசை நிலைகள்.

     பலவிடங்களிற் பறந்து செல்லும் வண்டுகள் பருவத் தேனை உரிய காலத்திலே உண்ண வந்து அடையும் சேர்ப்பனாதலின், பல வகை முயற்சிகளின் பொருட்டு என்னைப் பிரிந்து செல்வா னெனினும் உரிய காலத்தே வந்து அளவளாவுவனென்னும் உறுதியுடையேனாதலின் அவன் பொருட்டு வருந்தேனென்பது குறிப்பு.

    ஒப்புமைப் பகுதி 1. பறைத் தொழுதி: நெடுநல். 15;நற். 123:2; அகநா. 40:3.

    வண்டின் தொழுதி: “அஞ்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி” (அகநா. 234:12.)

    2. உரவுத்திரை: பட். 101.

    உரவுத்திரை பொருத கரை: ‘‘உரவுத்திரை, அடுங்கரை” (குறிஞ்சிப். 178-9.)

(175)