(கருத்து) நின்னை ஒரு தலைவன் விரும்பி அலமருகின்றான்.
(வி-ரை.) தலைவியினது நெஞ்சில் இரக்கம் தோன்றும்படி கூறப்புக்கவளாதலின், தலைவன் பலநாள் வந்தானென்பதை விரித்து ‘ஒருநாள்வாரலன் . பயிற்றி’ என்று தோழி கூறினாள். ஒருமை, இருமை, பன்மையென்னும் வழக்கு அவள் கூற்றிலமைந்துள்ளது. பயிற்றல் - பலமுறைகூறி வற்புறுத்தல். தலைவனைப் பற்றித் தலைவிபால் தான் கூறப்புக்கதுநன்மையையே கருதியென்பதைக் குறிப்பிப்பாள், ‘என் நன்னர் நெஞ்சம்’என்றாள்.
வரையில் முதிர்ந்த தேனடை, தன்பாலுள்ள தேனை ஒரு வருங்கொள்ளாது வீழ்ந்து கழிதல் போல, தன் மொழியை யாருங் கொள்ளாமையின் தலைவன் போயினானென உவமையை விரித்துக் கொள்க.போகியோன் - போனானென முற்றாகக் கொள்ளலும் பொருந்தும்.ஆசு - பற்றுக் கோடு; ‘ஆசா கென்னும் பூசல் - எனக்கு நீர் பற்றாகவேண்டுமென்னும் ஆர வாரம்’ (புறநா. 266:9, உரை); ஆசாகு என்பதனைஇரங்கற் குறிப்புப்படுமொழி யென்பாரும் உளர் (மேற்படி.) எந்தையென்றாள்தலைவன்பால் தனக்குள்ள ஆதரவு தலைவிக்குப் புலப்படும் பொருட்டு.கொல்: ஐயம். வேறு புலனன்னாட்டுப் பெய்த வென்பதை வேறுநாட்டுப் புலத்துப் பெய்தவென்று கூட்டிப் பொருள் செய்க. வேற்றுநாட்டிற் பெய்த மழைநீர் அந் நாட்டில் தெளிவுடையதாக வீழினும் அந்நீர் வெள்ளம் அயல்நாட்டிற் புகும்போது கலங்கி வருமாதலின் அதனை உவமை கூறினாள்.
(மேற்கோளாட்சி) மு. தோழி வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது (இறை.10); பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் தோழிக்குக் கூற்று நிகழும்(தொல். களவு. 24, இளம். 23, ந.)
ஒப்புமைப் பகுதி 2. தலைவன் பலநாள் வந்து குறை யிரத்தல்: ‘‘கயமலருண்கண்ணாய் காணா யொருவன், வயமா னடித்தேர்வான் போலத்தொடைமாண்ட, கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு,முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற, நோயுரைக் கல்லான் பெயருமற்பன்னாளும்” (கலி. 37:1-5.)
பணிமொழி பயிற்றல்: ‘‘ரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி”(அகநா. 32:4.) 2.மு.அகநா. 310:4.
1-2. ஒருநாள், இருநாள், பன்னாள் வருதல்: “ஒருநாட் செல்லலமிருநாட் செல்லலம், பலநாள் பயின்று பலரொடு செல்லினும்”(புறநா. 101:1-2.)
ஒருமை, இருமை, பன்மை: தொல். மொழிமரபு. 12; எச்ச. 21,இளம்.
5. மு. குறுந். 325:4; புறநா. 235: 16, 307: 1.
மு. அகநா. 32.
(176)