(தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக்கண்டு, ‘‘இக் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில்தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற நும் விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்” என்று கூறி இரங்கியது.)
 178.   
அயிரை பரந்த வந்தண் பழனத் 
    
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் 
    
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் 
    
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் 
5
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் 
    
கரிய மாகிய காலைப் 
    
பெரிய நோன்றனிர் நோகோ யானே. 

என்பது கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு,முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றை (பி-ம்.களவுகற்றொழுகலாற்றாமை) நினைந்து அழிந்து கூறியது.

    (கடி நகர் - தலைவனும் தலைவியும் மணம் புரிந்து கொண்டுஇல்லறம் நடத்தும் மனை. விதும்பல் - விரைதல். அழிதல் - இரங்கல்.)

நெடும்பல்லியத்தை.

    (பி-ம்) 2. ‘மலர்ந்த’, ‘திரள்தாள்’; 3. ‘குற்றுநர்’; 5. ‘யானுமக்’; 6. ‘கரியேம்’; 7. ‘நோன்றநீர்’.

    (ப-ரை.) அயிரை பரந்த - அயிரைமீன் மேய்தற்குப்பரந்த, அம்தண் பழனத்து - அழகிய தண்மையாகிய பொய்கையினிடத்து, ஏந்து எழில் மலர - அழகை மேற்கொண்டமலரையுடையனவாகிய, தூம்புடை திரள்கால் - உள்ளேதுளையையுடைய திரண்ட தண்டையுடைய, ஆம்பல்குறுநர் - ஆம்பலைப் பறிப்போர், நீர் வேட்டாங்கு - புனல்வேட்கையை அடைந்தாற் போல, இவள் இடைமுலைகிடந்தும் - இத்தலைவியின் நகிலினிடையே துயிலப்பெற்றும், நடுங்கல் ஆனீர் - நடுங்குதலை யொழிந்தீர்அல்லீர்; யாம் --, தொழுது காண் பிறையின் தோன்றி -கன்னி மகளிரும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி, நுமக்கு அரியம் ஆகிய காலை - நுமக்குக்காண்டற்கரியேமாகிய களவுக் காலத்தில், பெரியநோன்றனிர் - பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர்; யான்நோகு - யான் அதனை யறிந்து வருந்துவேன்.

    (முடிபு) இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கல் ஆனீர்; யாம்நுமக்கு அரிய மாகிய காலைப் பெரிய நோன்றனிர்; யான் நோகு.

    (கருத்து) நீர் தலைவிபாற் கொண்ட அன்பின் வன்மையை முன்புயான் நன்கறிந்திலேன்.

    (வி-ரை.) ஏந்துதல் - நீருக்கு மேலே உயர்தலுமாம். மலரும் காலும்ஆம்பலாகிய முதலுக்கு அடை; ஆம்பல் - இங்கே ஆம்பல் மலர்; ஆகுபெயர்.

    நீரில் வளர்ந்த ஆம்பலைப் பறிப்போர் விடாயுற்ற காலத்தில் எளிதிற் பருகுதற்கு அணிமையில் நீர் இருப்பவும் நீரை வேட்டு விரைந்தாற் போல, நும் வேட்கையை முற்றுவிக்கும் தலைவி இடையறாது நும் அருகிலே இருப்பவும் நீர் விரைந்தீரென்றாள். இதனால் தலைவனது காம நிலை உரைக்கப்பட்டது.

    இடைமுலை - முலையிடை; இடை - நடுவில்; முன்பின்னாகத்தொக்கது; மொழிமாற்றென்பாரும் உளர். நடுங்குதல் - காம வேகத்தால்நடுங்குதல்; விரைவுடையாருக்கு மெய்ந் நடுங்குதல் இயல்பு.

    பிறை - மூன்றாநாட் சந்திரன். அது திங்களுக்கொரு முறையேதோன்றுவதாதலின் காட்சியருமைக்கு அதனை உவமை கூறினாள்;கார்த்திகைப் பிறையுமாம். பெரிய - பெரிய வருத்தங்களை; என்றதுகாமத்தால் நேரும் துன்பங்களை. “களவுக் காலத்தில் நீர் இவளைக்காண்டல் குறித்து மிக வருந்தியிருத்தல் வேண்டும். அஃது இப்பொழுதுள்ளநும் நிலையால் உய்த்துணரக் கிடக்கின்றது. அதனை அக் காலத்தேநன்கறிந்திலேன்” என்னுங் கருத்தால் ‘நோகோ யானே’ என்றாள். நோகோ: ஓ, அசை நிலை. யானே: ஏ, அசைநிலை.

    (மேற்கோளாட்சி) 4. மொழி மாற்றுப் பொருள்கோள் வந்தது (தொல். எச்ச. 13,ந.)

    மு. பொழுது மறுப்பாக்க மென்னும் மெய்ப்பாடு வந்தது; ‘தொழுதுகாண் பிறையிற் றோன்றின மென்பது, களவுக் காலத்து இடையீடு பெருகிற்றெனக் கூறி, அங்ஙனம் வரைந்த பொழுதினை மறுத்த காலத்தும்நடுங்கலானீரென்றமையின் இஃது அப் பொருட்டாயிற்று’. (தொல்.மெய்ப். 24, பேர்.) (குறிப்பு. வரைந்த பொழுதினை மறுத்த காலம் -இரவுக்குறி யென்றும் பகற்குறி யென்றும் வரை யறுத்த காலத்தை நீக்கிஎப்பொழுது வேண்டுமெனினும் இன்புறற்குரிய காலம்.); பெறுதற்கரியபெரும்பொருளை முடித்த பின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய மரபுகாரணத்தால் தலைவன் சிறப்பித்துக் கூறுமிடத்துத் தோழிகூற்று நிகழும்(தொல்.கற்பு. 9, இளம்.) வதுவை நிகழ்ந்த பின் தன்னைச் சிறப்பித்துக்கூறுமிடத்துத் தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது. இதனுள் முலையிடைக்கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீரெனநோவா நின்றேன்; இங்ஙனம் அருமை செய்தலால் தேற்றுதற் குரியேனாகிய என்னைச் சிறப்பித்துக் கூறலாகா தென்றவாறு காண்க’. (தொல். கற்பு. 9,இளம். ந.) பாங்கி தலைவனை வரையும் நாளளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாவியது (நம்பி. 203); பொழுது மறுப்பாக்கம் வந்தது (இ.வி. 580.)

    ஒப்புமைப் பகுதி 1. அயிரை: குறுந். 128: 3, 166:2.

    2. தூம்புடைத் திரள் காலாம்பல்: “நீர்வள ராம்பற் றூம்புடைத்திரள்கால்” (நற்.6:1.)

    3. “குவளை குறுநர் நீர்வேட் டாங்கு” (நற். 332:2); “வெள்ளத்துணாவற்றி யாங்கு” (திருவா. நீத்தல். 14.)

    4. இடைமுலைக் கிடத்தல்: “இரவின் வந்தெம் மிடைமுலைபொருந்தி” (அகநா. 328:5.)

    தலைவன் தலைவியின் நகிலிடைக் கிடத்தல்: குறுந். 39:4, ஒப்பு.

    5. தொழுது காண் பிறை: (குறுந். 307:1-3); “ஒள்ளிழை மகளி ருயர்பிறை தொழூஉம், புல்லென் மாலை” (அகநா. 239:9-10); “அப்பிறை,பதினெண் கணனு மேத்தவும் படுமே” (புறநா. 1:9-10); “குழவித் திங்களிமையவ ரேத்த” (சிலப். 2:38-9); “முன்னுந் தொழத்தோன்றிமுள்ளெயிற்றா யத்திசையே, இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் -மன்னும், பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற்,பெருகொளியான் மிக்க பிறை” (தொல். களவு. 23, ந.மேற்.); “அந்தியாரண மந்திரத் தன்புட னிவனை, வந்தி யாதவர் மண்ணினும் வானினுமில்லை” (வி.பா. குருகுலச். 6); கோவை நூல்களில் வரும் ‘பிறைதொழுகென்றல்’ என்னும் துறைச் செய்யுட்களிலும் காண்க.

    7. நோகோ யானே: குறுந். 131:6, ஒப்பு.

(178)