கபிலர் (பி-ம்.) 1. ‘வேலிக் கோடல்பலவின்’.
(ப-ரை.) வேரல் வேலி - சிறு மூங்கிலாகிய வாழ் வேலியை உடைய, வேர் கோள் பலவின் சாரல் நாட - வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் செறிந்த பக்கத்தை உடைய மலை நாடனே, சாரல் - பக்க மலையில், சிறுகோடு - பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரும் பழம் தூங்கியாங்கு - பெரிய பழம் தொங்கியது போல, இவள் - இத்தலைவியினது, உயிர் தவ சிறிது - உயிரானது மிகச் சிறுமையை உடையது; காமம் தவ பெரிது - காமநோய் மிகப் பெரிது; அஃது - அந்நிலையை, அறிந்திசினோர் யார் - அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை; செவ்வியை ஆகுமதி - அவளை வரைந்து கொள்ளும் பருவத்தை உடையை ஆகுக.
(முடிபு) நாட, இவள் உயிர் தவச் சிறிது; காமம் தவப் பெரிது; அஃது அறிந்திசினோர் யார்? செவ்வியை ஆகுமதி.
(கருத்து) தலைவியை நீ விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டும்.
(வி-ரை.) வேரல் - சிறு மூங்கில் (குறிஞ்சிப். 71,ந.) மலைச் சாரலில் இயல்பாக வளர்ந்த மூங்கிலே பலா மரத்திற்கு வேலியாயிற்று; இத்தகைய வேலியை வாழ்வேலி என்பர் (பெரும்பாண். 126,ந.) வேர்கோட் பலவு - வேர்ப்பலா; இது பலா மரத்துள் ஒரு சாதி. செவ்வி - தலைவியை வரைந்து கொள்ளும் நிலை. தலைமகனுக்கு உவப்பில்லாத வரைவைப் பற்றிக் கூறப் புகுகின்றாளாதலின் அதற்குப் பாதுகாப்பாக முதலில், ‘நீ செவ்விய நலத்தை உடையை ஆகுக’ என்று வாழ்த்தியதுமாம். தன்னினும் மிக்கார்க்கு இன்னாதனவற்றைக் கூறுவதற்கு முன் வாழ்த்துதல் மரபு; இதனை, கண்ணகி வழக்குரைக்க வந்து நின்ற நிலையை வாயில்காவலன் பாண்டியனுக்கு அறிவிப்பதற்குமுன், “வாழியெங் கொற்கை வேந்தே வாழி” (சிலப்.20:30) என்பது முதலியவற்றால் வாழ்த்திப் பின் கூறும் பகுதியும், சச்சந்தனுக்குக் கட்டியங்காரனது வஞ்சச் செயலைக் கூறப்புக்க வாயில்காவலன், “நீணில மன்ன போற்றி நெடுமுடிக் குறிசில் போற்றி, பூணணி மார்ப போற்றி, புண்ணிய வேந்தே போற்றி” (சீவக. 264) என்று கூறிய பகுதியும், அப்பகுதிக்கு ‘வெய்ய சொல்லைக் கூறுதலை உடைய வாயிலோன், போற்றியென்று கூறி இறைஞ்சி ... கூறினானென்க” (ந) என்றுள்ள உரையும் புலப்படுத்தும். ஆகுமதி: மதி முன்னிலை யசைச் சொல். அஃது செய்யுளாதலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. ‘சாரற் சிறு கோட்டுப் பெரும்பழம்’ என்ற இடத்துள்ள சாரல் தலைவிக்குரிய மலையிடத்தது. தாம் அறிந்த பொருள்களை உவமை கூறுதல் உலகத்தார் இயல்பாதலின் இங்கே தோழி, தான் அறிந்த தன்மலைப் பலவின் பழத்தை உவமை கூறினாள்; “தோழிக் காயி னிலம் பெயர்ந் துரையாது” (தொல். உவம. 26.) தவ என்பதனைப் பெரிது என்பத னோடும் கூட்டுக.
இயல்பாகவே பாதுகாப்புடையதாகியும் வேரில் பழுத்தலின் கீழ் உகும் நிலையிலதாகியும் உள்ள பலாப் பழத்தையே நின்மலையிற் கண்டாயாதலின், நீ சிறுகோட்டிற் பெரும்பழந்தூங்கும் நிலையை உணராயாயினாய், அதனை உணர்க என்று தோழி அறிவுறுத்தினாள் ஆயிற்று.
பாதுகாப்பு இலதாகித் தன்னைத் தாங்குதற்குரிய கொம்பும் சிறிதாகித் தானும் பெரியதாகி இருக்கும் பழம் கனிந்து கொம்பினின்றும் உகும்; அன்றிப் பிறரால் கொள்ளவும் படும்; அது போலத் தன்னை வேற்றுவரைவினின்றும் பாதுகாப்பார் இலளாகி உயிரும் சிறியளாகிய இவளிடத்துக் காமம் பின்னும் கனியின் இவள் உயிர் விடுதலும் நேரும்; அன்றிப் பிறர் வரைந்து கொள்ளவும் முயல்வர் என்று உவமையை விரித்துக் கொள்க. பழம் மிகக் கனிந்து உகுவதன் முன் உரிய காலத்தே உரியார் கொள்வதைப் போல இவள் உயிர் நீப்பதற்குள் உரிய பருவத்தே இவளுக்குரியையாகிய நீ வரைந்து கொள்வாயாக என்பது குறிப்பு.
உயிர் சிறுமையை உடையது என்பது அணுவென்று கூறப்படுதலாலும், சிற்றுயிரென்னப்படுதலாலும் பெறப்படும்.
மேற்கோளாட்சி3. சின், படர்க்கைக்கண் வரும்; பால் காட்டும் எழுத்தோடு அடுத்து வரும் (தொல். இடை. 27,இளம், சே, தெய்வச், ந.) 4. செய்யுட் கண் இனமுள்ள அடைமொழி வந்தது (நன். 400, மயிலை, 401, சங்; இ.வி. 312). மு. தோழி தலைவியின் காமம் (காதல்) மிகவுரைத்தல் (தொல். களவு.23,இளம், ந; நம்பி. 166; இ.வி. 523) ; நிலைமண்டில ஆசிரியப்பா (தொல். செய். 113, இளம் ; யா.கா.செய். 8; இ.வி. 734); ஆசிரியப்பா ஐந்தடியான் வந்தது (தொல். செய். 158, பேர்.); ‘ஆற்றாள் என்பதுபடக் கூறியது’ (தமிழ்நெறி. 18); ‘இதனுள் அடியெதுகையும் கூழைமோனையும் ஒரூஉ எதுகையும் இணைமுரணும் கடையிணை எதுகையும் பின்முரணும் வந்தனவாயினும், முதல் வந்ததனாற் பெயர்கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்’, ‘வேரல்வேலி வேர்க்கோட் பலவின் என்னும் பாட்டினுள், சிறுகோட்டுப் பெரும்பழம் என்னும் அடியினுள் இணைமுரணும் கடையிணை எதுகையும் வந்தன வாயினும், யாதானு மொன்றினாற் பெயர்கொடுத்து இணைமுர ணென்றானும், கடையிணை எதுகை யென்றானும் வழங்கப்படும்; ஏனையடி ஒரூஉத் தொடையாகியவரனடையில்லாமையால் அதனை மயக்கம் எனினும் இழுக்காது’ (யா.வி. 53); எல்லா அடியும் ஒத்துச் சிறப்புடை நேர்த்தளையான் வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (யா.வி. 74)
ஒப்புமைப் பகுதி 1. வேரல்வேலி: “முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே” (குறுந். 236:6); “வேரல் வேலி மால்வரைக் கவான்” (சூளா. சீயவதை. 227) வேர்கோட் பலா : “வேரு முதலுங் கோடு மொராங்குத், தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின், ஆர்கலி வெற்பன்” (குறுந். 257: 1-4); “செவ்வேர்ச், சினைதொறுந் தூங்கும் பயங்கெழு பலவின்” (நற். 77: 4-5); “ செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 209:15.) வேரல் வேலிப் பலவு : “ யானை ... வேரல் வேலிச் சிறுகுடி யலறச், செங்காற் பலவின் றீம்பழ மிசையும், மாமலை நாட” (நற். 232: 1-6.) 5. காமம் பெரிது; (குறுந். 102:3, 371:4); “காதறானுங் கடலினும் பெரிதே”, “காமம் பெரிதே களைஞரோ விலரே” (நற். 166: 10, 335:11.) காமமும் உயிரும்; (குறுந். 290); “ பெரிதே காமமென் னுயிர்தவச் சிறிதே” (கலித். 137:2.)
(18)