(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறிவற்புறுத்தியது.)
 180.   
பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி  
    
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்  
    
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன  
    
பைத லொருகழை நீடிய சுரனிறந்  
5
தெய்தினர் கொல்லோ பொருளே யல்குல்  
    
அவ்வரி வாடத் துறந்தோர்  
    
வன்பராகத்தாஞ் சென்ற நாட்டே.  

என்பது பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது.

கச்சிப்பேட்டு நன்னாகையார்.

    (பி-ம்) 1.‘பழுப்பல்’; 3. ‘தறைமடிக்’; 4. ‘வைகல்’, ‘வைதலொருகிளை’;5. ‘தேயினர்.

    (ப-ரை.) அல்குல்--, அ வரி வாட - அழகிய தேமல்வாடும்படி, துறந்தோர் - நம்மைப் பிரிந்த தலைவர், பழூஉபல் அன்ன - பேயின் பற்களைப் போன்ற, பரு உகிர் பாஅடி - பருத்த நகங்களை யுடைய பரவிய அடிகளைப்பெற்ற, இருகளிறு இனம் நிரை ஏந்தல்வரின் - பெரியகளிற்றுத் திரளின் வரிசையினது தலைவன் வந்து கைக்கொள்ளின், மாய்ந்து - அழிந்து, அறை மடி கரும்பின் - பாத்தியின்கண் வீழ்ந்த கரும்புகளின், கண் இடை அன்ன - கணுக்களின் இடையே யுள்ள பகுதியைப் போன்ற, பைதல்ஒரு கழை - வருந்துதலையுடைய ஒற்றைமூங்கில், நீடிய - ஓங்கிய, சுரன் இறந்து - பாலைநிலத்தைக் கடந்து, வன்பர்ஆக - வன்னெஞ்சினராக, தாம் சென்ற நாட்டு - தாம் போனநாட்டினிடத்து, பொருள் எய்தினர் கொல் - பொருளைஅடைந்தாரோ இல்லையோ?

    (முடிபு) துறந்தோர் பொருள் எய்தினர் கொல்லோ?

    (கருத்து) தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ,இலரோ?

    (வி-ரை.) யானை அடியின் நகத்திற்குப் பேயின் பல் உவமை.பழு - பேய். (குறிஞ்சிப். 259, ந.) யானைகள் கூட்டமாகப் போகுங்கால்அக்கூட்டத்திற்குமுன் ஒரு வலிய களிறு செல்லுவது வழக்கம்; அதனையூதநாதனென்பர்; இங்கே ஏந்தலென்றதும் அதனையே. அறை - பாத்தி(மலைபடு. 118,ந.) யானையால் முறிக்கப்பட்ட கரும்பின் ஒரு கணுவுக்கும்மற்றொரு கணுவுக்கும் இடையிலுள்ள அளவே வளர்ந்த மூங்கில்.

     எய்தினர் கொல்: கொல் ஐயம். பொருளை அடைந்தனரோ இலரோஎன்றது, பொருளைப் பெற்றால் உடனே தங்காது மீண்டு வருவரென்றுவற்புறுத்தியபடி.

    (மேற்கோளாட்சி) 1. செய்யுளில் ழகர உகரம் நீண்டு உகரம் பெற்று வந்தது(தொல். உயிர்மயங்கு. 59, இளம், ந; இ.வி. 95); குற்றெழுத்தள பெடைவந்தது (இ. கொ. 90.)

     ஒப்புமைப் பகுதி 1. யானையின் கால் நகத்திற்குப் பேயின் பல்: “கருமறிக்காதிற் கவையடிப் பேய்மகள், நிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்,பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தாள், அண்ணல் யானை”(சிறுபாண். 197-200.)

    2. களிற்றின நிரை: குறுந். 255:4; கலி. 25:9, 52:4-5; அகநா. 218:1.

     களிற்றின நிரை யேந்தல்: “அலகி லானைக ளனேகமு மவற்றொடுமிடைந்த, திலக வாணுதற் பிடிகளுங் குருளையுஞ் செறிந்த, உலவைநீள்வனத் தூதமே யொத்தவவ் வூதத், தலைவ னேயொத்துப் பொலிந்ததுசந்திர சயிலம்’ (கம்ப. வரைக் காட்சி. 7.)

     1-2. பாவடிக் களிறு: “பாவடி யானை” (புறநா. 233:2.)

     3. அறைமடி கரும்பு: (குறுந். 262:7, ஒப்பு.); “அறைக் கரும்பு”(பொருந.193); “அறையுற், றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே”(மலைபடு. 118-9); “அறையுறு கரும்பு” (பதிற். 75:6; பெருங். 1:48:146)

    4. பாலைநிலத்திலுள்ள மூங்கிலின் நிலை: குறுந். 331:1, ஒப்பு.

    5-6. அல்குலவ்வரி: கலி. 60:4; அகநா. 33:16.

    7. வன்பர்: குறுந். 395:3

(180)