கிளிமங்கலங் கிழார் (பி-ம். கிள்ளி கிழார்.) (பி-ம்) 1. ‘இதுவுமற்’; 5. ‘பாஅற்பெய் பைம்பயிர்’; 7. ‘பெருமுதிர்’,‘பெண்டிராகிய’.
(ப-ரை.) தோழி-, இரு மருப்பு எருமை ஈன்றணிகாரான் - பெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடையபெண்ணெருமையானது, உழவன் யாத்த குழவியின்அகலாது - உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும்அகலச் செல்லாமல், பாஅல் பை பயிர் - பக்கத்திலுள்ளபசிய பயிர்களை, ஆரும் ஊரன் - மேய்வதற் கிடமாகிய ஊரையுடைய தலைவனது, திருமனை பல கடம் பூண்ட - செல்வத்தையுடைய மனைவாழ்வுக்குரிய பல கடப்பாடுகளைமேற்கொண்ட, பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கு -பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு, துனியிடை - புலவிக்காலத்தினிடையே, இன்னர் என்னும் இன்னா கிளவி -தலைவர் இத்தகையரென்னும் இனிமையில்லாத கூற்றாகிய,இது எவன் - இதனாற் பயன் யாது?
(முடிபு) தோழி, ஊரன் மனைக்கடம் பூண்ட நமக்கு இன்னாக்கிளவி எவன்?
(கருத்து) தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம்செய்வோமாக.
(வி-ரை.) இது: செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது. மற்று, ஓ:அசை நிலை. இன்னரென்றது, பரத்தைமையுடைய ரென்று கூறுதல்;ஆதலின் இன்னாக் கிளவியாயிற்று. இரு மருப்பு - கரிய மருப்பெனலுமாம். “பெற்றமு மெருமையு மரையு மாவே” (தொல். மரபு. 60)என்பது விதியாதலின் எருமையைக் காரானென்றாள். எருமையின் கன்று குழவியெனவழங்கப்படும் மரபு, “ஆவு மெருமையு மவைசொலப் படுமே” (தொல்.மரபு. 20) என்னும் சூத்திரத்தால் உணரப்படும். திருமனை யென்றாள்இல்லறம் புரிதற்குரிய செல்வமுடைமை பற்றி. பல கடமாவன,
| “அறவோர்க் களித்தலு மந்தண ரோம்பலும் |
| துறவோர்க் கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின் |
| விருந்தெதிர் கோடலும்” (சிலப். 16:71-3) |
முதலியன. பூணல் - மேற்கொள்ளல்.
தலைவன் பரத்தையர்பாற் சென்றிருந்த காலத்தில் தலைவிஆற்றாமையை உடையளானாள்; அப்பொழுது தலைவனுடையபரத்தைமையைக் கூறின் அவள் தன் துயர்க் காரணமறிந்து கூறுகின்றாளென ஆற்றியிருப்பா ளென்று எண்ணிய தோழி, இழிப்புக் குறிப்புத் தோன்றத் தலைவன் ஒழுகலாற்றை எடுத்துரைத்தாள். தான் தன் அன்புடைமையினால் ஆற்றாளாயினும் பிறர் தன் தலைவனது குறையைக் கூறப் பொறாத சிறந்த கற்புடையளாதலின் தலைவி அவளை நோக்கி, "அவரோடு புலந்து உறையும் இக்காலத்தில் அவரைப் பற்றிக் குறை கூறுவதனாற் பயனொன்றுமில்லை. இல்லறம் நடத்தும் பெண்டிராகிய நாம் செய்யக் கடவ அறங்கள் பலவுண்டு; இன்பமொன்றையே பெரிதாகக் கருதும் இளமையையும் நாம் கடந்து முதுமையெய்தினேம். ஆதலின் தலைவர் எங்ஙனம் இருப்பினும் நம் கடப்பாடுகளை நாம் செய்தல் சாலும்” என்று கூறினாள்.
| “அன்புடைக் கணவ ரழிதகச் செயினும் |
| பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை” (பெருங். 4.14:98-9) |
என்பவாதலின் தலைவி இங்ஙனம் கூறினாள்.
எருமை கட்டப்பட்ட தன் குழவியினின்றும் அகலாமல் அருகிலேயுள்ள பயிரை ஆரும் ஊரனென்றது, தலைவன் இல்லின் கண் உறையும்தலைவிபாற் கொண்ட அன்பு குறையாமல் தனக்கு வேண்டிய இன்பத்தைஅருகிலுள்ளார்பாற் பெறுகின்றானென்னும் குறிப்பைப் புலப்படுத்துவது.
(மேற்கோளாட்சி) மு. அடங்கா ஒழுக்கத்தையுடைய தலைவன் மாட்டு மனன்அழிந்தோளை அடங்கக் காட்டுதற்கு ஏதுவான பொருட் பக்கத்தில்தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 9, இளம்.); தோழி இன்னாக்கிளவி கூறியதனை, இது பொழுது கூறிப் பயந்த தென்னெனத் தலைவிகாய்ந்து கூறியது (தொல். கற்பு. 6,ந.); தலைவியைப் பாங்கி கழறியது(நம்பி. 205.)
ஒப்புமைப் பகுதி 1. இதுமற் றெவனோ தோழி: குறுந். 299:1.
இன்னர்: “இன்ன னாவ தெவன்கொ லன்னாய்” (ஐங். 26:4);“இன்ன ரினைய ரெமர்பிற ரென்னுஞ் சொல்” (நாலடி. 205.)
3. எருமைக் காரான்: குறுந். 261:3; நற். 80:1.
3-4. எருமைக் குழவி: பட். 14; நற். 120:1-2, 271:1; ஐங். 92:1-2.
6. கடம் பூணல்: சிலப். 15:2; மணி. 3:70.
7. பெருமுது பெண்டிர்: முல்லைப். 11.
(181)