(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.)
 186.   
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த 
    
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி 
    
எயிறென முகைக்கு நாடற்குத் 
    
துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே. 

என்பது பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

ஒக்கூர் மாசாத்தி.

    (பி-ம்) 1. ‘யாற்றொடு’; 3. ‘முகையு’; 4. ‘றோழியெங்’.

    (ப-ரை.) தோழி-, என் கண் - என் கண்கள், ஆர்கலி ஏற்றொடு - மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு,கார் தலை மணந்த - மேகம் மழைபெய்து கலந்த, கொல்லைபுனத்த - முல்லை நிலத்திலுள்ளனவாகிய, முல்லை மென்கொடி - மெல்லிய முல்லைக் கொடிகள், எயிறு என முகைக்கும் நாடற்கு - பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு, துயில் துறந்தன - உறக்கத்தையொழிந்தன.

    (முடிபு) தோழி, என்கண் நாடற்குத் துயில் துறந்தன.

    (கருத்து) தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்துவருந்துகின்றேன்.

    (வி-ரை.) ஏறு - இடியேறு; “இன்குர லேற்றொடு” (குறிஞ்சிப். 49);“முழுவதிர்ந் தன்ன முழக்கத் தேறோ, டுரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து” (அகநா. 328:2-3.) தலைமணந்த : தலை அசை நிலை; ‘தலை மயங்கி யென்பதனுள் தலை அசை நிலை’ (புறநா. 157:9, உரை) எனப் பிறாண்டும் இவ்வசை நிலை வருதல் காண்க. கொல்லைப் புனம் - புனமாகிய கொல்லை; ‘புனமென்பது, முன்பு பயிராயதனை; கொல்லை யென்பது, பயிரின்றித் தரிசாய்க் கிடந்த காட்டினை’ (89:17) என்பர் அகநானூற்று உரையாசிரியர். முல்லை யெயிறென முகைக்கு மென்றதுகார்ப்பருவம் வந்ததைப் புலப்படுத்தியது. ‘முகையும்’ என்னும் பாடமும்அரும்பும் என்னும் பொருளையுடையது; “முகைந்த தாமரை” (ஐங். 6:4.)என வருவதை இங்கே கருதுக. நாடற்குத் துயில் துறத்தலாவது, நாடனைச்சேராமையின் அவனை நினைந்து துயிலா திருத்தல்; நாடனால் துயில்துறந்தனவென உருபு மயக்க மாக்குதலும் ஆம்.

    இஃது ஆற்றாமைக்குக் காரணம் கூறியது.

    ஒப்புமைப் பகுதி 2. கொல்லைப் புனம் : “கொல்லை யிரும்புனத்து” (நாலடி. 178); “கொல்லைப் புனத்த வகில்” (ஐந். எழு. 2.)

    1-2. கார், புனம், முல்லை : குறுந். 188:1-2.

    2-3. முல்லை எயிறென முகைத்தல் : (குறுந். 126:3-4, ஒப்பு);“முல்லை யிலங்கெயி றீன” (கார். 14); “கார்கொடி முல்லை யெயிறீன”(ஐந். எழு. 21) “கார்செய் புறவிற் கவினிக் கொடிமுல்லை, கூரெயிறீன”,“முல்லை யெயிறீன” (கைந்நிலை, 25, 34.)

    முல்லை முகைக்கும் : “பாசிலை முல்லை முகைக்கும்” (புறநா. 117:9.)

    1-3. முல்லை கார்காலத்தில் அரும்புதல் : குறுந். 126:3-5, ஒப்பு.

    3-4. தலைவன் பிரிவினால் கண் துயிலாமை : குறுந். 5:4-5, ஒப்பு.

(186)