கபிலர். (பி-ம்.) 1. ‘செல்வரை’, ‘செச்சை வருடை’; 4. ‘பல்லினும்’.
(ப-ரை.) தோழி-, செ வரை சேக்கை - செவ்வியமலைப் பக்கத்தின் கண் தங்குதலை யுடைய, வருடைமான்மறி - எண் கால் வருடையினது குட்டி, சுரைபொழி தீபால் - தன் தாயின் மடியினின்றும் சுரக்கின்ற இனிய பாலை,ஆர மாந்தி - வயிறு நிறைய உண்டு, பெருவரை நீழல் -பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில், உகளும் நாடன் -துள்ளுதற் கிடமாகிய நாட்டையுடைய தலைவன்; கல்லினும்வலியன் - கல்லைக் காட்டிலும் வன்மையை உடையவன்;என் நெஞ்சு-, வலியன் என்னாது - அவன் வன்மையையுடையா னென்று கருதாமல், மெலியும் - அவன் திறத்துமெலிவை அடையும்.
(முடிபு) தோழி, நாடன் வலியன்; என் நெஞ்சு மெலியும்.
(கருத்து) தலைவன் வரைபொருள் பெற்று விரைவில் மீள்வான்.
(வி-ரை.) வரை பொருளுக்காகப் பிரிந்த தலைமகன் நீட்டித்தானாக,தலைவி அன்பு மிகுதியினால் ஆற்றாளாயினாள்; அது கண்ட தோழி,அவளை ஆற்றுவிக்க எண்ணி, “தலைவன் தான் நினைந்து சென்றபொருளைப் பெற்றிலன் போலும்! உரிய காலத்தே அதனைப் பெற்றுவருதற்குரிய வன்மையிலன் போலும்!” என்று தலைவனுக்கு இழிபு தோன்றக் கூறினாள். அதுகேட்ட தலைவி, தலைவனைக் குறைகூறுவதைக் கேட்கப் பொறாத கற்புடையவளாதலின், “அவன் வலியன்;தான் நினைந்த பொருள் பெற்று மீள்வன். என் நெஞ்சு அவன் வன்மையை நினையாது அறியாமையால் வருந்துகின்றது. என் ஆற்றாமைக்குக் காரணம் தலைவன் செயலன்று; எனது நெஞ்சின் அறியாமையே” என்று தலைவன் திறத்திற் குற்றம் சாராதவாறு மொழிந்தாள்.
செவ்வரை - செங்குத்தான மலையுமாம்; அத்தகைய மலைகளில்ஏறும் வன்மை வருடைக்கு உண்டு; “நெடுவரை மிசையது குறுங்கால்வருடை” (ஐங். 287:2.) வருடை - எட்டுக் காலையுடையது ஒரு விலங்கு;இதற்கு முதுகிற் கால்கள் இருக்கும் என்பர்; “மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள், வரை வாழ் வருடை வன்றலை மாத்தகர்” (மலைபடு. 502- 3) என்பதன் உரையைப் பார்க்க. பாலை மாந்திய களிப்பினால் மறி வரை நீழலில் துள்ளி விளையாடிற்று.
வருடையின் மறி பாலை ஆரமாந்தி வரைநீழலில் உகளும் நாடன்என்றது, தலைவன் வரைவதற்குரிய பொருள் நிரம்பப் பெற்று ஈண்டுவந்து வரைந்து கொண்டு இல்லறம் நடத்துவான் என்ற குறிப்பை யுடையது.
(மேற்கோளாட்சி) 1. மறி யென்னும் இளமைப்பெயர் சிறுபான்மை வருடைக்கும் வரும் (தொல். மரபு. 12 பேர்.)
ஒப்புமைப் பகுதி 1. வரைச் சேக்கை வருடை : “வரையாடு வருடை”(பட். 139); “மலைப் போருடை வருடை” (நற். 359: 7-8) “வரைவாழ்வருடை” (அகநா. 378:6); “வரையாடு வருடையும்” (சிலப். 25:1);“வரைபாய் வருடை” (தொல். தொகை. 15, ந, மேற்.)
வருடை மான் மறி: “வருடை மான் குழவி”, “வருடை மட மறி”,“வருடை நன்மான், குழவி” (கலி. 43:14, 50:4, 21-2.)
(187)