(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.)
 188.   
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு 
    
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம் 
    
வாலிழை நெகிழ்த்தோர் வாரார் 
    
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே. 

என்பது பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது.

மதுரை அளக்கர் ஞாழார் மகன் மள்ளன் (பி-ம். மகனார்மள்ளனார்.)

    (பி-ம்) 2. ‘தகைமுற்றினமே’.

    (ப-ரை.) தோழி, முல்லை முகை முற்றின - முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண் கார் வியல் புனம்முல்லையொடு தகைமுற்றின - தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; என் மாண் நலம் குறித்து - எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி, மாலைவந்தன்று - மாலைக் காலம் வந்தது; வால் இழை நெகிழ்த்தோர்வாரார் - என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.

    (முடிபு) முல்லை முகை முற்றின; புனம் தகை முற்றின; மாலைவந்தன்று; இழை நெகிழ்த்தோர் வாரார்.

    (கருத்து) கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.

    (வி-ரை.) தகை - தகுதி; முல்லைத் திணையென்னும் தகுதியைமுல்லை மலர்களால் பெற்றதென்றலுமாம். தலைவன் பிரிவினால்தலைவியின் உடல் மெலிந்தது. அதனால் இழைகள் நெகிழ்ந்தன. தன்மெலிவினால் இழைகள் நெகிழ்ந்தனவேயன்றி அவை குற்றமுடையனவல்ல வென்பாள் ‘வாலிழை’ என்று சிறப்பித்தாள். ‘கார்காலத்தைக்கண்டு வருந்தினேன்; அக் கார்ப் பருவத்திலும் காமம் மலர்வதற்குரிய மாலையைக் கண்டு பின்னும் வருந்தினேன்’ என்பாள் அவற்றை அடையவே கூறினாள். வந்தன்று - வந்தது. நலங்குறித்து வந்ததென்று நலத்தையழித்தல் குறித்து வந்த தென்றவாறு; “பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விரல்” (முல்லைப். 77) என்பது போல.

    ஒப்புமைப் பகுதி 1. முல்லை கார்காலத்தில் அரும்புதல் : குறுந். 126: 3-5.ஒப்பு.

    1-2. முல்லை, கார், புனம் : குறுந். 186: 1-2.

    3. வாலிழை : குறுந். 45:2.

    இழை நெகிழ்த்தல் : (குறுந். 358:1); “விறலிழை நெகிழ்த்த வீவருங்கடுநோய்” (குறிஞ்சிப். 3); “இழைநெகிழ் பருவரல்”, “புனையிழைஞெகிழ்த்த புலம்புகொ ளவலமொடு” (நற். 70:9, 348:7); “இழைநெகிழ்செல்லல்”, “இழைநிலை நெகிழ”, ‘‘இழைநெகிழ் செல்லலுறீஇ”, “வில்லிழைநெகிழ” (ஐங். 25:4, 310:2, 315:3, 318:2); “பாசிழை ஞெகிழ”(பதிற். 68:15); “திருந்திழை நெகிழ்ந்தன”, “வீங்கிழை நெகிழச் சாஅய்”,“திருந்திழை நெகிழ்ந்து” (அகநா. 206:16, 251:3, 255:17,387:11.)

    3-4. தலைவர் வாரார், மாலை வந்தது : குறுந். 155: 3-7, ஒப்பு.

(188)