பரணர். (பி - ம்.) 1. ‘வறுமையர்பாணர்’; 3. ‘வாழியோ’; 5. ‘யாருளர் நமக்கே’, ‘யாரே நினக்கே’.
(ப-ரை.) நெஞ்சே-, மனை மரத்து - மனைப் படப் பையில் உள்ள மரத்தின்மீது படர்ந்த, எல் உறு மௌவல் - ஒளியை உடைய முல்லை மலர்கள், நாறும் - மணம் வீசுதற்கிடமாகிய, பல் இரு கூந்தல் - பலவாகிய கரிய கூந்தலை உடைய இவள், இனி, நமக்கு - நம் திறத்தில், யாரளோ - எத்தகைய உறவினை உடையவளோ! ஏதிலள்போலும் ; ஆதலால், எவ்வி இழந்த - எவ்வி என்னும் உபகாரியை இழத்தலால் உண்டாகிய, வறுமை யாழ்ப்பாணர் - வறுமையை உடைய யாழ்ப்பாணரது, பூ இல் வறு தலை போல - பொற்பூ இல்லாத வறிய தலையானது பொலிவிழந்து இருத்தல்போல, புல்லென்று - பொலிவிழந்து, இனைமதி - வருந்துவாயாக.
(முடிபு) நெஞ்சே, கூந்தல் நமக்கு யாரளோ! ஆதலின், பாணர் தலைபோலப் புல்லென்று இனைமதி.
(கருத்து) இவள் இப்பொழுது வேறுபாடுடையளானாள்.
(வி-ரை.) எவ்வி: இவன் வேளாளருள் உழுவித் துண்போர் வகை யினன்; மிழலைக் கூற்றத்துத் தலைவன்; கடற்கரைக் கண் உள்ள நீழலென்னு மூர் இவனுடையது (அகநா. 366); இவன் வேள் எவ்வியென்றும் கூறப்படுவான்; பாணர்க்குப் பொற்பூ அளித்து ஆதரித்து வந்தவன். இவன் பாணரைப் பாதுகாக்கும் தன்மையை உடையவன் என்பதும், பகைவரால் போரில் இறந்தான் என்பதும் வெள்ளெருக்கிலையார் பாடிய கையறுநிலைச் செய்யுளில் உள்ள, “இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட், போரடு தானை யெவ்வி மார்பின், எஃகுறு விழுப்புண் பலவென, வைகுறு விடிய லியம்பிய குரலே” (புறநா. 233:5-8) என்னும் பகுதியால் உணரலாகும். இவ்வுபகாரி இறந்ததனால் பாணர் மிக வருந்தினர் என்பதும் அவருடைய இசை பயனிலதா யிற்றாதலின் தம் யாழை முறித்து எறிந்தனர் என்பதுமாகிய செய்தி, “எவ்வி வீழ்ந்த செருவிற் பாணர், கைதொழு மரபின் முறித்திடூஉப் பழிச்சிய, வள்ளுயர் வணர்மருப்பு” (அகநா. 15:8-10) என்பதனால் வெளியாகிறது. பாணர் உபகாரிகளிடம் இருந்து பொற்பூவைப் பெறுதல் மரபு; பூவின் மையால் அவர்கள் தலை வறுந்தலையாயிற்று. புல்லென்றல் - பொலிவகலுதல் (கலித். 3:4,ந.) இனைமதி; மதி முன்னிலையசை. வாழிய:அசை. நெஞ்சு கேட்டற் குரியதன்றாயினும், “உறுப்புடை யதுபோலுணர் வுடை யதுபோன், மறுத்துரைப் பதுபோ னெஞ்சோடு புணர்த்துக்”(தொல்.பொருளியல், 2) கூறப்படும் வழுவமைதியின் பாற்பட்டு அமைந்தது. மனைமரம் என்றது வீட்டைச் சார்ந்த தோட்டத்தில் உள்ள நொச்சிமர முதலியவற்றை மரத்திலே படர்ந்த மௌவலென்க.
மகளிர் முல்லையை வளர்த்தல் இயல்பு; ‘தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை என உணர்க’ (தக்க.75, உரை.) மௌவல் நாறும் கூந்தல் என்றது, முல்லையை அணிந்தமையால் அமைந்த மணத்தை உடையதென்றபடி, கற்பிற்கு அறிகுறியாக மகளிர் முல்லை மலரைச் சூடுதல் மரபு; ‘கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு’(சிறுபாண். 28-30, ந.) எல் - ஒளி (தொல் .753); இரவுமாம். பனிச்சை முதலிய ஐந்து பகுதிகளை உடையதாதலின் பல் கூந்தல் என்றான். யாரளோ என்றது பண்டையளல்லள் என்றபடி; இச் சொல் யாரென்றது அள்விகுதி ஏற்று இடம் குறித்து நின்றது, யாரை என்பது போல.
மேற்கோளாட்சி1. அகத்திணையில் புறத்திணைக் கருப்பொருள் உவமமாக வந்தது (தொல். அகத். 55,ந. ) 2-3. நெஞ்சை உணர்வு உடையதுபோல வெகுளி பற்றிக் கூறியது (தொல். பொருளியல், 2, ந.)மு. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் புலத்தல் (தொல். கற்பு. 15, இளம், ந.); துன்பத்துப் புலம்பலென்னும் மெய்ப்பாடு தலைவனுக்கும் உரியது (தொல்.மெய்ப் .22,பேர்; இ.வி. 580); ‘தலைவி தான் உணர்த்தவும் உணராமல் தன்னைக் கைவிட்டுப் பிரியின், தான் அவளை நீங்குதற்கு அஞ்சிய அச்சத்தின் கண்ணும் தலைவற்குக் கூற்று நிகழும்; அஃது உணர்ப்புவயின் வாரா ஊடலாம்’(தொல். கற்பு.5, ந.); தலைமகன் புலவி தணியாளாகத் தலைமகன் ஊடல் (நம்பி.206.)
ஒப்புமைப் பகுதி 1. எவ்வி: புறநா. 233:6, அடிக். 2. புல்லென்றல். குறுந். 41:5, 277:2,310:4; கலித் . 3,4 1-2 பாணர் பொற்பூச் சூடுதல்: (பொருந. 159 - 60, அடிக்); “பூப்புனையும், நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்” (பு.வெ. 31). 3, வாழிய நெஞ்சே; குறுந். 199:2, இனைமதி வாழிய நெஞ்சே: “உடைமதி வாழிய நெஞ்சே” (அகநா. 123:8); பட். 230. மனைமரம்: “மனைமரத்தான்” (மதுரைக். 268); “மனைமர மொசிய வொற்றி” (அகநா. 58:13.)
4. எல்லுறு மௌவல்: “அரும்பவிழ் முல்லை, நிகர்மலர்” (சிலப்.9;1-2) 3-4. மனைமரத்தில் உள்ள மௌவல்: “மயிலடி யிலைய மாக்குர னொச்சி, மனைநடு மௌவலொ டூழ்முகை யவிழ” (நற். 115:-5-6); “மனையிள நொச்சி மௌவன் வான்முகை”, “மனைய, தாழ்வி னொச்சி சூழ்வன மலரும், மௌவன் மாச்சினை” (அகநா. 21:1, 23:10-12);“இல்வளர் முல்லையொடு மல்லிகை”, “மனைவளர் முல்லை” (சிலப் 4:27, 13:120); “இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கி”, “மனைப்பூங் காவின் மருங்கிற் கவினிய, பைந்தார் முல்லை வெண்போது நெகிழ” (பெருங்.1.33:73,3.7: 13-4) 5. பல்லிருங் கூந்தல்: நெடுநல். 54; ஐங். 308:1, 429:1; கலி. 101:41-2; அகநா. 43:11; மணி.22:130; சீவக. 164, 989.
(19)