(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)
 192.   
ஈங்கே வருவ ரினைய லவரென 
    
அழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி 
    
மின்னின் றூவி யிருங்குயில் பொன்னின் 
    
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை 
5
நறுந்தாது கொழுதும் பொழுதும் 
    
வறுங்குரற் கூந்த றைவரு வேனே. 

என்பது பிரிவிடை வற்புறுத்த வன்புறை (பி-ம். வன்பொறை) எதிரழிந்துகிழத்தி உரைத்தது.

     (வற்புறுத்த - வற்புறுத்திய. வன்புறை - ஆற்றுவித்தல்; இறை.54,உரை.)

கச்சிப்பேட்டு நன்னாகையார்.

    (பி-ம்) 2. ‘வினிய’; 3. ‘மின்னென்’; 6. ‘வருங்குரற்’.

    (ப-ரை.) நோய் நொந்து உறைவி - நோயால் வருந்திஉறையும் தோழி, அவர் ஈங்கே வருவர் - தலைவர் இவ்விடத்தேமீண்டு வருவார், இனையல் என - வருந்தற்க என்று நீசொல்வதனால், இனி - இப்பொழுது, அழாஅற்கோ - நான்அழாமல் இருப்பேனோ? மின் இன் தூவி - மின்னுகின்றஇனிய இறகுகளையுடைய, இரு குயில் - கரிய குயில்,பொன்னின் உரை திகழ் கட்டளை கடுப்ப - தன் மேனிபொன்னினது உரைத்த பொடி விளங்குகின்ற உரைகல்லைஒக்கும்படி, மா சினை - மாமரத்தின் கிளையினிடத்து, நறுதாது கொழுதும் பொழுதும்- நறிய பூந்தாதைக் கோதுகின்றஇளவேனிற் காலத்திலும், வறு குரல் கூந்தல் தைவருவேன் -அவர் வாராமையால் புனையப் பெறாமலுள்ள வறியகொத்தாகிய கூந்தலைத் தடவுவேன்.

    (முடிபு) “நோய் நொந்துறைவி, இனையல்” என அழா அற்கோ?வறுங்குரற் கூந்தல் தைவருவேன்.

    (கருத்து) தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான்எங்ஙனம் வருந்தாமல் இருத்தல் இயலும்?

    (வி-ரை.) அழாஅற்கு: தன்மை யொருமை, எதிர்மறை முற்றுவினை;அழுகென்னும் உடம்பாட்டின் எதிர்மறை. அழேனென்னும் பொருளது;ஓகார வினாவுடன் சேர்ந்து அழேனோ வென்னும் பொருளதாயிற்று.இனி - இப்பொழுது; ஏகாரம் அசை நிலை.நோநொந்துறைவி யென்பதும்பாடம். உறைவி: உறையென்னும் வினையடியாகப் பிறந்த பெயர்;தகுவி, கள்வி என்பன போல. மின்னென்றூவி யென்ற பாடத்திற்குமின்னைப் போன்ற தூவி யென்று பொருள் கொள்க. இன்றூவி :இனிமை, காட்சிக் கினிமையும் ஊற்றினிமையும். மாம்பூவின் தாதிற்குப் பொற்பொடியும் குயிலுக்குக் கட்டளைக் கல்லும் உவமை. தாதிலாடியகுயிலுக்கு இங்குக் கட்டளைக் கல்லை உவமித்தது போல,

   
“நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப்  
   
 பொன்னுரை கல்லி னன்னிறம் பெறூஉம்”              (நற். 25:3-4)  

என்று தாதாடிய தும்பிக்கு உவமித்திருத்தல் கருதற்குரியது.

     நறுந்தாதென்றாள், குயில் கோதும் தாதின் மணம் தான் இருக்கும்இடத்தளவும் வந்து வீசுதலால்.குயில் மாம்பூவின் தாதைக் கொழுதும்என்ற அடையினால் இங்கே குறித்த பெரும்பொழுது இளவேனிலாயிற்று.பொழுதும் : உயர்வு சிறப்பும்மை. இளவேனிற் காலம் காமத்தை மிகுவிப்பதாதலின் அக்காலத்திற் பிரிவுத் துன்பம் மிகுதியாகத் தோற்றும்.

     வறுங்குரற் கூந்தல் : மகளிர் தம் காதலரைப் பிரிந்த காலத்தில்கூந்தலைப் புனைதல், மலரணிதல் முதலியவற்றைச் செய்யார்; தலைவர்மீண்ட காலத்துப் புனைந்து மகிழ்வர்;

   
“நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்  
   
 மண்ணுறு மணியின் மாசற மண்ணிப்  
   
 புதுமலர் கஞல வின்று பெயரின்  
   
 அதுமனெம் பரிசில்”                         (புறநா.147:6-9)  

என்பதைக் காண்க.

    குரற் கூந்தல் - கொத்தாகக் கிடந்த கூந்தல்; எண்ணெய் நீவுதல்முதலியன இன்றி ஒன்றோடொன்று பிணங்கிக் கற்றைச் சடையாகியகூந்தல்;

   
“வாச வெண்ணெ யின்றி மாசொடு  
   
 பிணங்குபு கிடந்த பின்னுச்சேர் புறத்தொடு”             (4.7:103-4)  

என்ற பெருங்கதை யடிகளையும்,

   
“கமையி னாடிரு முகத்தயல் கதுப்புறக் கவ்விச்  
   
 சுமையு டைக்கற்றை நிலத்திடைக் கிடந்ததூ மதியை  
   
 அமைய வாயிற்பெய் துமிழ்கின்ற வயிலெயிற் றரவிற்  
   
 குமையு றத்திரண் டொருசடை யாகிய குழலாள்”     (காட்சிப்.10)  

என்ற கம்பராமாயணச் செய்யுளையும் காண்க. குரல் - ஐம்பால் வகையுள்ஒன்றெனினும் ஆம், (பு.வெ. 223, உரை.)

     கூந்தற் பாயலில் துயிலும் தலைவரைத் தைவரற்குரிய காலத்தில்கூந்தலை மட்டுந் தைவருவே னென்னும் நினைவினால் வறுங்குரற்கூந்தல் தைவருவேனே யென்றாள்.

    (மேற்கோளாட்சி) 2. அழுகென்னும் உடம்பாட்டிற்கு அழாற்கென எதிர்மறைவந்தது (தொல். வினை. 6, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. தோழி தலைவியை இனையலென்றல் : அகநா.171:5,197:5, 227:5.

    2. தலைவன் பிரிவால் தலைவி அழுதல் : குறுந். 11:2, ஒப்பு, 307:9. உறைவி : குறுந்.400:7: அகநா. 298:23, 351:17; புறநா. 145:10.

    3-4. பொன்னின் உரைதிகழ் கட்டளை : “பொன்காண் கட்டளை”(பெரும்பாண்:220); “தாதுகப் பொன்னுரை கட்டளை கடுப்ப”(அகநா. 178:10-11.)

    3-5. குயில் மாவின் தாதைக் கொழுதுல் : “மாநனை கொழுதிமகிழ்குயி லாலும்” (நற்.9:10); “மாநனை கொழுதிய மணிநிற விருங்குயில்”(அகநா.25:6.)

    6. குரற் கூந்தல் : கலி. 72:20, 93:22.

    3-6. குயில் மாவிலிருந்து மகிழும் காலத்திலும் தலைவன்பிரிந்திருத்தலால் தலைவி வருந்துதல்: நற். 118:1-5, 157:4-6; அகநா.229:18-21.

(192)