கோவதத்தன் (பி-ம். கோவத்தன்.) (பி-ம்) 2. ‘வலனேர்’; 1-2. ‘மின்னுவானேயிரங்கு’, ‘மின்னுவரலேயிரங்கு’; 4. ‘விரண்டற்கே’.
(ப-ரை.) தோழி-, மின்னுபு - மின்னி, வான் ஏர்பு -மேகம் எழுந்து, இரங்கும் ஒன்றோ - ஒலிக்கின்ற செயல்ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது? அதன் எதிர் - அந்தமேகம் ஒலித்ததற்கு எதிரே, கானம் மஞ்ஞை - காட்டிலுள்ளமயில்கள், கடிய ஏங்கும் - விரைவனவாகி ஆரவாரிக்கும்;ஏதில கலந்த இரண்டற்கு - இவ்வாறு அயன்மையையுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும், என் பேதைநெஞ்சம்- எனது பேதைமையை யுடைய நெஞ்சம், பெருமலக்கு உறும்- பெரிய கலக்கத்தை அடையும்; என் எனப்படும்- இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்?
(முடிபு) தோழி, வான் இரங்கும் ஒன்றோ? மஞ்ஞை ஏங்கும்;இரண்டற்கு என் நெஞ்சம் மலக்குறும்.
(கருத்து) கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.
(வி-ரை.) கொல்: அசைநிலை. ஒன்றோ: எண்ணிடைச் சொல்(புறநா. 187:1-2, உரை.)
கார்காலம் வந்துவிட்டதை மேகத்தின் முழக்கம் உணர்த்தியது;அதனெதிர் அகவிய மயிலின் ஆரவாரம் பின்னும் அதனை வலியுறுத்தியது; இது காமத்தை மிகுவிப்பது; குறுந். 391.
ஏர்பு - கடலினீரைக் குடித்து வானத்தில் எழுந்து, தனக்குத் துன்பத்தைத் தருவனவாதலின் மேக முழக்கத்தை இரங்கு மென்றும், மயிலின் ஆரவாரத்தை ஏங்குமென்றும் குறித்தாள். அதன் எதிர்- அம் மேகத்தின் எதிரே எனலுமாம். ஏதில - தனது துன்பத்தைக் கருதாத அயன்மை யுடையன. இரண்டற்கு மென்ற முற்றும்மை விகாரத்தால் தொக்கது.
தலைவரது வாய்மையை உணராது வருந்துவதாதலின் பேதைநெஞ்சமென்றாள். தனது கலக்கத்தை நெஞ்சின் மேலேற்றிக் கூறினாள்.இதனால் தலைவி தோழிக்கு ஆற்றாமையின் காரணம் கூறினாளாயிற்று.
(மேற்கோளாட்சி) 1. ‘என்’ என்பது யாதென்னும் பொருளில் வந்தது.(சீவக. 1632,ந.)
ஒப்புமைப் பகுதி என்னெனப் படுங்கொல் தோழி : நற். 228:1, 332:1;அகநா. 206:1.
2.(பி-ம்) வலனேர்பு: முருகு. 1; முல்லை. 4; நெடுநல். 1; பட். 67.
3. மஞ்ஞை கார்காலத்தில் ஒலித்தல் : குறுந். 391:7-8.
கானமஞ்ஞை : குறுந். 38:1; சிறுபாண்.85; அகநா. 177:10, 344:6.
மேகத்தின் ஏதின்மை : “நொதுமல் வானத்து” (குறுந். 251:7.)
(194)