தேரதரன் (பி-ம். தோதான், தாமோதரன்.) (பி-ம்) 2. ‘தெழுதகு’, ‘தெழுதரும்’; 5. ‘தைஇயசைவளி’, ‘தைவசைவளி’, ‘மெய்பாயந்தூதா’, ‘மெய்பாய்ந்தூர்தர’; 6. ‘செய்புறு’, ‘செய்யறு’.
(ப-ரை.) தோழி -, தைவரல் அசை வளி - தடவுதலையுடைய அசைந்து வரும் காற்று, மெய் பாய்ந்துஉறுதர - உடம்பின் கண் பரந்து தீண்ட, அதனால், செய்வுஉறு பாவை அன்ன - அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற, என் மெய் - எனது மேனி, பிறிதுஆகுதல் அறியாதோர் - வேறுபாடுடையதாகுதலை அறியாதவராகிய தலைவர், வேண்டு வினை முடிநர் - தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய், சுடர் சினம்தணிந்து - கதிரவன் வெம்மை நீங்கி, குன்றம் சேர - அத்தகிரியை அடைய, படர் சுமந்து- நினைவு கூரும் துன்பத்தைமேற்கொண்டு, எழுதரு பையுள் மாலை - வாரா நிற்கும்துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், யாண்டு உளர்கொல் -எங்கே இருக்கின்றனரோ? அன்னோ - அந்தோ! இன்னாது -இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது, இரங்கும்-தலைவி வருந்துவாள், என்னார் - என்று நினையாராயினர்.
(முடிபு) என் மெய் பிறிதாகுதலை அறியாதோர், வேண்டுவினைமுடிநர் யாண்டுளர் கொல்? இரங்கு மென்னார்.
(கருத்து) என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும்மீண்டாரல்லர்.
(வி-ரை.) சினம்- வெயிலுமாம். சினந்தணிந்தமையைக் கூறினமையின் குன்றம் அத்தகிரியாயிற்று. படர்- தமியராயினார் படும் துன்பம். அதனைச் சுமந்ததென்று மாலையைக் கூறியது இலக்கணை. கொல்:ஐயம். ஓ: அசைநிலை; இரங்கற் குறிப்புமாம். அசைவளி - மெலிந்தகாற்று; மெல்லென்ற காற்றெனலுமாம்; என்பதனால் கூதிர்ப்பருவம்குறிக்கப்பட்டது.
தாம் பிரியுங் காலத்தில் பாவையன்னதாக விருந்த என் மேனியையேயறிந்தவர், இப்பொழுது அழகு கெட்டமையை உணராரென்றாள்;உணர்வரேல் மீள்வரென்பது தலைவியின் நினைவு. பாவையன்னவென்மேனி யென்றது கழிந்ததற்கிரங்கியதாதலின் தற்புகழ்ச்சி யாகாது;பட்டாங்கு கூறியதுமாம். ஏகாரம் ஈற்சை. செய்வு - செய்தல் (கலி.7:7, ந.) பாவை - பொன்னாற் செய்த பாவை; “செந்நீர்ப் பசும்பொன்புனைந்த பாவை, செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன, செய்யர்”(மதுரைக். 410-12) எனவும்,”தாவி னன்பொன்றைஇய பாவை, விண்டவழிளவெயிற் கொண்டுநின் றன்ன, மிகுகவின்” (அகநா. 212:1-3) எனவும்வருவனவற்றைக் காண்க.
மேற்கோளாட்சி2. பையுளென்னும் உரிச்சொல் நோயென்னும் குறிப்புணர்த்தியது (தொல். உரி. 45, சே, தெய்வச்.)
ஒப்புமைப் பகுதி 1. சுடர் சினந்தணிதல் : “கதிர்சினந் தணிந்த கையறுமாலை” (குறுந். 387:2.)
சுடரின் சினம் : கலி. 16:11; புறநா. 59:5-6.
சுடர் குன்றம் சேர்தல்: சிறுபாண்.170-71; மதுரைக். 546-7;குறிஞ்சிப். 215-6; கலி. 119:1-2, 120:3, 121:1, 126:1, 148:3; அகநா. 47:9.
மு. நற். 369:1.
2. படர்சுமந் தெழுதரு மாலை: “படருறு மாலை” (சிலப்.8:68.)
பையுண் மாலை:குறுந். 46:6.
5. அசைவளி : குறுந்.28:4, ஒப்பு.
6. தலைவிக்குப் பாவை: நற். 319:7-8; அகநா. 98:12.
செய்வுறு பாவை: புறநா. 243:2.
(195)