பரணர் (பி-ம்.) 3. ‘கைவளரோரி’; 8. ‘பெறினே’.
(ப-ரை.) நெஞ்சே-, திண் தேர் - திண்ணிய தேரையுடைய, கைவள் ஓரி - கைவண்மையையுடைய ஓரியினது,கானம் தீண்டி - கானத்தைத் தீண்டி, எறி வளி - வீசுகின்றகாற்றைப் போல, கமழும் - மணக்கின்ற, நெறிபடு கூந்தல் -நெறிப்பு அமைந்த கூந்தலாகிய, மை ஈர் ஓதி - மையைப்போன்ற தண்ணிய மயிரையுடைய, மாயோள்வயின் -மாமையை உடையோளிடத்து, இன்றை அன்ன நட்பின்இ நோய் - இன்றை நிலையைப் போன்று என்றும் உள்ளநட்பையுடைய இந்தக் காமநோயானது, இறுமுறை எனஒன்று இன்றி - அழியுமுறை என்பது ஒன்று இல்லாமல்,மறுமை உலகத்தும் - மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும், மன்னுதல் பெறும் - நிலைபேற்றை அடையும்; ஆதலின், பெறுவது இயையாது ஆயினும் - தலைவியை இப்பிறவியின்கண் பெறுதல் நம்மாட்டுப் பொருந்தாதாயினும்,உறுவது ஒன்று உண்டு - மறுமை யுலகத்துப் பெறுவதாகியநாம் அடையும் பயன் ஒன்று உண்டு.
(முடிபு) நெஞ்சே, இந்நோய் மறுமையுலகத்தும் மன்னுதல் பெறும்;பெறுவது இயையாதாயினும் உறுவதொன்றுண்டு.
(கருத்து) இனி இம்மையில் தலைவியைக் காணப்பெறேன்.
(வி-ரை.) மன், வாழிய: அசைநிலைகள். ஓரி - ஒரு வள்ளல். இந்தநட்பு என்றும் குன்றாது பிறவிதோறும் தொடர்ந்து வருவதென்றான்.மறுமை- மறுபிறவி.
மேற்கோளாட்சி மு. தோழி இற்செறிப்பு அறிவுறுப்பத் தலைவன் ஆற்றானாய்க் கூறியது (தொல். களவு. 12,ந.); தலைமகன் தஞ்சம் பெறாதுநெஞ்சோடு கிளந்தது (நம்பி. 154.)
ஒப்புமைப் பகுதி 2. வாழிய நெஞ்சே: குறுந்.19.3, ஒப்பு.
3. கைவள்ளோரி: “மழவர் பெருமகன் மாவள் ளோரி, கைவளம்”(நற். 52:9-10); “ஓரி விசும்பிற், கருவி வானம் போல, வரையாதுசுரக்கும் வள்ளியோய்” (புறநா.204:12-4.)
4. நெறிபடு கூந்தல்: குறுந். 116:4, 190: 1.
3-4. ‘‘வல்வில் லோரி கான நாறி, இரும்பல் லொலிவருங் கூந்தல்”(நற்.6:8-9.)
5. மையீரோதி: “மையிருங் கூந்தல்” (குறுந். 209:7); “மையுக்கன்ன மொய்யிருங் கூந்தல்” (மதுரைக். 417.)
மாயோள்: குறுந்.9:1,ஒப்பு.
6. இன்றையன்ன நட்பு: குறுந். 385:6, ஒப்பு.
6-8. நட்பு மறுபிறப்பிலும் மன்னுதல்: (குறுந். 2:3, ஒப்பு, 49:3-5, ஒப்பு.); “ஏனை யுலகத்து மியைவதா னமக்கென” (குறிஞ்சிப். 24.)
(199)