கோப்பெருஞ் சோழன். (ப-ரை.)மடந்தை - தோழியே, அருளும் அன்பும் நீக்கி - அருளையும் அன்பையும் துறந்து, துணை துறந்து - தம் துணைவியை விட்டு, பொருள்வயின் - பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு, பிரிவோர் - பிரியும் செயலை உடைய தலைவர், உரவோராயின் - அறிவுடையவராயின், உரவோர் உரவோர் ஆக - அந்த ஆற்றலை உடையோர் அறிவுடை யவரே ஆகுக! நாம் - அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம், மடவம் ஆக - அறிவிலேம் ஆகுக!
(முடிபு) மடந்தையே, பிரிவோர் உரவோராகுக! நாம் மடவமாக!
(கருத்து) என்னைப் பிரிந்து செல்லுதல் அறிவுடைய தலைவர்க்கு அழகன்று.
(வி-ரை.)அருள் - தம்மோடு ஒரு தொடர்பும் இல்லாதார் மாட்டும் அவர் துயரம் கண்டால் உண்டாகும் இரக்கம்; அன்பு - தொடர்பு உடையாரிடத்தும், தன்னாற் புரக்கப்படுவார் மேலும் உளதாகிய காதல் (புறநா.5:5, உரை.) அன்பினின்றும் அருள் உண்டாதல் தோற்றும் முறை; அருளின்பின் அன்பு நீங்குதல் நீங்கும் முறை, பெண்ணென்னும் பொதுமை பற்றி என்பால் அருளேனும், துணைவி என்னும் சிறப்புப் பற்றி அன்பேனும் உளராயின் நீங்கார் என்பது குறிப்பு. துணைவியைத் துறந்து போவார் அருளும் அன்பும் உடையராதல் இல்லை என்பது பெறப்பட்டது. உரவோர் - அறிவுடையோர், வன்மையை உடையோர்; உரம் - அறிவு; “உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்”(குறள், 24.) மடவம் - அறிவில்லேம்; ‘மடவர் அறிவில்லாதார்’(புறநா. 106:4 உரை) உரவோராக என்றது உரவோரல்லர் என்னும் நினைவிற்று.
மேற்கோளாட்சி4. ககரவுயிர்மெய் வியங்கோள் விகுதியாக வந்தது (நன்.337,மயிலை.); ககரவுயிர் மெய்யீற்று வியங்கோள் வாழ்த்துதற் பொருண்மைக் கண் வந்தது (இ.வி. 238.)மு. பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது (தொல். அகத், 45, இளம்.); செலவுணர்த்திய தோழிக்குத் தலைவி செல வழுங்கக் கூறியது (தொல். கற்பு. 6,ந.)
ஒப்புமைப் பகுதி1. அருளும் அன்பும் நீக்கல்:“அருளு மன்பு நீக்கி நீங்கா, நிரயங் கொள்பவர்” (புறநா. 5:5- 6) அருளும் அன்பும்; குறள். 757.
1-2. துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர்:“நறுநுத னீத்துப் பொருள்வயிற் செல்வோய், உரனுடை யுள்ளத்தை” (கலித். 12:9-10). 1-2. அன்பையும் அருளையும் நீக்கிப் பிரிதல் : “அவரே , அன்பின்மையி னருள்பொரு ளென்னார், வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே” (குறுந். 395: 1-3.) பொருள்வயிற் பிரிதல் அன்பின்மை: “பொருள்வயி னகறல், அன்பன்று” (கலித். 2:24-5.) பொருள்வயிற் பிரிவோர் அருளிலராதல்: “அருளி லாளர் பொருள் வயி னகல” (அகநா. 305:9) 1-3. அருளும் அன்பும் நீக்கிப் பொருள் செய்தல் அறிவுடைமை யன்று: “அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம், புல்லார் புரள விடல்” (குறள் . 755.) 3-4. உரவோர், மடவம்: “ உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்” (பதிற்.73:1.)
(20)