(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)
 207.    
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென் 
    
றத்த வோமை யங்கவட் டிருந்த 
    
இனந்தீர் பருந்தின் புலம்புகொ டெள்விளி 
    
சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணை யாகும் 
5
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி 
    
நல்லடி பொறிப்பத் தாஅய்ச் 
    
சென்றெனக் கேட்டநம் மார்வலர் பலரே. 

என்பது செலவுக் குறிப்பறிந்து, அவர் செல்வார் (பி-ம். செல்லார்,சொல்லார்) என்று தோழி சொல்லக் கிழத்தி உரைத்தது.

     (செலவுக் குறிப்பு - ஆயுதங்களைத் துடைத்தல் முதலியன; கலி. 7;நற். 177.)

உறையன்.

     (பி-ம்.) 1. ‘செப்பினெஞ்’, ‘செப்பிநாம்’, ‘சொலினே’; 3. ‘புலம்புகொண்டவ்விளி’; 5. ‘கல்வரைபலாது’, ‘தோல்வழங்கு’, ‘தேர்வழங்கு’,‘பேஎர்பட்ட தொல் வழங்கு’.

    (ப-ரை.) செப்பினம் செலின் - நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின், செலவு அரிதுஆகும் - செல்லுதல் அரிதாகும், என்று - என்று கூறி,அத்தம்ஓமை - பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது, அம்கவட்டு இருந்த - அழகிய கிளையின்கண் இருந்த, இனம்தீர் பருந்தின் - இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது,புலம்பு கொள் தெள்விளி - தனிமையைப் புலப்படுத்தலைக் கொண்ட தெளிந்த ஓசை, சுரம் செல் மாக்கட்கு - அருவழியிற்செல்லும் மனிதர்களுக்கு, உயவு துணை ஆகும் - உசாத்துணையாக அமைதற்கு இடமாகிய, கல் வரை அயலது - கற்களையுடைய மலையினது அயலதாகிய, தொல் வழங்குசிறுநெறி - யாவரும் நடக்கும் பழையதாகிய சிறியவழியில்,நல் அடி பொறிப்ப - தம் நல்ல அடிகள் சுவடு செய்ய,தாஅய் - தாவி, சென்றென - சென்றாரென்று, கேட்ட நம்ஆர்வலர் பலர் - கேட்ட நம்முடைய அன்பர் பலராவர்.

    (முடிபு) என்று சென்றெனக் கேட்ட ஆர்வலர் பலர்.

    (கருத்து) தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.

    (வி-ரை.) அத்த வோமை - சிவந்த அடியையுடைய ஓமையென்பதும் பொருந்தும்; “ஓமைச் செவ்வரை” (நற். 279:7); “ஓமைப் பெரும் பொளிச் சேயரை நோக்கி” (அகநா. 397:11-2); “அரக்கார்ந்த வோமை” (கைந்நிலை. 19.)

    இனந்தீர் பருந்தாதலின் புலம்புகொள் விளியாயிற்று. பிற ஒலியின்மையின் தெள்விளியாயிற்று. தோல்வழங்கென்ற பாடத்திற்கு யானைகள்வழங்குகின்றவெனப் பொருள் கொள்க.

    நல்லடியென்றது அப்பாலைநிலத்தில் நடத்தற்குரிய தன்றென்னும்நினைவிற்று. சென்றாரெனவென்பது சென்றென விகாரப்பட்டு நின்றது.

    “என்பால் அன்புடையார் பலர் கேட்டு இதனை எனக்கு முன்னரேதெரிவித்தனர். நீ இப்பொழுது தெரிவித்தலால் ஆகும் பயன் யாது?எல்லோரையும் போல நீ கேட்டலை யன்றிச் செலவழுங்குவித்தாயல்லை”எனத் தோழியின் நொதுமற்றன்மையைச் சுட்டித் தலைவி இரங்கினாள்.

    என்று சொல்லிச் சென்றாராக, அவர் அங்ஙனம் கூறியதைக் கேட்டஆர்வலர் பலரென்றலும் ஒன்று.

    பழைய கருத்தில், செல்லாரென்பது பாடமாயின், “அவர் சென்றனரென அறிந்து கூறினவர் பலராக இருப்ப, நீ செல்லாரென்றது என்னை?”எனவும், சொல்லாரென்பது பாடமாயின், “அவர் சொல்லாது அகறலையாவரும் அறிந்தனர்; நீ அவரைச் செல்லாமல் தடுத்தனையல்லை”எனவும் பொருள் கொள்க.

    ஆர்வலர் - ஆர்வமில்லாரைச் சுட்டிய குறிப்புமொழியெனலும்பொருந்தும். ஏகாரங்கள் அசை நிலை.

    ஒப்புமைப் பகுதி 1. சொல்லிப் பிரிதலரிதாதல்: “மனமகிழ்ந்து, தெருட்டிற்றெளியலள் செப்பும் வகையில்லை” (திருச்சிற். 270.)

    2. அத்தவோமை: “ஓமை நீடிய கானிடை யத்தம்” (நற். 198:2.)

    3. தெள்விளி: அகநா. 17:13, 28:10. புலம்புகொள் தெள்விளி: நற். 212:2, 305:7.

    பருந்தின் தெள்விளி: “வளைவாய்ப் பருந்தின் வள்ளுகிர்ச் சேவல்,கிளைதரு தெள்விளி” (அகநா. 363:13-4.)

    2-3. ஓமைக்கவட்டிற் பருந்து இருத்தல்: “பருந்திளைப் படூஉம் பாறுதலை யோமை”, “கருங்கா லோமை யேறி வெண்டலைப், பருந்து பெடை பயிரும்” (அகநா. 21;15, 117:6-7.)

    ஓமையிலிருந்து பருந்து விளித்தல்: “உலறுதலைப் பருந்தினுளிவாய்ப் பேடை, அலறுதலை யோமை யங்கவட் டேறிப், புலம்புகொள விளிக்கு நிலங்காய் கானத்து’’ (ஐங். 321:1-3.)

    4. உயவுத்துணை: ஐங். 477:3; அகநா. 103:12, 298:22, 338:11, 343:14.

    3-4. பருந்தின் விளி உயவுத்துணையாதல்: “பருந்திருந்து யாவிளி பயிற்றும்”(அகநா.19:2-3.)

    5. (பி-ம்.) தோல்வழங்கு சிறுநெறி: ஐங். 314; அகநா. 123:1-4, 318: 1.

    வரையயலது சிறுநெறி: “பெருவரைச் சிறுநெறி” (நற். 261:10.)

(207)