கபிலர். (பி-ம்) 1. ‘என்றேனலவென்’; 2. ‘துமித்த நெறிதாள்’; 4. ‘நின்று கொய் மலையகநாடனொடு’; 5. ‘யொன்றி னானே யொன்றேனானே’, ‘யென்றிசி னானே’.
(ப-ரை.) தோழி--, ஒன்றேன் அல்லேன் - யான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையேனல்லேன்; ஒன்றுவென் - பொருந்தும் இயல்பினேன்; ஆயினும், ஒன்றனான்- நொதுமலர் வரைவொடு புகுவதாகியதொரு காரணத்தினால், குன்றத்து - மலையினிடத்து, பொரு களிறு மிதித்த - ஒன்றோடொன்று பொருதகளிறுகளால் மிதிக்கப்பட்ட, நெரி தாள்வேங்கை - நெரிந்த அடியையுடைய வேங்கைமரம், குறவர் மகளிர் - குறமகளிர், கூந்தற்பெய்ம்மார் - தம்முடைய கூந்தலின்கண்ணே அணிந்துகொள்ளும்பொருட்டு, நின்று கொய - ஏறவேண்டாமல்நின்ற படியே மலர்களைக் கொய்யும்படி, மலரும் - தாழ்ந்துமலர்தற்கிடமாகிய, நாடனொடு - நாட்டையுடைய தலைவனோடு, ஒன்றேன் - பொருந்தேன்.
(முடிபு) தோழி, ஒன்றேனல்லேன்; ஒன்றுவென்; ஒன்றனானேஒன்றேன்.
(கருத்து) தலைவர் வரவு நீட்டித்தலின் நொதுமலர் வரையப்புகுவரென்று யான் ஆற்றேனாயினேன்.
(வி-ரை.) “நின்னை வரைந்து கொள்ளற்பொருட்டன்றே அவர்பிரிந்தனர். அவர் தம் கருத்தோடு நீ ஒன்றாது ஆற்றாயாகின்றதென்?”என்ற தோழிக்குக் கூறியது இது. ஒன்றுதல் - மனத்தாற் பொருந்திஆற்றியிருத்தல்.
பொருத களிறு மிதித்தலால் வேங்கைமரம் சாய்ந்து மகளிர் ஏறாமேமலர் பறித்தற்கு எளிதாக மலர்ந்தது. மகளிர் வேங்கை மரத்தின்மேல்ஏறிப் பூப்பறித்தலுமுண்டென்பது,
| “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை |
| மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை |
| பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்” (குறுந். 26: 1-3) |
என்பதனாற் பெறப்படும்.
பொருகளிற்றால் மிதிக்கப்பட்ட வேங்கைமரம் சிதைந்தொழியாதுபின்னும் பறித்தற்கு எளியதாகித் தாழ்ந்து மலருமென்றது, நொதுமலர்வரைவினால் அச்சமுற்றேனாக, அதுவே காரணமாக விரைவில்மணந்துகொண்டு பின்னும் எளிதில் இன்பந்துய்த்தற்கு உரியானென்றகுறிப்பு உணர்த்தியது.
ஒன்றனானே - தாம் கூறிய காலத்தே வாராமையாகியதொருகாரணத்தாலெனலும் ஆம்; ‘பிரிந்து சென்றதற்கே புலந்து ஒன்றாஇயல்பினரைப் போலாது, பிரிந்தும் உரிய காலத்தே வரின் ஒன்றும்இயல்பினளே யான்; அங்ஙனம் வாராமைக் காரணத்தால் அவ்வியல்புநீங்கி ஒன்றேனாயினேன்’ என்பது கருத்தாகக் கொள்க.
மேற்கோளாட்சி 1-3. தலைவி உள்ளுறையுவமம் கூறுங்கால் அவளறியுங்கருப் பொருளானே கூறல்வேண்டும்; ‘பொருகளிறு மிதித்த நெரிதாள்வேங்கைமரம் படப்பையில் உள்ளதாகலானும், தன்னால் பூக்கொய்யப்படுமாகலானும் அஃது அவளறி கிளவி எனப்பட்டது’ (தொல். உவம. 26,பேர்.)
மு. இறைச்சிப்பொருள் பிறிதுமோர் பொருள்கொள்ளக் கிடந்தது; ‘வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறுஎன்னெனக் கவன்ற தோழிக்கு உடன்போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியது; ஆதலின், இதனுள் பொருகளிறு என்றமையால், தலைமகள்தமர் தலைமகன் வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனரென்பது தோற்றுகின்றது. பொருகளிறு மிதித்த வேங்கை யென்றதனால்,பொருகின்ற இரண்டு களிற்றினும் மிதிப்பது ஒன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்றுகொய்ய மலருமென்றதனான், முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவதுஇப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள் பட்டது; இதனானேபண்டு நமக்கு அரியனான தலைமகன் தன்னை அவமதிக்கவும் நமக்குஎளியனாகி அருள் செய்கின்றானெனப் பொருள்படக் கிடந்தவாறு காண்க’ (தொல். பொருள்.34, இளம்.); மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரோடு மலர்ந்தாற்போல யானும் உளேனாயினே னென்றமையின் மெய்யுவமப் போலியாயிற்று (தொல். உவம. 25, பேர்.); உள்ளுறையுவமம் தெய்வம் ஒழிந்த கருப்பொருளை நிலமாகக் கொள்ளும்; ‘இக் குறுந்தொகை, பிறிதொன்றன் பொருட்டுப் பொருகின்ற யானையால் மிதிப்புண்ட வேங்கை நசையற வுணங்காது மலர் கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனென்றதனானே, தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் எம்மை இறந்துபாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினானெனவும், அதனானே நாமும் உயிர் தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போலெனவும் உள்ளத்தான் உவமங் கொள்ள வைத்தவாறு காண்க’ (தொல். அகத். 47, ந.); உள்ளுறை யுவமம் வந்தது(கலி. 38, ந.)
ஒப்புமைப் பகுதி 2. களிறு மிதித்த வேங்கைமரம்: “மழகளி றுரிஞ்சியபராரை வேங்கை” (நற். 362:7); “புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினைபுலம்ப, முதல்பாய்ந் திட்ட முழுவலி யொருத்தல்’’ (அகநா. 227: 8-9.)
2-3. வேங்கை மலரை மகளிர் அணிந்து கொள்ளுதல்: “தலைநாட்பூத்த பொன்னிணர் வேங்கை, மலைமா ரிடூஉ மேமப் பூசல்”(மலைபடு. 305-6); ‘கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப், பொன்செய்கம்மியன் கைவினை கடுப்பத், தகைவனப் புற்ற கண்ணழி கட்டழித்,தொலிபல் கூந்த லணிபெறப் புனைஇ” (நற். 313:1-4); “அகலறைமலர்ந்த வரும்புமுதிர் வேங்கை ஒள்ளிலைத் தொடலை தைஇ”, ‘‘மலிதொட ரடைச்சிப், பொலிந்த வாயமொடு காண்டக வியலி”, “கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல், .. யாமணிந் துவக்கும்”, “பொரியரை வேங்கைத், தண்கமழ் புதுமலர் நாறும், அஞ்சி லோதி”, ”வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள, வங்கூழாட்டிய வங்குழை வேங்கை” (அகநா. 105:1-2, 188:8-10, 345:8-9, 365:13-5, 378:2-3.)
2-4. வேங்கைப் பூவை மகளிர் கொய்தல்: குறுந். 26:1-3;மதுரைக். 296-7; ஐங். 297: 1-2, 311:1; அகநா.48;6; 52:2-4.
(208)