(தன் வரவுக்குரிய காலமாகத் தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் மெய்ம்யை உடையோராதலின், அவர் கூறிய பருவம் இஃதன்று” என்று கூறித்தான் ஆற்றி இருத்தலைப் புலப்படுத்தியது.)
 21.   
வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு 
    
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்  
    
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் 
    
கானங் காரெனக் கூறினும்  
5
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே. 

என்பது பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, ‘அவர் வரக்குறித்த பருவ வரவின்கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு!’ என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பறிந்த தலைமகள், “கானம், அவர் வருங்காலத்தை (பி-ம். வருங் கார் காலத்தை)க் காட்டிற்றாயினும் யான் இது கார் காலமென்று தேறேன், (பி-ம். தேறனென்றறிக) அவர் பொய் கூறாராகலின்’’ எனத்தான் (பி-ம். தலைமகள்) ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.

ஓதலாந்தையார்.

     (பி-ம்.) 3-4. ‘கொன்றை கானம்’.

     (ப-ரை.) தோழி, வண்டுபட - வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி, ததைந்த - செறிந்து மலர்ந்த, கொடி இணர் - நீட்சியை உடைய பூங்கொத்துக்களை, இடை இடுபு - தழைகளின் இடையே மேற்கொண்டு, பொன் செய் புனை இழை - பொன்னால் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை, கட்டிய - கோத்துக் கட்டிய, மகளிர் கதுப்பின் - மகளிருடைய கூந்தலைப் போல, தோன்றும் - கண்ணிற்குத் தோன்றுகின்ற, புது பூ கொன்றை - புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய, கானம் - காடானது, கார் என - இது கார்ப் பருவமென்று, கூறினும் - அம் மலர்களால் தெரிவிப்பினும், யான் தேறேன் - நான் தெளியேன்; ஏனெனின், அவர் பொய் வழங்கலர் - தலைவர் பொய்ம்மொழியைக் கூறார்.

    (முடிபு) கானம் காரெனக் கூறினும் அவர் பொய் வழங்கலராதலின் யான் தேறேன்.

    (கருத்து) இது கார்ப்பருவம் அன்று.

    (வி-ரை.) ததைந்த - மலர்ந்த (அகநா.1:1, உரை.) கொடி - ஒழுங்கு (கலித்.41:6, ந.) இழையென்றது பொன்னரி மாலை முதலியவற்றை. இடையிடுபு தோன்றும் என்க. புதுப்பூ வென்றமையால் பருவம் தொடங்கிய அணிமை பெறப்படும். கொன்றை மரத்திற்கு மகளிரும், தழைக்கு அவர் கூந்தலும், பூங்கொத்திற்குப் பொன்னிழையும் உவமம். கொன்றை நீண்ட கொத்தாகக் கார்காலத்தில் மலர்வது. கானங் கூறல் என்றது மரபு வழுவமைதி; “என்னா மரபின வெனக் கூறுதலும்” (தொல். எச்ச.26.) யானோ: ஓ, பிரிநிலை. அவர் என்றது நெஞ்சறி சுட்டு. பொய் வழங்கல ரென்றது, கார்ப்பருவத்தில் மீண்டு வருவேனென்று தலைவன் கூறிச் சென்றதைக் குறிப்பித்தது. ஏகாரம்: அசை.

    கொன்றை மகளிரைப் போலத் தோற்றினும் மகளிரல்ல வென்று தெளிவது போல, இது கார்ப்பருவம் என்று தோற்றினும் அன்றென்று தெளிந்தேன் என்றபடி.

    (மேற்கோளாட்சி) 5. பிரிநிலை ஓகாரத்தின்பின் வருமொழி இயல்பானது (தொல்.உயிர்மயங்.88, இளம், ந.); பிரிநிலை ஓகாரம் வந்தது (தொல்.இடை.8, சே, ந.) 5-6. பிரிநிலை ஓகாரம் (தொல். இடை.8, தெய்வச்.).

    மு. இது பருவங்கண்டுழியும், பொய்கூறாரென்று தலைவி ஆற்றி இருந்தது (தொல்.அகத்.14, ந.); ‘கானங் காரெனக் கூறவும் வாரா ரென்ற வழி, அது கூறினும் யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தால் பிரிந்தது’ (தொல். கற்பு.6, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. வண்டுபடத் ததைந்தபூ: ‘‘வண்டுபடத் ததைந்த கண்ணி”, “அருவிடர்த் ததைந்த, சாரற் பல்பூ வண்டுபடச் சூடி” (அகநா.1:1, 22: 12-3).

    3. கூந்தலுக்குக் கொன்றைத் தழை: “குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட” (திருவாரூர் மும்மணிக். 1:8.) 2-3 கொன்றைப் பூவிற்குப் பொன்: (குறுந். 233:1-3); “பொன்வீக் கொன்றை” (நற்.246:8); “கனமலர் கொன்றை” (தே. திருஞா.வாள்கொளி புத்தூர்.); திருச்சிற்.108.

     1-3. கொன்றைக்கு இழை அணிந்த மகளிர்: “இழையணி மகளிரின் விழைதகப் பூத்த, நீடுசுரி யிணர சுடர்வீக் கொன்றைக், காடுகவின் பூத்த” (நற்.302:1-3.). கொடியிணர்க் கொன்றை: “கொன்றை ... கொடியிண ரூழ்த்த” (குறுந். 66;1-4); “தூங்கிணர்க் கொன்றை” (குறிஞ்சிப். 86) 3-4 கொன்றை கார்காலத்தில் மலர்தல்: (குறுந். 66:1-5, 148:3-5, 233:1-4); “கார் நறுங் கொன்றை” (புறநா.1:1 அடிக்); “கார்விரி கொன்றை கலந்த கண்ணுதலான்”, “காரார்பூங் கொன்றையினான்” (தே.திருஞா,.); “மழைக்கரும் பும்மலர்க் கொன்றையினானை” (தே.சுந்தர.) 2-4 கொன்றை கார்காலத்தில் மலர்தலும் பொன்னை ஒத்திருத்தலும்: “கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்” (அகநா.கடவுள்.1) மு.குறுந். 66.

(21)