(தலைவன் பிரிந்தகாலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.)
 211.    
அஞ்சி லோதி யாய்வளை நெகிழ 
    
நேர்ந்துநம் மருளார் நீத்தோர்க் கஞ்சல் 
    
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத் 
    
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை 
5
வேனி லோரிணர் தேனோ டூதி 
    
ஆராது பெயருந் தும்பி 
    
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. 

என்பது ‘இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, நம்மை ஆற்றாரெனநினைந்து மீள்வர்கொல்’ எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது.

காவன்முல்லைப் பூதனார்.

    (பி-ம்.) 2. ‘நொந்துநமருளார்’; 3-4. ‘யெஞ்சா’, ‘தீந்த’, ‘யெஞ்சாறீந்த’; 4. ‘மராஅந்தொங்கல் வஞ்சினை’.

    (ப-ரை.) தோழி--, எஞ்சா - குறைந்து, தீய்ந்த மராஅத்து - வேனிலால் வெம்பிய மராமரத்தினது, ஓங்கல் வெசினை - ஓங்குதலையுடைய வெவ்விய கிளையின்கண்,வேனில் ஓர் இணர் - வேனிற் காலத்து மலர்ந்த ஒற்றைப்பூங்கொத்தை, தேனோடு ஊதி - தேனென்னும் சாதிவண்டோடு ஊதி, ஆராது பெயரும் - அதன்கண் ஒன்றுமின்மையின் உண்ணாமல் மீள்கின்ற, தும்பி - தும்பியென்னும் வண்டுகளையுடைய, நீர் இல் வைப்பின் -நீரில்லாத இடங்களையுடைய, சுரன் இறந்தோர் - பாலைநிலத்தைக் கடந்தோரும், அம் சில் ஓதி - அழகிய சிலவாகியகூந்தலையுடைய நினது, ஆய் வளை நெகிழ - அழகியவளைகள் நெகிழும்படி, நேர்ந்து - நம் விருப்பத்திற்குஉடம்பட்டு, நம் அருளார் - நம்பால் அருள் செய்யாராகி,நீத்தோர்க்கு - நம்மைப் பிரிந்து சென்றோருமாகிய தலைவர்பொருட்டு, அஞ்சல் எஞ்சினம் - அஞ்சுதலை நீங்கினேம்.

    (முடிபு) தோழி, சுரன் இறந்தோராகிய நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம்.

    (கருத்து) தலைவர் மீளார்.

    (வி-ரை.) நெகிழும்படி நீத்தோர். ‘அவர் இடைச் சுரத்தில் தம்துணையையிழந்து கவலுவனவற்றைக் கண்டு மீளும் இயல்புடையராயின்,ஈண்டு நாம் துன்புறும்படி செய்து பிரியார். நம்மோடு உடம்பட்டுஈண்டிருந்து அருள்செய்வார்’ என்பது படக் கூறினாள்.

    நேர்தலாவது செலவழுங்கல் நேர்ந்தென்னுமெச்சம் அருளாரென்பதன் பகுதியோடு முடிந்தது. எஞ்சுதல் - குறைதல். மராமரம் வேனிலிற் பூப்பது. தேன் - ஒரு சாதி வண்டு (சீவக. 892, ந.) ஆராது - தெவிட்டா தெனினும் பொருந்தும்.

    “அவர் இரங்கும் நெஞ்சுடையராயின் வளை நெகிழும்படி நமக்குஉளதாகும் துன்பத்தையும், நீரில் வைப்பிற் சுரம் போகுங்கால் தமக்குஉளதாகும் துன்பத்தையும் எண்ணிப் பிரியார். அவர் பிரிந்தமையின்இடைச்சுரத்தே இரங்கி மீளா வலிய நெஞ்சினராவர்” என்று தோழிகூறினாள்.

    இடைச்சுரத்திலிருந்து வினைமுடியாமல் மீளுதல் அறனன்றாதலின்தலைவி கவன்றாள்.

     ஒப்புமைப் பகுதி 1. அஞ்சிலோதி: குறுந். 214:3, 280:2; குறிஞ்சிப். 180;நற். 105:10, 324:8, 355:8, 370:7; ஐங். 49:1, 391:6, 448:5; அகநா. 261:3;சீவக. 2576.

    2. வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு.

    4-5. மராம் வேனிலில் மலர்தல்: குறுந். 22:3-4, ஒப்பு; ஐங். 348.

    7. நீரில் வைப்பிற் சுரம்: “நீரி லத்தத் தாரிடை”, “நீரிலாராற்றுநிவப்பன” (அகநா. 17:12, 45:4.)

(211)