மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் (பி-ம். மதுரையளக்கர் ஞாழர் மள்ளர், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.) (பி-ம்.) 1. ‘பயப்பயப்’, ‘பைப்பைய’, ‘பையப்பயப்’; 6. ‘கொடுவரை’.
(ப-ரை.) தோழி-, படரும் பைபய பெயரும் - துன்பமும்மெல்ல மெல்ல நீங்கும்; சுடரும் என்றூழ் - ஒளி விடுகின்றசூரியன், மா மலை மறையும் - பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல் வறு கயம் துழைஇய -நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, இலங்கு மருப்புயானை - விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள்,குறு பொறை மருங்கின் - குறிய குண்டுக் கற்களுக்கு அருகில்,அமர் துணை தழீஇ - தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,கொடு வரி இருபுலி - வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், காக்கும் - பாதுகாக்கின்ற, நெடுவரைமருங்கின் - உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள, சுரன்இறந்தோர் - பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய,அவர் - அத் தலைவர், இன்று வருவர்--; வாழி - நீ வாழ்வாயாக!
(முடிபு) தோழி, படரும் பெயரும்; என்றூழ் மறையும்; சுரனிறந்தோராகிய அவர் இன்று வருவர்; வாழி!
(கருத்து)தலைவர் இன்று வருவர்.
(வி-ரை.)படர் - தலைவனை நினைந்து வருந்தும் துயர். வருவர்கொல்; கொல், அசை நிலை. இலங்கு மருப்பியானை யென்றாள்,புலியொடு பொரும் கருவி உடையன என்பதைப் புலப்படுத்த. குறும்பொறை மருங்கில் மறைந்து ஆண் யானை பெண் யானைகளைத் தழுவிநின்றன. குறிஞ்சி திரிந்த பாலை யாதலின் நெடுவரை மருங்கிற் சுரனென்றாள்.
ஒப்புமைப் பகுதி 1. பைபய: நற். 41:3, 199:10, 378:3; ஐங். 83:1, 113:5. 5. குறும்பொறை: குறுந். 134:3, 333:4.
அமர்துணை தழீஇ: குறுந். 237:1.
4-6. யானை பிடியைப் புலியினின்றும் காத்தல்: மலைபடு. 307-9.
யானை பிடியைக் காத்தல்: அகநா. 168:9-10, 189:4-6.
7. சுரனிறந்தோர்: குறுந். 211:7, 260:8, 314:6.
(215)