சேரமானெந்தை. (பி-ம்.) 3. ‘வலஞ்சுழி’ 5. ‘தேனூரொண்ணுத’
(ப-ரை.) சிலம்பு அணிகொண்ட - மலைப் பக்கமானது தனக்கு அழகாகக் கொண்ட, வலம் சுரி மராஅத்து - வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலரை உடைய, வேனில் அம்சினை - வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில், கமழும் - மணக்கின்ற, தேம் ஊர் ஒள்நுதல் - நன்மணம் பரவிய விளக்கத்தை உடைய நெற்றியை உடையாய், நீர் வார் கண்ணை - துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி, நீ இவண் ஒழிய - நீ இங்கே தனியாகத் தங்க, பிரிகிற்பவர் - நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றல் உடையவர், யார் - யாவர்? செலவு - தலைவர் செல்லுதல், நின்னொடும் - நின்னோடே ஆகும்.
(முடிபு) ஒண்ணுதல், நீ ஒழியப் பிரிகிற்பவர் யார்? செலவு நின்னொடும் ஆகும்.
(கருத்து) தலைவர் நின்னைப் பிரிந்து செல்லார்.
(வி-ரை.) தலைவன் பிரிந்தால் தலைவி துயர மிகுதியினால் அழுது கொண்டேயிருத்தல் இயல்பாதலின், ‘நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய’ என்றாள்; “அழப்பிரிந் தோரே” (குறுந். 307:9.) யாரோ என்பது ஒருவருமிலர் என்னும் பொருளில் வந்தது. பிரிகிற்பவர் - பிரியச் சம்மதிப் போரெனலுமாம்; கிற்றல் - சம்மதித்தல் (தக்க.57, உரை). வலஞ்சுரி என்றது பூவிற்கு அடை;மராம்: ஆகுபெயர்; “நெடுங்கான் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற” (ஐங்.383: 2-3). வேனில் - இங்கே இளவேனில்; மராம் இளவேனிலில் மலரும் என்பது, ஐங்குறு நூற்றில் இளவேனிற் பத்தில் உள்ள, “அவரோ வாரார் தான்வந் தன்றே,
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம், மணங்கமழ் தண்பொழின் மலரும் பொழுதே” (348) என்பதனால் பெறப்படும். மலர்ந்த கிளையாதலின் அஞ்சினை என்றாள்.
தேமூர் ஒண்ணுதல் என்றது நுதலின் மணத்தையும் விளக்கத்தையும் புலப்படுத்தியவாறு. உத்தம மகளிருடைய நுதல் இயற்கை மணம் உடையதென்பதை ‘நறுநுதல்’ என்னும் வழக்கினால் அறியலாகும்; திலக முதலியவற்றால் மணம் பொருந்திய நுதல் என்றலும் பொருந்தும்; “திலகந்தைஇய தேங்கமழ் திருநுதல்” (முருகு.24.) தேமூசு ஒண்ணுதல் என்னும் பாடத்திற்குத் தன் பாலுள்ள வாசனையை விரும்பிய வண்டுகள் மொய்க்கும் ஒள்ளிய நெற்றியை உடையாயென்று பொருள் கொள்க; தேம் - வண்டு. செலவு என்பதன்பின் ஆகுமென ஒரு சொல் அவாய் நிலையால் வருவித்து முடிக்க.
ஆற்றாமை மிக்க தலைவி, ‘யாரோ பிரிகிற்பவரே’ என்று தோழி கூறிய மாத்திரத்தில் துயர் நீங்கித் தலையெடுத்து நிமிர்ந்து நோக்கினாளாக, நெற்றியின் விளக்கம் கண்ட தோழி, ‘தேமூ ரொண்ணுதல்’ என்று விளித்தாள்.
மேற்கோளாட்சி 1. முன்னிலை யொருமை வினைக்குறிப்பு முற்று வினை யெச்சக் குறிப்பாகியது. (நன்.350, மயிலை.351, சங்க., இ.வி. 250).
மு. ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது (தமிழ்நெறி.24.)
ஒப்புமைப் பகுதி 1. நீர்வார் கண்ணை: “நீர்வார் கண்ணேன் கலுழும்”
(நற்.143:4): “நீர்வார் கண்ணேந் தொழுது”
(புறநா.113:6); “நீர்வார் கண்ணை யெம்முன் வந்தோய்”
(சிலப். 20:48) 1-2. “யாரோ பிரிகிற் பவரே குவளை நீர்வார் நிகர்மல ரன்னநின், பேரமர் மழைக்கண் டெண்பனி கொளவே” (நற்.391:8-10.) தலைவன் பிரிவதால் தலைவி அழுதல்: குறுந். 11:2,ஒப்பு.
3. வலஞ்சுரி மராம்: “வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீ” (அகநா.83:1); “பொரியரை மரா அத்து வாலிணர்ச் சுரிமலர்” (யா.வி. 44, மேற்: ‘பரியல்’); ஐங்.348:2; கலி.26:1.
3-4 மராம் வேனிலில் மலர்தல்: (குறுந். 211:4-5); “வேனற் பூத்த மராங்கோதை” (தே.திருஞா.நாகைக்காரோணம்.)
5. நுதலுக்கு மணம் உண்மை (குறுந். 59:3, 205:7, 259:2-3, 273:3, 323:4-5); “நறுநுத லரிவை”, “தேங்கமழ் திருநுதல்” (நற்.50:10, 62:6); முருகு.24; “நன்னுத னாறு முல்லை மலர” (ஐங்.492:2): “நறு நுதல்” (கலி. 14:4, 21:6, 53:14, 59:22); “மையிருங் கான நாறு நறுநுதல்”, “தேங்கமழ் புதுமலர் நாறுமிவ ணுதலே”, “நாறு நறுநுதல்”, “தேங்கமழ் திருநுதல்” (அகநா.43:10, 78:24, 93:10, 238:18, 389:3) (பி-ம்) தேமூசொண்ணுதல்: “சுரும்பிமிர் சுடர்நுதல்” (நற்.245:11); “நுதலும், நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே” (சிற்றட்டகம்).
(22)