(தலைவியும் தோழியும் நீராடி ஒருங்கிருந்த இடத்து அத்தோழியின்பால் தலைவிக்குளதாய ஒற்றுமையை அறிந்து, “இவளே தலைவியைநாம் பெறுதற்குரிய வாயில்; இனி இவள் வாயிலாக நாம் இரந்து குறைபெறுதும்” என்று தலைவன் நினைந்தது.)
 222.   
தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் 
    
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் 
    
புணைகை விட்டுப் புனலோ டொழுகின் 
    
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட 
5
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் 
    
செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் 
    
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. 

என்பது பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல்.

சிறைக்குடி யாந்தையார்.

    (பி-ம்.) 1. ‘புணைகொளினே’, ‘புணைகொளினே’; 3. ‘புனல்கைவிட்டுப்’.

    (ப-ரை.) மாண்ட - மாட்சிமைப்பட்ட, மாரி பித்திகத்து - மழைக் காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் வார் கொழுமுகை - நீர் ஒழுகும் வளவிய அரும்பினது, செ வெரிந் உறழும் - சிவந்த புறத்தை யொத்த, கொழு கடை மழை கண் - கொழுவிய கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும்,துளி தலை தலைஇய - மழைத்துளி தன்னிடத்தே பெய்யப்பெற்ற, தளிர் அன்னோள் - தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி, தலை புணை கொளின் தலைபுணை கொள்ளும் - தெப்பத்தின் தலைப்பை இத்தோழிகைக்கொண்டால் தானும் அதன் தலைப்பைக் கைக் கொள்வாள்; கடைபுணை கொளின் கடை புணை கொள்ளும் - இவள் தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொள்ளின்தலைவியும் அதன் கடைப் பகுதியைக் கொள்வாள்; புணைகைவிட்டு - தெப்பத்தைக் கைசோர விட்டு, புனலோடுஒழுகின் - நீரோடு இவள் சென்றால், ஆண்டும் வருகுவள்போலும் - அங்கும் தலைவி வருவாள் போலும்.

     (முடிபு) தளிரன்னோள் தலைப்புணைக் கொளின்தலைப் புணைக்கொள்ளும்; கடைப்புணைக் கொளின் கடைப்புணைக் கொள்ளும்; ஒழுகின் வருகுவள் போலும்.

     (கருத்து) இத்தோழி தலைவியோடு மனமொத்த நிலையினள்.

     (வி-ரை.) தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது இது.நீராடியபோது கண்டவனாதலின் அக் காலத்து நிகழ்ச்சியையே கூறினான்.தலைப்புணை, கடைப்புணை: புணைத்தலை, புணைக்கடை என்பவைமாறி நின்றன. புணை என்றது, வாழை மரத் துண்டு, மிதக்கும் தன்மையைஉடைய மரத் துண்டுகள் போன்றவற்றை;

   
“நறுவீ நாகமு மகிலு மாரமும் 
   
 துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகி”          (சிறுபாண். 116-7);  

வேழக்கோலாற் செய்த தெப்பமெனலும் ஆம்.

     தோழி வலியின்மையிற் கைசோர்ந்து புனலோடு செல்லின் தலைவிதன்பால் வலியுளதாகவும் தோழி வழி யொழுகுவாளென்பதனால்அவ்விருவருக்கும் உள்ள ஒற்றுமை விளக்கப்பட்டது;

   
“ஒன்றித் தோன்றுந் தோழி”              (அகத்திணை. 39),  

என்பது தொல்காப்பியம்.

    மாரிக் காலத்து அரும்பியதாதலின் நீர் வார்ந்தது. பித்திகம் - பிச்சிமலர். அது மாரிக்காலத்தில் மலர்வது.

     இயல்பாகவே சிவந்த கண்ணின் கடை நீராடியதால் பின்னும் சிவப்பு மிக்கது. தலைவியினது கண்ணின் குறிப்பினால் உயிர்த் தோழியைஅறிந்தவனாதலால் அக் கண்ணைச் சிறப்பித்தான் (திருச்சிற். 18.)

     கொழு முகையினது வெரிந்த செம்மையும் தண்மையும் ஒருங்கேபெற்றது போலக் கண்ணின் கடையும் பெற்றது.

     தளிர் மென்மைக்கும் தண்மைக்கும் உவமை; மேனியின் நிறத்திற்கும் பொருந்தும்; நீராடிய அண்மையில் கண்டவனாதலின் மழைத்துளி பொழியப் பெற்ற தளிரை உவமை கூறினான்.

     தளிரன்னோளென்பதைத் தோழிக்கு ஆக்குவதும் ஒன்று.

     போலுமென்றது துணியப்படாததன்கட் செல்லும் சொல்லாக நின்றது.

     மேற்கோளாட்சி மு. தோழி உடம்பட்டு விலக்கியது (இறை. 10); பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினு மென்பதற்கு இரட்டுற மொழிதல்என்பதனால், தலைமகள் தான் விரும்பப்பட்ட தோழியாகி எமக்கு வாயில்நேர்வாளிவளெனப் பெற்று, பின் இரந்து குறையுற நினைத்தலுண்டு;அங்ஙனம் நினைந்தது (தொல். களவு. 11, இளம். ); தோழியிற் கூட்டம் (தொல். செய். 187, பேர். ); ‘தலைவன் தோழியை இரந்து பின்னிற்பலெனவலித்தது; இது தலைவி அவட்கு இனையளென்று கருதி அவளைவாயிலாகத் துணிந்தது. அன்றி, தோழி கூற்றெனின் தலைவியை அருமைகூறினன்றி இக்குறை முடிப்பலென ஏற்றுக் கொள்ளாள், தனக்குஏதமாமென்றஞ்சி; அன்றியும், தானே குறையுறுகின்றாற்கு இது கூறிப்பயந்ததூஉமின்று’ (தொல். களவு. 11, ந. )

     ஒப்புமைப் பகுதி 1. தலைப்புணை;அகநா 166:12, 266:3.

     3. புனலோ டொழுகல்: “காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள், தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலால்” (கலி. 39:1- 2.)

     5. மாரிப் பித்திகம்: குறுந். 94:1, ஒப்பு.மு.குறுந். 168:1.

     6. மழைக்கண்: குறுந். 259:4, 329:7.

     5-6 பித்திகத்தின் அரும்பு சிவந்திருத்தல்: குறுந். 94:1-2, ஒப்பு.

     கண்ணின் கடைக்குப் பித்திகம்: “மாரிப் பித்திகத் தீரிதழ் புரையும்,அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்” (அகநா. 295:19-20.)

     7. துளிதலைத் தலைஇய: அகநா. 8:15, 132:9.

     தலைவி மேனிக்குத் தளிர்; குறுந். 62:4-5, ஒப்பு.

     5-7. தலைவியின் கடைக் கண்னுக்குப் பிச்சி அரும்பும் மேனிக்குத்தளிரும்: “மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக், கொயலரு நிலையபெயலேர் மணமுகைச், செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட்,டளிரேர் மேனி மாஅ யோயே” (அகநா. 42:1-4.)

     மு. தோழிக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமை: நற். 128:3-4;திருச்சிற். 81; இறை. மேற். “ஓங்கும் பெரும்புகழ்”

(222)