மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன். (பி-ம்.) 2. ‘யென்றிவண்’, ‘யென்றிவள்’; 3. ‘நல்லோநல்ல’, ‘றில்லே’; 6. ‘அன்னையன்றோம்பிய’; 7. ‘என்னைக்’, ‘மின்ன பாலினியே’.
(ப-ரை.) தோழி, பெரு ஊர் கொண்ட ஆர்கலி விழவின் - முன்னொரு நாள் பெரிய ஊரினர் மேற்கொண்ட மிக்க ஆரவாரத்தை உடைய விழாவிற்கு, செல்வாம் செல்வாம்என்றி - போவோம் போவோமென்று கூறினாய்; அன்றுஇவண் நல்லோர் நல்ல பல - அன்று நாம் புறப்படுகையில்இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்களாகியநிமித்தங்கள் பலவாக இருந்தன; தழலும் தட்டையும் - கிளிகடி கருவிகளாகிய தழலையும் தட்டையையும், முறியும் - தழையையும், தந்து - எனக்குக் கொடுத்து, இவை நினக்குஒத்தன என - இப் பொருள்கள் உனக்கு ஏற்புடையனஎன்று சொல்லி, பொய்த்தன கூறி - பின்பு புனைந்துரைகளைக்கூறி, அன்னை ஓம்பிய ஆய்நலம் - நம்முடைய தாய்பாதுகாத்த அழகிய எம் பெண்மை நலத்தை, என்னைகொண்டான் - என்னுடைய தலைவன் கொள்ளை கொண்டான், யாம் இனி இன்னம் - யாம் இப்பொழுது அந்நலன்இழந்த இத்தகையே மாயினோம்.
(முடிபு) செல்வாம் செல்வாம் என்றி; நல்ல பல; நலம் என்னைக்கொண்டான்; யாம் இனி இன்னம்.
(கருத்து) தலைவனால் நலன் இழந்தமை நினைந்து வேறுபட்டேன்.
(வி-ரை.) தலைவியும் தோழியும் விழவின்கட் சென்று தலைவனைஎதிர்ப்பட்டு அளவளாவிய பழைய நிகழ்ச்சியைத் தலைவி நினைவுறுத்தினாள். விழாக் காலத்து வீரர்கள் குழுமுதலும் மகளிர் துணங்கை ஆடுதலும் வழக்கு; குறுந். 31.
செல்வாம் செல்வாமென்றது பன்முறை வற்புறுத்தியதைப் புலப்படுத்தியது. அன்று - புறப்பட்ட நாளில். நல்லவென்றது நல்ல நிமித்தமாகிய வாய்ச் சொல்லை; இதனைப் புள்ளென்றும் விரிச்சி என்றும் கூறுவர்; “நல்ல நல்லோர் வாய்ப்புள்” (முல்லைப்.18)தில், காலங்குறித்தது;பலவாகியும் யான் நலன் இழந்தேன் என்பது பயந்து ஒழியிசைப்பொருள்பட நின்றதெனலும் ஆம்.
தழல் - கையால் சுற்றின காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி;கவண் என்பாரும் உளர் (குறிஞ்சிப். 43, ந.)தட்டை - கிளிகடி கருவியுள் ஒரு வகை; குறுந். 193, குறிப்புரை.
முறி - தழை; என்றது தழையால் ஆகிய உடையை; தளிர் எனலுமாம்; விளா, புன்கு முதலியவற்றின் தளிர்களை மகளிர் அப்பிக் கொள்ளுதல் வழக்காதலின் அவற்றை அளித்தான்;
| “வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா” (முருகு. 37); |
| “பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி |
| சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி” (நற். 9:5-6); |
| “எழிற்றகை யிளமுலை பொலியப் |
| பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே” (ஐங். 341:2-3.) |
பொய்த்தன கூறல் என்றது தலைவன் பொய் பாராட்டியதை.
புறத்தே செல்லற்க என்று தகைந்தும், பெருங்காவல் புரிந்தும்தாயர் பாதுகாத்தமையின் அன்னை ஓம்பிய வாய்நலம் என்றாள். ஆய்நலம் - பலரால் சிறப்பித்துக் கூறப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படும்அழகெனலும் ஆம்; “பலராய் மாண்கவின்” (அகநா. 98:12.)
இன்னமென்றாள் நலமிழந்த நிலையைச் சுட்டி.
“தலைவன் நின்னை வரைந்து கொள்ளுதற் பொருட்டன்றே பொருட்குப் பிரிந்தான்; நீ கவலுதல் நன்றன்றே” என்று தோழி வற்புறுத்த, “நின் சொல்லைக் கேட்டு முன்னர் என் நலன் இழந்தேன்; மீண்டும் நீ வற்புறுத்துகின்றாய்!” என்று தலைவி கூறினாள்.
‘நல்லோம் நல்ல’ என்ற பாடத்திற்குப் பின்வருமாறு பொருள்கொள்க:-
வரைவிடை வேறுபட்ட கிழத்தியை நோக்கி, “நின் வேறுபாடுபுறத்தே தோற்றாது மறைத்து விழாக் காண வருதி” என்று கூறியதோழிக்கு, “விழாக்காணச் செல்வோம், செல்வோமென்கின்றாய். முன்புயாம் நலன் இழவாமல் நல்லோமாய் இருந்தோம்; எம்பால் நல்லியல்புகள்பல இருந்தன; இப்பொழுதோ எம் நலத்தைத் தலைவன் கொண்டான்;அதனால் அழகிழந்து புறத்தே தோற்றும் வேறுபாடுடையே னாயினேன்;அதனை எங்ஙனம் மறைப்பேன்!” என்று தலைவி கூறினாள்.
ஒப்புமைப் பகுதி 1. பேரூர் கொண்ட விழவு: (குறுந். 41:2); “ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்” (முருகு. 220); “அகன்றலைப் பேரூர்ச்,சாறு” (பொருந. 1-2.)
ஆர்கலி விழவு; மதுரைக். 428; கலி. 5:10; அகநா. 4:14.
4. தட்டை: குறுந். 193:3, ஒப்பு:நற். 147:8; ஐங். 285:2; அகநா. 32:6,388:2.
தழலுந் தட்டையும்: “தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்” (குறிஞ்சிப். 43); “தட்டை குளிர் தழலைத் தாங்கி” (கந்த. வள்ளி. 52.)
தழல் தட்டை முறி: “தழலை வாங்கியுந் தட்டை யோச்சியும்,அழலேர் செயலை யந்தழை யசைஇயும்” (அகநா. 188:11-2.)
6. அன்னை ஓம்பிய நலம்: “அன்னை காக்குந் தொன்னலம்”(நற். 23:4); “யாய்நயந் தெடுத்த வாய்நலம்” (ஐங். 384:3); “தாயோம்பாய்நலம்”, “ஓம்பிய, நலம்புனை யுதவியோ வுடையேன் மன்னே” (அகநா. 146:13, 195:9-10.)
தலைவனைத் தலைவி என்னையென்றல்: குறுந். 24:2, ஒப்பு.
இன்னும்: அகநா. 128:6; புறநா. 141:9.
6-7. என்னை நலங்கொண்டான்: ஐங். 24:3-5.
5-7. . தலைவனால் நலன் இழத்தல்: நற். 36:4-5; அகநா. 146:9-13; பெருங். 3.6:133.
(223)