(வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியும் தலைவனை நோக்கி,“இதுகாறும் நின் விருப்பப்படியே ஒழுகி வந்த யாம் செய்த நன்றியைமறவாது, எம் விருப்பத்திற்கு இணங்க விரைவில் வரைந்து கொள்வாயாக”என்று தோழி கூறியது.)
 225.    
கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற் 
    
றினைபிடி யுண்ணும் பெருங்கன் னாட 
    
கெட்டிடத் துவந்த வுதவி கட்டில் 
    
வீறுபெற்று மறந்த மன்னன் போல 
5
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க் 
    
கலிமயிற் கலாவத் தன்னவிவள் 
    
ஒலிமென் கூந்த லுரியவா நினக்கே. 

என்பது வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் (பி-ம். பிரிவார்க்குத்) தோழி சொல்லியது.

கபிலர்.

    (பி-ம்.) 2. ‘றிணைபிடி’, ‘பெருங்கணணாட’; 3. ‘துலந்த’; 5. மறந்தனை யாயின்’, ‘மறந்தமையாயின்’; 7. ‘னினக்கே’.

     (ப-ரை.) கன்று தன் பயம் முலை மாந்த - யானைக்கன்று தனது பாலுள்ள முலைகுடித்து நிற்ப, முன்றில் தினை - வீட்டின் முன்னிடத்துள்ள தினைப் பயிரை, பிடி உண்ணும் - பெண் யானை உண்ணுதற்கு இடமாகிய, பெரு கல் நாட - பெரிய மலைகளை உடைய நாடனே, கெட்ட இடத்துஉவந்த உதவி - தான் வறுமையுற்ற காலத்துப் பிறரால்பெற்று மகிழ்ந்த உதவியை, கட்டில் வீறு பெற்று - அரசுகட்டில ாகிய சிறப்பைப் பெற்று, மறந்த மன்னன் போல - மறந்து விட்ட அரசனைப் போல, நன்றி மறந்து - நீ யாம்செய்த நன்றியை மறந்து, அமையாய் ஆயின் - பொருந்தாயாகி அதனை நினைந்து வரைந்து கொள்வாயாயின்,இவள் - இத்தலைவியினுடைய, மெல்சீர்கலி மயில் கலாவத்துஅன்ன - மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும்மயிலினது பீலியைப் போன்ற, ஒலி மெல் கூந்தல் - தழைத்தமெல்லிய கூந்தல் பகுதிகள், நினக்கே உரிய ஆம் - நினக்கேஉரிமை உடையனவாகும்.

     (முடிபு) நாட, நன்றி மறந்து அமையாயாயின், இவள் கூந்தல் நினக்கே உரியவாம்.

     (கருத்து) நீ யாம் புரிந்த நன்றியை மறவாது விரைவில் வரைந்துகொள்ள வேண்டும்.

     (வி-ரை.) கெட்ட இடம் கெட்டிடமாயிற்று; தொகுத்தல் விகாரம்.கட்டில் வீறு - அரசு கட்டிலாற் பெற்ற சிறப்பெனலுமாம்; கட்டில் - சிங்காதனம். நன்றி மறந்து அமையாயாயினன் என்றது, நன்றி மறவாதுஅமைவாயாயின் என்னும் பொருள் தந்தது.

    தான் நல்ல நிலைக்கு வருந்துணையும் பிறர் உதவியை உவந்துபின்அதனை மறந்தது போல, நீ நின் விருப்பத்தை நிறைவேற்றும் வரையில் எம்மாற் செய்யப் பெற்ற உதவிகளை ஏற்று இப்போது எம்மைமறவாதொழிக என்றாள்.

    கன்று தன் முலைமாந்திக் கொண்டே இருப்பத் தன் பசியை நீக்குதற்கும் அக் கன்றுக்குரிய பாலைப் பெறுதற்கும் தினையைப் பிடி உண்டது போல, நீயும் யாங்கள் நின் வரவை எதிர்நோக்கி மகிழ்ந்திருக்குங்கால் நின் கடப்பாட்டையும் இவளை வரைவதையும் ஒருங்கே செய்வித்தற்குக் கருவியாகிய பொருளை ஈட்டி வருதற்குரியை என்பது குறிப்பு.

    தலைவியின் கூந்தலில் தலைவன் துயின்று இன்புறுதலின் அதனைஅவனுக்கு உரிமைப்படுத்தினாள். கூந்தல் உரியவாமெனப் பன்மைவாசகம் படக் கூறினாள், குழல் முதலிய ஐந்தையும் நினைந்து (அகநா. 7:2,உரை.)

     மேற்கோளாட்சி மு.கருப்பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும்பொருட்டாதலே அன்றி, அக்கருப் பொருள் தன்னுள்ளே தோன்றும்பொருளும் உள; ‘இதனுள், தான் கெட்டவிடத்து உதவின உதவியைஅரச உரிமை எய்திய மன்னன் மறந்தாற் போல நீ இரந்து துயருற்றகாலத்து யான் தலைவியை நின்னோடு கூட்டிய செய்ந்நன்றியை மறவாதுஇன்று நீ வரைந்து கொள்வாயாயின் இவள் கூந்தல் நினக்குரிய வென்றவழி, உவமையும் பொருளும் ஒத்து முடிந்தமையின், முன் நின்றநாடவென்பது உள்ளுறை உவமமன்றாய் இறைச்சியாம்; என்னை? தன்கன்றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்கு உயிரைக் கொடுக்கின்ற தினையைத்தான் உண்டு அழிவு செய்கின்றாற்போல, நீ நின் கருமம் சிதையாமல்பார்த்து எமக்கு உயிராகிய இவளைத் துயர் உறுத்தி எம்மை இறந்துபடுவித்தல் ஆகாதென்று உவமை எய்திற்றேனும், பின்னர் நின்றபொருளோடு இயையாது இவ்வுவமம் உள்ளுறையுற்றுப் பொருள்பயவாது இறைச்சியாகிய நாடனென்பதனுள்ளே வேறோர் பொருள்தோற்றுவித்து நின்றதேயாதலின். முலைமாந்த என்றது, தன் கருமம்சிதையாமல் பார்த்தென்னும் துணையன்றி உள்ளுறையுவமப் பொருளைமுற்ற உணர்த்தாமை உணர்க’ (தொல். பொருள்.36, ந.); கருப்பொருள்பிறிதோர் பொருட்கு உபகாரப்படுதலே அன்றி அக் கருப்பொருள்தன்னுள்ளே தோன்றும் பொருளுமுள; அஃது உள்ளுறை உவமமன்று;இறைச்சி என்று கொள்க (மாறன். பொருளணி. 91.)

     ஒப்புமைப் பகுதி 3. கட்டில்: குறுந். 359:3; மலைபடு. 550; பதிற். 79:14.

     நன்றி மறத்தல்: கலி. 34:4-5, 10.

     6. கலிமயிற் கலாவம்: அகநா. 152:14.

     7. ஒலிமென் கூந்தல்: குறிஞ்சிப். 2; நற். 6:10, 141:12, 197:6,260:8, 295:2, 313:4; கலி. 64:6; புறநா. 109:16, 306:3.

     6-7. கூந்தலுக்கு மயிற்கலாவம்: “அணிகிளர் கலாவ மைதுவிரித்தியலும் மணிபுரை யெருத்தின் மஞ்ஞை போலநின், வீபெய் கூந்தல்வீசுவளி யுளர”, “கலிமயிற் கலாவத் தன்னவிவள், ஒலிமென் கூந்தல்” (நற். 264:3-5, 265:8-9); “விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே, பசும்பொ னவிரிழை பைய நிழற்றக், கரைசேர் மருத மேறிப், பண்ணை பாய்வோடண்ணறுங் கதுப்பே” (ஐங். 74); “கலிமயிற் கலாவங் கால் குவித்தன்ன, ஒலிமென் கூந்தல்” (புறநா. 146:8-9.)

தலைவியின் கூந்தல் தலைவனுக்கே உரியது: “ஒரூஉநீ யெங்கூந்தல்கொள்ளல்”, “யாரிவ னெங்கூந்தல் கொள்வான்” (கலி.87:1, 89:1); “கூந்தற் கிழவரை” (புறநா. 113:9); “கூந்த றொடேல்” (சீவக. 1229.)

(225)